spot_img
HomeNews"ஜென்டில்வுமன் " திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

“ஜென்டில்வுமன் ” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Komala Hari Pictures & One Drop Ocean Pictures தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜென்டில்வுமன் ”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர் பேசியதாவது…
ஸ்கூலில் பேசக் கூப்பிட்டாலே ஓடிப்போயிடுவோம் இந்த மேடை பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தின் கதை கேட்டவுடனே படு இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. இயக்குநர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்தார். எந்த செலவும் இழுத்து விடவில்லை, மிக அழகாக படத்தை எடுத்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.

 

One Drop Ocean Pictures சார்பில் தயாரிப்பாளர் லியோ பேசியதாவது..
ஜென்டில்வுமன் கதையை ஜோஷ்வா சொன்ன போது, இப்படத்தில் அழுத்தமான கதை இருப்பது புரிந்தது. மிகத் தெளிவாக சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து கதையிலிருந்தது. இந்தக்கதை பிடித்து எதையும் யோசிக்காமல் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் இருவருக்கும் நன்றி. இப்படத்தைப் புரிந்து கொண்டு, உழைப்பைத் தந்த கலைஞர்கள், நடிகர்கள் லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி. லிஜோமோல் ஜெய்பீமில் பார்த்ததை விட, மிகச்சிறப்பாக நடித்துள்ளார். லாஸ்லியாவுக்கு மிக அழுத்தமான பாத்திரம், ஒரு காட்சியில் லிஜோமோல், லாஸ்லியா இருவரும் கலக்கியிருக்கிறார்கள். வசனம் பாடல் வரிகள் யுகபாராதி அண்ணா, அவர் இப்படத்திற்குக் கிடைத்தது வரம். எந்த சாதியிலும் ஆணாதிக்கம் இன்றும் இருக்கிறது, அதைச் செருப்பால் அடித்த மாதிரி மிக அழுத்தமாகச் சொல்லியுள்ளார் இயக்குநர். ஹரி பிரதர் என்ன கேரக்டர் கொடுத்தாலும் தனித்துவமாகச் செய்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்படத்தில் கண்ணிலேயே நடித்துள்ளார். படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் , படத்தை வெளியிடும் உத்ரா புரடக்சனுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.

எடிட்டர் இளையராஜா சேகர் பேசியதாவது…
இயக்குநர் ஜோஷ்வாவை இந்தப்படத்திற்குப் பிறகு அனைவருக்கும் தெரியும். தயாரிப்பாளர் ஹரி சார், இன்று தான் அவரை நேரில் பார்க்கிறேன், படத்திற்காகக் கேட்ட அனைத்தையும் தந்துள்ளார். லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் மூவருடைய நடிப்பையும் திரையில் பாருங்கள், அசத்தியிருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். ஒளிப்பதிவாளர் காத்தவராயன் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். யுகபாரதி அண்ணா வசனங்கள் படத்திற்கு பலம். படம் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும், அனைவருக்கும் நன்றி.

நடிகை தாரணி பேசியதாவது…
எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு என் நன்றி, என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என் கோ ஆக்டர்ஸ் லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் மூவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம், மூவருக்கும் நன்றி. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மார்ச் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் காத்தவராயன் பேசியதாவது…
எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. லிஜோமோல் ஜோஷ், ஹரி கிருஷ்ணன் இருவரும் நடிப்பார்கள் எனத் தெரியும், அவர்களுடைய படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் லாஸ்லியா எப்படி நடிப்பார் எனத் தயக்கமாக இருந்தது, ஆனால் படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது, மூன்று பேரும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா 96 பார்த்த போதே பிடிக்கும், இப்படத்தில் இன்னும் அட்டகாசமாக இசையமைத்துள்ளார். பாடல் வரிகள், வசனம் மிக அருமையாகத் தந்த யுகபாரதி அண்ணாவுக்கு நன்றி. இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் உதவி இயக்குநராக இருக்கும் போதே, நிறைய டார்ச்சர் செய்வான், இப்போது என்ன பண்ணப் போகிறானோ? என நினைத்தேன், ஆனால் இப்படத்தை மிக அமைதியாக அழகாக எடுத்துள்ளான். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

