ராமாயணம்..இந்த கதையை நாம் சிறுவயது முதல் கேட்டிருப்போம். பார்த்திருப்போம். படித்திருப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே ராமாயணத்தை கார்ட்டூன் வடிவில் மிக அழகாக குழந்தைகளுடன் நாமும் ரசிக்கும் வண்ணம் வெளிவந்திருக்கிறது. இலங்கைக்கு தூக்கி போன ராவணனிடமிருந்து சீதையை மீட்க ராமர் போராடும் கதைதான் இந்த படத்தின் கதையும்.
இந்து மதத்தின் கடவுளாக போற்றப்படும் மகாவிஷ்ணுவின் ராமர் அவதாரத்தையும், அந்த அவதார நோக்கத்தின் வாழ்வியலையும் இந்த படம் விவரிக்கிறது.
இந்திய மக்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மக்களால் போற்றப்படும் ராமாயணம் எனும் புராண இதிகாசத்தை தழுவி தயாராகி இருக்கும் இப்படத்தின் கதை இயங்குபட தொழில்நுட்பத்தில் நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கதாபாத்திரத்தின் தோற்றம், கதை நிகழ்ந்த நிலவியல் பின்னணி, போர்க்கள காட்சி, கதாபாத்திரத்தின் உரையாடல்களுக்கு இடையேயான உணர்வு மாற்றம், கதாபாத்திர தோற்றத்திற்கான ஆடை வடிவமைப்பு, வண்ணங்கள், என ஒவ்வொரு விடயத்தையும் நுட்பமாக சர்வதேச தரத்திற்கு செதுக்கியிருக்கிறார்கள். கதையின் ஓட்டத்தையும் , கதை உணர்த்தும் நீதியையும் பிசகாமல் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்கள்.
குறிப்பாக இளவரசராக இருக்கும் ராமரின் பிறப்பு, மிதிலையில் சீதையை சந்திக்கும் தருணம், வனவாசம், சுக்ரீவன் நட்பு, ராவணன் சீதையை கடத்துவது, ஜடாயு போரிடுவது, சீதை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பது, இலங்கைக்கு சேது பாலம் அமைப்பது, போர்க்களத்தில் ராவணனை வீழ்த்துவது, சீதையை மீட்பது, விபீடணனுக்கு இலங்கையை ஆளும் உரிமையை வழங்குவது என ஒவ்வொரு சம்பவங்களும் நேர்த்தியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்கள் கதையை உணர்வுபூர்வமாக விவரித்திருப்பதும் பாராட்டத்தக்கது.
ராமாயணம் தொடர்பாக அண்மையில் வெளியான ஆதி புருஷ் மற்றும் ராம் சேது ஆகிய இரண்டு திரைப்படங்களும் செய்த தவற்றை.. இந்த இயங்குபட திரைப்படத்தில் இல்லாததால் பார்வையாளர்களால் எந்தவித குழப்பமும் இன்றி ரசிக்க முடிகிறது.
பாடல்கள், பின்னணி இசை இவை இரண்டும் ரசிகர்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது.
கார்ட்டூன் படம் என்பதால் அனுமார் முதல் கும்பகர்ணன் வரை ராஜ உருவங்களை அழகாக கார்ட்டூன் வடிவமைத்திருக்கிறார்கள். சஞ்சீவி மலையை அனுமான் கொண்டு வருவது மிக யதார்த்தமாகவும் மக்கள் கைதட்டும் அளவுக்கு சிறப்பாகவும் எடுத்திருக்கிறார்கள். ராமாயணம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அதேபோலத்தான் இந்த ராமாயணமும் சலிக்கவில்லை.