பாலாவின் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வந்திருக்கும் படம் வணங்கான். மிகுந்த எதிர்பார்ப்போடு மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வணங்கான் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்பதை பார்ப்போம்.
தனது தங்கையுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் அருண்விஜய் சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டவர். அதே சமயம் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்கும் சமூக சிந்தனை உள்ள ஒரு மனிதனாக வாழும் அருண் விஜய் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் காவலாளியாக இருக்கிறார். அங்கு இருக்கும் மாற்றுத்திறனாளிடம் மிகவும் பாசமாகவும் பழகுகிறார்.
ஆனால் அங்கு நடக்கும் கொலைகளுக்கு தான்தான் காரணம் என்று சரண் அடைகிறார். அருண்விஜய் தான் கொலை செய்தாரா ? இல்லை வேறு யாராவது கொலை செய்தார்களா ? அருண்விஜய் கொலை செய்தால் அதற்கான காரணம் என்ன ? மற்றவர்களுக்காக கொலை செய்தால் இவர் ஏன் குற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் ? இந்த கேள்விக்கான விடை காண பாருங்கள் வணங்கான்.
சூர்யா நடிப்பதாக இருந்த இந்தப் படம் சில காரணங்களால் அருண்விஜய் கைவசம் வந்தது. இயக்குனர் பாலா சூர்யாவை மனதில் வைத்து எழுதிய கதைக்கு அருண்விஜய் பாலாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா என்று பார்த்தால் இயக்குனர் பாலாவும் ஜெயித்திருக்கிறார். நடிகர் அருண்விஜய்யும் ஜெயித்திருக்கிறார். ஒரு சிறந்த நடிகர் அருண்விஜய் என்பது அவர் நடித்த படங்களின் மூலம் நாம் அறிந்திருப்போம். ஆனால் அவருக்கு தன் முழு திறமையை காட்ட ஒரு படம் கிடைக்காமல் மிகவும் திணறிக் கொண்டிருந்தார். அந்தத் திணறலை வணங்கான் படத்தின் மூலம் இயக்குனர் பாலா நிறைவேற்றி உள்ளார். பாலாவின் எதிர்பார்ப்பையும் அருண்விஜய் நிறைவேற்றி உள்ளார். இருவருக்கும் இந்த படம் ஒரு மைல் கல்.
மற்ற நடிகர் நடிகைகளும் ரோஷிணி பிரகாஷ், ரிதா ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருந்தது.. அதே போல் சாயா தேவி, பாலசிவாஜி, சண்முகராஜன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதையோடு ஒன்றிப்போகிறது.. கௌரவ வேடத்தில் தோன்றிய மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரங்களும் சிறப்பு.
இயக்குநர் பாலா எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு முதல் பாராட்டுக்கள். சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சுட்டிக்காட்டி, அதற்கு தண்டனை இப்படித்தான் இருக்க வேண்டும் என திரைக்கதையை நேர்த்தியாக கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருந்தது.. பாலாவின் வழக்கமான படங்களில் இந்தப் படம் மாறுபட்டு இருந்தாலும் வணங்கான் படத்தின் மூலம் நான் இன்னும் பாலா தான் என்று நிரூபித்துள்ளார்.
வணங்கான்– மக்கள் வணங்கி ஏற்றுக் கொண்ட படம்