பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ராஜ பீமா. தேவர் பிலிம்ஸ் மிருகங்களை வைத்து பல படங்களை தயாரித்து இருக்கிறார்கள். அதில் பல படங்கள் வெள்ளிவிழா கண்டிருக்கின்றன. அதன் பிறகு தேனாண்டாள் பிலிம்ஸ் மறைந்த ராமநாராயணன் அவர்கள் மிருகங்களை வைத்து பல படங்களை தயாரிக்க இயக்கி வெற்றிக்கொடி நாட்டி இருக்கின்றார்.
அந்த வகையில் வெகு காலத்திற்குப் பிறகு மிருகங்களை வைத்து அதுவும் யானையை முதன்மை கதாபாத்திரமாக்கி வெளிவந்திருக்கும் படம் ராஜ பீமா. கதைக்களம் தாயை இழந்த மகன் சோகத்தில் இருக்கும்போது அவன் சோகத்தை மறைக்க பீமா என்ற யானை வந்து சேர்கிறது. அந்த யானையை சகோதரன் போல் பாவிக்கும் நாயகன் அதன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்.
யானைக்கு மதம் பிடித்திருக்கிறது என்று காட்டு இலக்க அதிகாரிகள் யானையை கொண்டு செல்ல நாயகன் அங்கு சென்று பார்த்தால் பீமாவுக்கு பதிலாக வேறு யானையை காட்டுகின்றனர். பீமா என்ன ஆனது ? நாயகன் பீமாவை எப்படி கண்டுபிடிக்கிறார் ? இதுவே மீதி கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஆரவ், ஆக்ஷன், நடிப்பு இரண்டிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அவரது காதலி உடனான காட்சிகளை விட, அவர் வளர்க்கும் யானை உடனான காட்சிகள் அதிகமாக இருப்பதால், அவருக்கும் யானைக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் ஆஷிமா நர்வால், ஆரவை காதலிப்பது, ஒரு பாடல், சில காட்சிகள் என்று தனக்கு கொடுக்கப்பட்ட குறைவான வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
வனத்துறை அமைச்சரிடம் வேலைக்குச் சேரும் துர்கா பாத்திரத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். பீமாவை மீட்க உதவுவதோடு, யானைகளின் தந்தங்களைக் கடத்தும் கும்பலையும் கண்டுபிடிப்பதற்கும் உதவும் கதாபாத்திரம் அவருக்கு.
வில்லத்தனத்தில் வித்தியாசமான கோணத்தைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார். செண்டிமெண்ட் காட்சிகளில் அவ்வப்போது சோகமான வசனங்களை பேசி செல்கிறார் நாசர். ஓவியா, ஒரு பாடலுக்கு வந்து கலர்ஃபுல் உடைகளில், கவர்ச்சி காட்டுகிறார். யோகிபாபுவின் காமெடி பெரிதாக படத்தில் எடுபடவில்லை.
இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஒகே. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ் குமார் கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கிறார். யானையின் காட்சிகளை சிறுவர்களுக்கு பிடித்த வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மனிதனுக்கும் விலங்குக்குமான பிணைப்பை மையப்படுத்தி அதிலும் யானையை மையமாக கொண்ட படம்.விலங்குகளிடம் இருக்கும் அன்பையும், மனிதர்களுக்கு செல்ல பிராணிகளிடத்தில் இருக்கும் அன்பையும் வெளிக்காட்டும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார் நரேஷ் சம்பத்.