உத்ரா புரடக்சன்ஸ் சார்பில் ஹரி உத்ரா பேசியதாவது…
எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து வெளியிட்டு வரும் அனைத்து படங்களுக்கும், நல்ல ஆதரவு தந்து வருகிறீர்கள், ஜென்டில்வுமன் இதுவரை நாங்கள் வெளியிட்ட படத்திலிருந்து, வித்தியாசமான படமாக இருக்கும். இந்த படத்தை வெளியிட எங்களுக்கு வழி ஏற்படுத்தித் தந்த, ரிஸ்வான் அண்ணனுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் மற்றும் நேதாஜி சார் ஆகியோருக்கு நன்றி. இயக்குநர் ஜோஷ்வா எந்தவொரு விசயத்தையும் மிக எளிதில் ஒத்துக் கொள்ள மாட்டார், எந்த விஷயமாக இருந்தாலும், மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். இந்த படத்தின் ரிலீஸுக்கு அவரும் நானும் இணைந்து, நிறைய ஐடியாக்கள் ரெடி செய்து வைத்திருக்கிறோம். மார்ச் ஏழாம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

ஆர்ட் டைரக்டர் அமரன் பேசியதாவது…
இயக்குநர் ஜோஸ்வா எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம், உதவி இயக்குநர்களாக நிறையப் பேர் என்னிடம் கதை சொல்லி இருக்கிறார்கள், ஆனால் அதைச் சாத்தியமாக்குவது எத்தனை பெரிய கஷ்டம் என எனக்குத் தெரியும். இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் அதைச் சாத்தியம் ஆக்கி இருக்கிறார். என்னை நானே நம்மால் முடியும் என தட்டிக் கொடுத்துக் கொண்டது, ஜோஷ்வாவைப் பார்த்துத் தான். 19 நாளில் அவர் இந்தப்படத்தை எடுத்துள்ளார், சினிமாவில் சிலருக்கு எல்லாமும் கிடைக்கும் ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஜோஷ்வா அதில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு இந்த மொத்த டீமும் தான் காரணம். அனைத்து நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளார்கள், எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். ஜோஷ்வா மாதிரி இயக்குநர்கள் சினிமாவுக்கு வந்தால், சினிமா இன்னொரு தளத்திற்குச் செல்லும். கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் லெனின் பாரதி பேசியதாவது…
யுகபாரதி தான் இவ்விழாவிற்கு என்னை அழைத்தார். டிரெய்லர் மிக அற்புதமாக இருந்தது. 19 நாட்களில் எடுத்ததாகச் சொன்னார்கள், அப்படி எடுக்கும் போது போதாமையால், பல தவறுகள் காட்சிகளில் தெரியும், ஆனால் இந்தப்படம் படு கச்சிதமாக இருந்தது. அதிலிருந்த அடர்வு மிக அருமையாக இருந்தது. பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. ஜோஷ்வாவை பார்த்தால், நம்மாலும் முடியும் எனும் நம்பிக்கை வருகிறது. பல கோடி போட்டு எடுக்கும் படங்களை விடக் கச்சிதமாக இருக்கிறது. லிஜோமோல் பலர் தயங்கும் பாத்திரங்களை எடுத்து நடிக்கிறார். ஹரி, லாஸ்லியாவுக்கும் வாழ்த்துக்கள். மனித வரலாற்றில் அன்பைப் பேசும் யுகபாரதி எழுத்தில் படம் உருவாவது பெருமை. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது…
இயக்குநர் ஜோஷ்வா யுகபாரதி அண்ணன் மூலமாகத்தான் பழக்கம், அவர் முதலில் இந்தக் கதையைச் சொன்ன போது இந்த படத்தின் பெயரே வேறு, ஆனால் அதைவிட ஜென்டில்வுமன் டைட்டில் மிக பொருத்தமாக உள்ளது. ஜென்டில்மேன் பற்றி மட்டும் பேசும் உலகில், ஜென்டில்வுமன் பற்றியும் பேச வேண்டும் அதை ஜோஷ்வா செய்துள்ளான். சென்சாரில் இருந்து ஒரு நாள் போன் செய்தான், இத்தனை கட் என்ன செய்வது என்றான், சென்சாரால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் தான், அதனால் இதையெல்லாம் செய் என சொல்லித் தந்தேன். இன்றைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது. இங்கு எல்லாவற்றையும் புனிதப்படுத்துவது தான் மிகப்பெரிய பிரச்சனை, புனிதப்படுத்த நீ யார் ?. பலர் நம் காலத்துக்கு முன்பே வழக்கத்தை உடைத்து, என்னென்னவோ செய்து விட்டார்கள் ஆனால் நாம் அதைத் தாண்டவே இல்லை. இப்படியான உலகில் புனிதப்படுத்துவதைக் கட்டுடைப்பது முக்கியம். பெண்களை சக மனுஷியாகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கும் சமூகம் தான் மிக ஆபத்தான சமூகம் என நினைக்கிறேன். பெண்களை சக மனுஷியாகப் பார்த்து, அவர்களோடு அவர்கள் மொழியில் பேசுவது தான் இந்த ஜென்டில்வுமன். இது போன்ற படத்தைத் தயாரித்து திரைக்குக் கொண்டு வரும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

