spot_img
HomeCinema Reviewகாதலிக்க நேரமில்லை - விமர்சனம்

காதலிக்க நேரமில்லை – விமர்சனம்

ஸ்ரேயா (நித்யா மேனன்) சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டடக்கலை வடிவமைப்பு பொறியாளராக பணியாற்றுகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன் கணவரின் கருப்பு முகத்தை நேரில் கண்டவுடன் திருமணத்தை நிறுத்தி விடுகிறார். அதன் பிறகு மீண்டும் ஒரு ஆணை திருமணம் செய்து கொள்ள விரும்பாமல்.. ஆணை திருமணம் செய்து கொள்வது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தானே.. என எண்ணி.. உயிரணு தானம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கிறார்.  இவ்விடயத்தில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி செயன்முறை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார் ஸ்ரேயா. இதன் பிறகு பணி நிமித்தம் காரணமாக சென்னையில் இருந்து பெங்களூரூ செல்கிறார்.

பெங்களூருவில் சித்தார்த் (ரவி மோகன்) தனியார் நிறுவனத்தில் கட்டிடக்கலை வடிவமைப்பு பொறியாளராக பணியாற்றுகிறார். இவருக்கும், இவருடைய காதலியான பானுவிற்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிடப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில் குழந்தையை பெற்றுக் கொள்வது பற்றிய சித்தார்த்தின் பார்வை காரணமாக திருமண நிச்சயத்தார்த்த நிகழ்வில் பங்குபற்றாமல் தவிர்த்து விடுகிறார் பானு. தன் காதலி தனக்கு துரோகம் செய்துவிட்டதை நினைத்து  வேதனைப்படுகிறார் சித்தார்த்.

அத்துடன் தன் நண்பர்களான சேது (வினய் ராய்) மற்றும் கௌடா (யோகி பாபு) ஆகியோருடன் இணைந்து, அவர்களின் ஆலோசனையின் பேரில் தன்னுடைய உயிரணுவை உயிரணு வங்கியில் சேமிக்கிறார்.

இந்த நிலையில் பெங்களூரூ செல்லும் ஸ்ரேயா, சித்தார்த்தை சந்திக்கிறார். ஸ்ரேயா மீது சித்தார்த்திற்கும், சித்தார்த் மீது ஸ்ரேயாவிற்கும் இனம்புரியாத உணர்வு ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் கதை.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி – ஸ்ரேயா கதாபாத்திரத்தை உளவியல் ரீதியான வலிமை மிக்க பெண் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்டு அதனை வளர்க்கும் ஒற்றைப் பெற்றோராக வடிவமைத்திருப்பதும்… அதனால் ஏற்படும் சங்கடங்களை எதிர்கொள்வது குறித்தும் விவரித்திருக்கிறார்.

சித்தார்த் கதாபாத்திரத்தையும் நேர்த்தியாகவே உருவாக்கி இருக்கிறார். ஆண்கள் பக்குவப்பட பக்குவப்படத்தான் விட்டுக்கொடுப்பார்கள் என்பதனை இயல்பாக சொல்லி இருக்கிறார்.

சேது கதாபாத்திரத்தை தன் பாலின ஈர்ப்பாளராக உருவாக்கியதுடன் அவருக்கான திருமணத்தை காட்சிப்படுத்தியதையும் வரவேற்கலாம்.

உயிரணு வங்கி-  உயிரணு தானம் குறித்த இன்றைய தலைமுறை பெண்களின் பார்வையை பதிவு செய்ததற்காகவும் பாராட்டலாம்.

ஸ்ரேயா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நித்யா மேனன் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை ஆக்கிரமிக்கிறார். ரவி மோகன் நீண்ட நாட்கள் கழித்து தன்னுடைய அனுபவமிக்க இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்கிறார்.

நித்யா மேனன் – ரவி மோகன் – சிறுவன் ரோஹன் சிங் இடையேயான காட்சிகள் ரசிக்கத்தக்கது. சுவாரஸ்யமானது.

பெங்களூரூ – சென்னை – உள்ளரங்கம் என ஒவ்வொரு காட்சியிலும் தன் அழகான கமெரா கண்களால் காட்சிப்படுத்திய படத்தின் ஒளிப்பதிவாளருக்கு பூங்கொத்து கொடுத்து கை வலிக்க கரம் குலுக்கி பாராட்டு தெரிவிக்கலாம்.

‘என்னை இழு இழு என இழுக்குதடி..’ என்ற பாடல் மட்டும் இல்லாமல் அனைத்து பாடல்களிலும், பின்னணி இசையிலும் தான் ‘இசைப்புயல்’ தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் ஒஸ்கார் நாயகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img