நம் பாரம்பரியமான சித்த மருத்துவத்தின் அருமையை உலகுக்கு எடுத்து சொன்ன ஏழாம் அறிவு படத்தை போன்று கதைக்களத்தை அகத்தியா படத்தின் மூலம் நமக்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர். சரி கதைக்கு வருவோம்
ஜீவாவுக்கு ஒரு மிகப்பெரிய கலை இயக்குனராக சினிமாவில் வரவேண்டும் என்று ஆசை. தன் சொந்த செலவில் ஒரு திரைப்படத்திற்கு 30 லட்சத்தில் அரங்கம் அமைக்க அந்த படம் நின்று விடுகிறது. நொந்து போன ஜீவா என்ன செய்வது என்று அறியாமல் தவிக்க, அவர் காதலி ராசி கண்ணா இதுபோன்ற அரங்குகளை பேய் ஆவி சம்பந்தமாக, மக்களுக்கு பொழுது போக்கிற்காக வடிவமைத்தால் இழந்த பணத்தை சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார்.
ஜீவாவும் சம்மதித்து அரங்குகள் அமைத்து மக்களை பேய் உலகத்துக்கு அழைத்து செல்கின்றார். அந்த அரங்கு அமைந்த இடத்தில் சில வினோதமான சம்பவங்கள் நடைபெற அங்கு கிடைக்கும் ஒரு வீடியோ காட்சிகள் மூலமாகவும் ஒரு சில புத்தகங்களின் வாயிலாகவும் ஒரு மிகப்பெரிய உண்மையை அறிகின்றனர். அது என்ன ? பாருங்கள் அகத்தியா..
ஜீவா நீண்ட வருடத்திற்கு பிறகு வித்தியாசமான அகத்தியன் எனும் திரைப்பட கலை இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் அதிகம் மெனக்கடவில்லை என்பதும் புரிகிறது. ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகி வேடத்தில் நடித்திருப்பதும் , அதற்காக பிரத்யேக வேடத்தில் தோன்றுவதும் சிறப்பு. அம்மா சென்டிமென்ட் தொடர்பான கட்சிகளில் இவரை விட , இவரது அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணியின் நடிப்பும், தோற்றமும் கவனம் ஈர்க்கிறது.
சித்த மருத்துவர் சித்தார்த்தன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் வழக்கம் போல் அலட்டல் இல்லாத அழுத்தமான வேடத்தில் நடித்து தன் பங்களிப்பை நிறைவு செய்து இருக்கிறார்.
எட்வின் டூப்ளெக்ஸ் எனும் பிரெஞ்சு ஆளுநராக நடித்திருக்கும் நடிகர் எட்வர்ட் சொனன்பிளேக் வழக்கமான வில்லனாக நடித்திருக்கிறார்.
வீணா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராசி கண்ணா குறைவான காட்சிகளில் மட்டுமே தோன்றுகிறார்.
1940 மற்றும் தற்போதைய காலகட்டம் என இரண்டு காலகட்டங்களில் மாறி பயணிக்கும் திரைக்கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவு மற்றும் வி எஃப் எக்ஸ் காட்சிகள் பிரமிப்பாகவும், தரமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் உச்சகட்ட காட்சி-
லாஜிக் மீறல் இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரியமான சித்த மருத்துவம் தொடர்பான படைப்பு என்பதால் இயக்குநரை தாராளமாக பாராட்டலாம்.
அதிலும் குறிப்பாக மதம் கொண்ட யானையை அடக்குவதற்கும் சித்த மருத்துவ வேர் இருக்கிறது என குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது.
1940 கலை திரையில் காண்பிக்கும் போது ‘குடியரசு’, ‘திராவிடன்’, போன்ற நாளிதழ்களையும், பாரதிதாசன் – இரட்டைமலை சீனிவாசன்- அம்பேத்கார் – போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் குறிப்புகளும் இடம்பெற வைத்திருப்பது தனி சிறப்பு.
இளையராஜாவின் எவர்கிரீன் கிளாஸிக் பாடலான ‘என் இனிய பொன் நிலாவே..’ பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். ஒரிஜினலை இந்த புதுப்பிப்பு வெற்றி கொள்ளவில்லை என்றே சொல்லலாம்.
கதையாக கேட்கும் போது இருக்கும் சுவாரசியம் காட்சிப்படுத்துதலின் போதாமையால் மனநிறைவு ஏற்படாமல் இருக்கிறது. படத்தின் உச்சகட்ட காட்சிக்காக உழைத்தது போல்.. படம் முழுவதும் உழைத்திருந்தால்.. பெரிய வெற்றியை பெற்றிருக்கும்