ஆடுகளம் நரேன் – சரண்யா பொன்வண்ணன் தம்பதிகளின் ஒரே மகன் பவிஷ். தனியார் கல்லூரி ஒன்றில் சமையல் கலை நிபுணர் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருக்கிறார். இவர் தனது நண்பர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும் போது நண்பனின் விருந்து ஒன்றில் மிக பணக்கார வீட்டு பெண்ணான நிலா அனிகா சுரேந்திரன் வை சந்திக்கிறார்.
பிரபுவின் கைபக்குவ சமையலை ருசித்து பசியாறும் நிலா நாளடைவில் அவனையும் விரும்பத் தொடங்குகிறாள். பிரபு, நிலாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோருக்கு அறிமுகப்படுத்துகிறான். பெற்றோர்களும் நிலாவை மருமகளாக ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால் நிலாவின் தந்தை சரத்குமார் பெரும் தொழிலதிபர். அவரை பிரபுவை கண்டதும் பிடிக்கவில்லை. அதனால் அவனை தன்னுடைய மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த தருணத்தில் சரத்குமார் பற்றிய ஒரு உண்மையை பிரபு ஒரு வைத்தியர் மூலம் தெரிந்து கொள்கிறார். இதனால் தன் காதலியை விட்டு பிரிகிறார். அதன் பிறகு இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
அறிமுக நாயகன் பவிஷ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக எளிமையான கதையை யோசித்து, ஆனால் பார்வையாளர்களுக்கு சுவாரசியம் குறையாமலும், குழப்பம் இல்லாமல் காதல் கதையை இயக்கியிருக்கிறார் தனுஷ். இளமை குறும்பு அவர்களின் ஸ்டைலிலான உரையாடல் அவர்களின் 2 கே கிட்ஸ் ஐடியாஎன தனுஷ் இளமையாக யோசித்து இயக்கியிருக்கிறார். தன்னுடைய உறவினரான பவிஷ் மீது அக்கறை இருந்தாலும் அதற்காக எக்சன் காட்சிகள் கூட இல்லாமல் ஒரு நாயகனை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி இருப்பதற்கு தனி துணிச்சல் வேண்டும்.
இருந்தாலும் நாயகி, நாயகனிடம் காதலை சொல்ல கழிப்பறையை தெரிவு செய்திருப்பதும்.. அதே கழிப்பறையில் காதலை உணர செய்திருப்பதும் மட்டமான உத்தி.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் ரசிகர்களை கவரவில்லை. என்றாலும்.. அந்த வேலையை படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகைகள் செய்து இருக்கிறார்கள்.
பிரபுவின் நண்பன் ராஜேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் மேத்யூ வர்கீஸ் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய வலிமையை சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவு, படத் தொகுப்பு ,கலை இயக்கம் ,வி எஃப் எக்ஸ் காட்சிகள் அனைத்தும் குறை சொல்லாத அளவிற்கு நிறைவாக இருக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு தனுஷ் போல் திறமையான நடிகர் கிடைக்கவில்லை என்றாலும், ஒரு சுமாரான நடிகராக பவிஷ் கிடைத்திருக்கிறார். இதனை தனுஷின் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால் ‘பவிஷை பார்த்தவுடன் பிடிக்காது. பார்க்கப் பார்க்க பார்க்க பிடிக்கக் கூடும்’ . இதனால் தனுஷ் மீது கோபம் கொள்ள முடியவில்லை.