மணிகண்டன், சான்வே, மோகனா, ஆர் சுந்தர்ராஜன் நடித்து வெளி வந்திருக்கும் படம் குடும்பஸ்தன். காதலித்து கல்யாணம் செய்யும் மணிகண்டன் டிசைன் பிரிவில் பணியாற்றுகிறார். அந்தப் பணியில் தன் நண்பனை அடித்த கஷ்டமரை திருப்பி அடித்து விடுகிறார். முதலாளி பாலாஜி சக்திவேல் ஏன் அடித்தாய்என்று கேட்க அவரையும் அடித்து விடுகிறார் மணிகண்டன்.
அதனால் வேலை போய்விடுகிறது. வேலை போனது வீட்டுக்கு தெரியாமல் இருக்க கடன்வாங்கி சமாளிக்கிறார். கடனை கட்ட இன்னொரு கடன் வாங்க இதனால் ஏற்படும் பிரச்சனைகளும் மிகவும் எதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் சினிமா தனம் இல்லாமல் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர்.
நவீன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிகண்டன், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை மீண்டும் ஒரு முறை வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நிரூபித்திருக்கிறார்.
வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகை சான்வீ மேக்னா, சிறப்பான நடிப்பை வழங்கவில்லை என்றாலும், அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், தனக்கே உரிய தனித்துவமான அனுபவத்துடன் கூடிய நடிப்பை வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.
இவர்களைக் கடந்து சஷ்டியப்த பூர்த்தி திருமணத்தை செய்து கொள்ளும் ஆர். சுந்தர்ராஜன், கனகம்மா தம்பதியினர் செய்யும் சேட்டைகள் உற்சாகமான காட்சி மொழி கொமடி கலாட்டா.
மாண்ட்டேஜ் காட்சிகள் அதிகம் இருப்பதால் கதையை மீறி ஒளிப்பதிவாளர் துருத்திக் கொண்டு தனியே தெரிகிறார்.
ஷான் ரோல்டனின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை படமாளிகையில் உற்சாகமாக கரவொலி எழுப்பத் தூண்டுகிறது. குறிப்பாக ‘ஜீரோ பேலன்ஸ் ஹீரோ’ பாடல் கவனம் பெறுகிறது.
ஒரு நடுத்தர குடும்பத்தின் கஷ்ட நஷ்டங்களை மிக அழகாக நகைச்சுவையுடன் சொல்லி இருக்கும் இயக்குனருக்கு நமது பாராட்டுக்கள்.