நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தண்டேல். மீனவர் தலைவன் பெயர் தான் தண்டேல். ஒரு கிராமத்திலிருந்து மீனவர்கள் குஜராத்துக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து அதன் வருமானத்தின் மூலம் தங்கள் குடும்பத்தை காப்பாற்றுகின்றனர். ஒன்பது மாதம் கடல் வாழ்க்கை மூன்று மாதம் தரை வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மீனவர்கள் மத்தியில் நாகசைதன்யாவுக்கும் சாய் பல்லவிக்கும் காதல்.
சாய் பல்லவி கடல் வாழ்க்கை விட்டு விட்டு தரை வாழ்க்கைக்கு நாகசைதன்யாவை வர சொல்ல அவர் பேச்சைக் கேட்காத நாகசைதன்யா கடலுக்கு செல்ல புயல் காற்றில் படகுகள் பாகிஸ்தான் எல்லைக்கு செல்ல கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்கள் விடுதலை ? நாக சைதன்யாவிற்கும் சாய் பல்லவிக்கும் திருமணம் ஆனதா என்பதை மீதி கதை..
காதலிக்கும் காதலனாக காதலை கொட்டுகிறார் நாகசைதன்யா. அதே சமயம் மீனவ தலைவனாக தன் கூட்டாளிக்காக போராடும் நண்பனாக, தலைவனாக எதார்த்தம் ஒரு போராளியாக மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். பாகிஸ்தான் சிறையில் தன் நாட்டுக்கு அவமானம் என்பது தெரிந்தவுடன் பொங்கி எழும் இந்தியனாக நாட்டுபற்று நாயகனாக அசத்துகிறார்.
சாய் பல்லவி- சத்யா கதாபாத்திரத்திற்காக தன் தனித்துவமான நடிப்பை வழங்கி இருந்தாலும், காதலனிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் குணாதிசயம் கொண்ட பெண்ணாக நடிப்பதில் விசேஷ கவனம் செலுத்தி இருக்கிறார். இது பார்வையாளர்களை கவர்கிறது. அதில் இந்த கதாபாத்திரத்தின் தனித்துவமும் தெரிகிறது.
படத்தின் திரைக்கதை பலவீனமாக இருந்தாலும், ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக முதல் பாதியில் வரும் பாடல்கள் தனி கவனம் பெறுகிறது.
நாக சைதன்யா- சாய் பல்லவி இவர்களை கடந்து கதையை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன், திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், மைம் கோபி ஆகியோர்களின் நடிப்பும் சிறப்பு.
உண்மை சம்பவத்தை தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் லாஜிக் மீறல்கள் எக்கச்சக்கம். குறிப்பாக பாகிஸ்தான் சிறையில் நடைபெறும் சம்பவங்கள்.
தண்டேல்-காதலே எங்கள் தேசிய கீதம்