 

இயக்குநர் த செ ஞானவேல் பேசியதாவது…
நடிகை லிஜோவுக்காகத் தான் வந்தேன், அவர் மிகச்சிறந்த ஆர்டிஸ்ட், அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் பிரமிப்பைத் தருகிறது. இயக்குநரிடம் ஏன் ஜென்டில்வுமன் எனப் பெயர் வைத்தீர்கள் எனக் கேட்டேன். இந்த மாதிரியான தலைப்புகளில் ஒன்று ஏதாவது கருத்து இருக்க வேண்டும், இல்லை எனில் கவன ஈர்ப்பு இருக்க வேண்டும். அவர் மிக அற்புதமான பதில் ஒன்றைத் தந்தார். சராசரி வழக்கத்தை உடைப்பது, இதுவரை ஜென்டில்மேன் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம் அதை மாற்ற ஜென்டில்வுமன் வைக்கலாம் என வைத்தேன் என்று சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு ஸ்டீரியோ டைப்பை உடைப்பது சமூகத்தில் மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன். கலைஞனாக ஸ்டீரியோ டைப்பை உடைப்பது மிகவும் முக்கியம். ஸ்டீரியோ டைப்பை உடைத்துத் தான் அனைத்து மாற்றங்களும் வந்துள்ளது. அதனால் இன்றைய சமூகத்தில் அந்த முயற்சியில் வரும் அனைத்து படைப்புகளையும் நாம் வரவேற்க வேண்டும். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கும், உழைத்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பாடலாசிரியர் வசனகர்த்தா யுகபாரதி பேசியதாவது…
25 ஆம் ஆண்டுகால திரை வாழ்வில் நிறையத் தம்பிகளை நான் சந்தித்திருக்கிறேன், அவர்களில் சிலரைச் சந்திக்கும் போது, இவர்கள் கண்டிப்பாக இயக்குநர் ஆகி விடுவார்கள் என நினைப்பேன், அப்படியான தம்பிதான் ஜோஷ்வா. இந்த படத்தைப் பற்றி நிறையப் பேசக்கூடாது, இந்த படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் அனைவரும் அதிகம் பேச வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நல்ல படத்திற்கு நீங்கள் எப்போதும் பெரும் ஆதரவு தருவீர்கள், உங்கள் தோள் மீது வைத்துக் கொண்டாடுவீர்கள். இந்த படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அதைத் தாண்டி இந்த திரைப்படத்தில் உள்ள கலைஞர்கள், நடிகர்கள் பற்றிச் சொல்ல வேண்டும், எல்லோரும் ஜோஷ்வா மீது வைத்த அன்பு தான் இந்த திரைப்படம். அவர் எப்போதும் தன் வேலை மீது கவனமாக இருப்பார். அவர் 19 நாளில் இப்படத்தை முடிக்க முடியும் எனச் சொன்ன போது, நான் நம்பவில்லை, ஆனால் அடுத்தடுத்து நல்ல கலைஞர்கள் நம்பி வந்த போது அது நடந்தது. ஜோஷ்வாவிற்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் பேசியதாவது…
சினிமா மீது நான் வைத்த காதல்தான் இந்தத் திரைப்படம். 19 நாளில் படத்தை முடிக்க முடியும் எனத் திட்டமிட்டது நான் அல்ல, அது என் திட்டம் அல்ல, அது நடக்கக் காரணம் என்னுடைய படக் குழுவினர் தான், எனக்காக என்னை நம்பி உழைத்தார்கள். அதனால் தான் இது நடந்தது. சென்சாரின் போது, ராஜுமுருகன் அண்ணன் தான் அறிவுரை சொன்னார், அவர் அறிவுரையால் தான் சென்சார் முடித்தேன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவைப் பற்றிச் சொல்ல வேண்டும், அவரது இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும், கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெறும் இசையில் மட்டுமே நகரும். அற்புதமாக இசையமைத்துள்ளார். ஆர்ட் டைரக்டர் அமரன் 20 நாட்களும் என்னுடன் இருந்தார். எடிட்டர் இளையராஜா சேகர், அவரை நான் நிறைய டார்ச்சர் செய்துள்ளேன், ஆனால் அதைத்தாண்டி என்னுடன் நின்றார். இந்தக்கதை எழுதியவுடன் இதை லிஜோ மோலிடம் சொல் என்றார் யுகபாரதி அண்ணன். அவரிடம் இந்த கதையைச் சொன்ன போது, அவர் ஒரு கேள்வி கேட்டார் அந்த கேள்விதான் படம் பார்க்கும்போது ரசிகர்கள் கேட்பார்கள், அதன் பதில் சொன்னவுடன் அவர் ஒத்துக்கொண்டார். லாஸ்லியா