புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு வாழ்வாதாரம் தேடி வரும் கதையின் நாயகனான சத்யா ( ஷேன் நிஹாம்) இங்கு கடினமாக உழைத்து பொருளாதார நிலையில் தன்னிறைவு பெற்று, தான் விரும்பிய பெண்ணை பெற்றோரின் சம்மதத்துடன் சொந்த ஊரில் உற்றார்- உறவினர்கள் – நண்பர்கள்- முன்னிலையில் பாரம்பரியமான முறையில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.
சத்யாவை திருமணம் செய்து கொள்ளும் மீரா ( நிஹாரிகா) தன் தந்தையுடன் புதுக்கோட்டைக்கு வருகை தருகிறார். விடிந்தால் திருமணம் என்று நிலையில் உடனடியாக உன்னை சந்திக்க வேண்டும் என மீரா, சத்யாவிடம் போனில் சொல்ல.. பெற்றோர்களை சமாதானம் செய்துவிட்டு மீராவை சந்திக்க சத்யா புறப்படுகிறார். வழியில் துரைசிங்கம் எனும் நபரை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே சிறிய அளவில் சச்சரவு ஏற்படுகிறது.
இதில் வருத்தம் தெரிவிக்கும் சத்யா.. அங்கிருந்து புறப்படும் போது தன் கோபத்தை வெளிப்பாடாக நடுவிரலை உயர்த்தி காட்டுகிறார். இதனால் துரைசிங்கம் சத்யா மீது ஆத்திரம் கொள்கிறார். இந்தத் தருணத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றினை ஏற்படுத்துகிறார் சத்யா. அந்த விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பாதிக்கப்படுகிறார்.
அந்தக் கர்ப்பிணிப் பெண் துரை சிங்கத்தின் மனைவி என்பது பின்னர் தெரிய வருகிறது. இதற்காக துரை சிங்கத்திடம் மன்னிப்பு கேட்கிறார் சத்யா. ஆனால் சத்யா மன்னிக்கும் மனநிலையில் இல்லை. இந்தத் தருணத்தில் காவல்துறை இந்த பிரச்சனையில் தலையிடுகிறது.
இதனால் விபத்து ஏற்படுத்தியதாக சத்யா மீது வழக்கு பதிவு ஆகிறது. நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் சத்யாவிற்கு.. நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறது. அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
சத்யா- துரைசிங்கம் என்ற இரண்டு கதாபாத்திரங்களையும், கோபக்கார இளைஞர்களாக இயக்குநர் உருவாக்கியிருக்கிறார். ஆனால் இருவரது கோபத்திலும் முழுமையான நியாயத்தை கற்பிக்க இயக்குநர் தவறி இருக்கிறார். ஒரு விபத்தில் இருவரையும் சந்திக்க வைத்து, இந்த இரண்டு ஆத்திரக்காரர்களையும் அவர்களுடைய வாழ்வியலையும் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். இதன் பின்னணியில் சதி, சூழ்ச்சி ஆகிய ஆகிய கமர்சியல் அம்சங்களையும் கச்சிதமாக இணைத்து வழங்கியிருக்கிறார் இயக்குநர்.
சத்யாவின் காதலியாக நடித்திருக்கும் தெலுங்கு நடிகை நிஹாரிகா – தமிழில் அறிமுகம் என்றாலும்.. அன்னிய முகமாக தெரிகிறது. அழகாக இருக்கிறார். இளமையாக இருக்கிறார். நேர்த்தியாக நடனமாடுகிறார். நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை வழக்கம் போல் கோட்டை விடுகிறார்.
துரை சிங்கத்தின் மனைவி கல்யாணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா வழக்கம்போல் சிறப்பாக நடித்திருக்கிறார். சத்யாவின் உறவினராக நடித்திருக்கும் கருணாசின் நடிப்பும் சிறப்பு. வில்லனாக நடித்திருக்கும் மணிமாறன் மற்றும் சுப்பர் சுப்பராயன் ஆகியோர் இருவரும் திரையில் தங்கள் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை ஆத்திரப்பட வைக்கிறார்கள்.
சத்யாவாக நடித்திருக்கும் ஷேன் நிஹாம் – பல இடங்களில் பிரத்யேக உடல் மொழியால் ரசிகர்களின் கவனத்தை கவர்கிறார். அவருடைய மலையாள வாசம் வீசும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு என சொல்ல முடியாது.
படத்தில் விபத்து நிகழும் தருணத்திலிருந்து தான் ரசிகர்கள் ஓரளவு சுறுசுறுப்பாகிறார்கள். உச்சகட்ட காட்சியை நோக்கி பயணிக்கும் போது இயக்குநர் ரசிகர்களை தன்வசப்படுத்துகிறார்.
பிரசன்னா எஸ். குமாரின் ஒளிப்பதிவு + சாம் சிஎஸ்ஸின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் படத்தை ஓரளவுக்கு பட மாளிகையில் அமர்ந்து ரசிக்க வைக்கிறது. இதற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கலாம். எக்சன் காட்சிகளிலும் கடினமாக படக்குழுவினர் உழைத்திருக்கிறார்கள்.