எனக்குப் பழக்கம். நான் இந்தக்கேரக்டர் சொல்லி அனுமதி எல்லாம் கேட்காமல், நடிக்கக் கூப்பிட்டேன், அவர் என்னை நம்பி வந்தார். ஹரியைப் படப்பிடிப்பிற்கு மூன்று நாட்கள் முன் தான் கூப்பிட்டேன், எனக்காக வந்தார். தயாரிப்பாளர்கள் பற்றி சொல்ல வேண்டும், என்னிடம் இந்தப்படத்தில் காமெடி கமர்ஷியல் இருக்கிறதா? என எதுவும் கேட்கவில்லை நான் கேட்ட அனைத்தும் தந்தார்கள். நேதாஜி அண்ணன் மூலம் தான் தயாரிப்பாளர்கள் அறிமுகம், அவருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஹரி கிருஷ்ணன் பேசியதாவது…
சினிமாவில் எனக்குப் பிடித்த அனைவரும் இங்கு வந்துள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தத் திரைப்படம் ஆரம்பிக்க மூன்று நாட்கள் இருக்கும்பொழுது தான் ஜோஷ்வா என்னை அழைத்தார், அவர் இந்த கதை சொன்ன போது, எப்படி இந்த கேரக்டர் செய்யப் போகிறேன் எனப் பயமாக இருந்தது. அவர் சொல்லும் கதைகள் எல்லாமே கொஞ்சம் பயமாகவே தான் இருக்கும். ஜோஷ்வா எனக்கு நல்ல நண்பர், அவரும் நானும் அயனாவரத்தைச் சேர்ந்தவர்கள். என் அப்பா ஆபாவாணன் படங்கள் பற்றிச் சொல்வார், அந்த படங்கள் எல்லாம் ஒரு இம்பாக்ட் கிரியேட் செய்யும். அது போலத் தான் நான் ஜோஷ்வாவை பார்க்கிறேன். இந்தப்படம் எப்படி வரும் எனப் பயம் இருந்தது, தினமும் ஜோஷ்வாவை கேட்டுக் கொண்டிருப்பேன். இந்த மாதிரி கதைகள் கண்டிப்பாகத் திரையில் பேசப்பட வேண்டும். யுகபாரதி அண்ணன் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். லிஜோ மோல் ஜெய்பீம் படத்திலேயே பிடிக்கும், அவருடன் நடிக்க ஆவலாக இருந்தேன், ஆச்சரியமாக லாஸ்லியாவும் இருந்தார், அவரும் அட்டகாசமாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி. 19 நாளில் படத்தை முடித்தது சாதனை தான். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை லாஸ்லியா பேசியதாவது…
தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் இருவருக்கும் என் நன்றிகள். எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் ஜோஷ்வாவிற்கு நன்றி. அவர் நினைத்தது போல், இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன், லிஜோ மோல் உடன் நடித்ததைப் பெருமையாக நினைக்கிறேன். அவர் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஹரி உடன் நடித்தது நல்ல அனுபவம், இருவருக்கும் நன்றி. ஃபிரேம் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக இருக்கும் ஒளிப்பதிவாளர் காத்தவராயனுக்கு நன்றி. கோவிந்த் வசந்தா இசை சூப்பராக இருக்கும். யுகபாரதி சாரின் வசனங்கள் அற்புதம். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி

 

நடிகை லிஜோமோல் ஜோஷ் பேசியதாவது…
ஜென்டில்வுமன் டைட்டில் போலவே நிறையப் பேரின் பார்வையை மாற்றுகின்ற படமாக இப்படம் இருக்கும், இந்தக் கேரக்டருக்கு என்னைத் தேர்ந்தெடுத்த ஜோஷ்வாவிற்கு நன்றி. யுகபாரதி அண்ணாவிற்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்திய அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. என் கோ ஆர்டிஸ்ட் அனைவருக்கும் நன்றி. அனைவரும் மிக ஆதரவாக இருந்தார்கள். இந்த அற்புதமான படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. 19 நாளில் இவ்வளவு குவாலிட்டியாக படத்தை முடிப்பது அத்தனை எளிதில்லை. இதைச் சாதித்த படக்குழுவினருக்கு நன்றி. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.

 

Komala Hari Pictures & One Drop Ocean Pictures நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன், PN நரேந்திர குமார் & லியோ லோகேம் நேதாஜி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img