சுழல் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுழல் இரண்டு வலைத்தொடர் வெளிவந்துள்ளது. சுழல் ஒன்றில் எந்த எதிர்பார்ப்புடன் நாம் கண்டு ரசித்தமோ அதேபோல் இரட்டிப்பு எதிர்பார்ப்பாக சுழல் இரண்டு அமேசான் OTT தளத்தில் வெளிவந்துள்ளது.
சுழல் ஒன்றில் கொலை குற்றவாளியாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷின் வழக்கை வழக்கறிஞர் லால் நடத்தி வரும் தருணத்தில் ஊர் திருவிழாவிற்காக வரும் லால் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைக்கு நாங்கள் தான் காரணம் என்று எட்டு ஊரிலிருந்து எட்டு பெண்கள் காவல் நிலையத்தில் சரணடைகின்றனர். சஸ்பென்சனில் இருக்கும் கதிர் இந்த கேசை விசாரிக்குமாறு எஸ்பி சொல்ல விசாரிக்கும் கதிருக்கு பல எதிர்பாராத திருப்பங்களும் நம்ப முடியாத விஷயங்களும் நடைபெறுகின்றன. அது என்ன ? சுழல் வலைத்தொடரை விடாமல் எட்டு பகுதிகளையும் பாருங்கள்.. விடை கிடைக்கும்.
வலைத்தொடரில் பிரம்மாண்டத்துக்கு பேர் போன புஷ்கர்- காயத்ரி இந்த சூழல் இரண்டிலும் பிரம்மாண்டத்துக்கு குறைவில்லாமல் தயாரித்திருக்கின்றனர். அதுவும் ஒன்பது நாட்கள் நடக்கும் மயான கொள்ளை நிகழ்வுகள் மிக எதார்த்தமாகவும் பிரம்மாண்டத்தின் உச்சமாகவும் வடிவமைத்திருக்கின்றனர்.
வலைத்தொடரின் பகுதிகள் எட்டு என்றாலும் ஒவ்வொரு பகுதியிலும் முடிவிலும் ஒரு எதிர்பார்ப்பை ஒரு சஸ்பென்சை நம் முன்னே வைக்கின்றார்கள். பெண்கள் சிறைச்சாலையில் நடக்கும் விஷயங்கள் நம்மை பதபதைக்க வைக்கின்றன. கதைக்களம் காயல்பட்டிணத்தை சுற்றி நடப்பதால் காயல்பட்டிணம் பார்க்காதவர்கள் இந்த சுழல் தொடரை மூலம் மிக அழகாக பார்க்கலாம். அந்த அளவுக்கு ஒளிப்பதிவாளர் காயல் பட்டிணத்தை மிக நேர்த்தியாக தன் கேமராவுக்குள் படம் பிடித்திருக்கிறார்.
இசை சாம் சி.எஸ். படத்தின் உயிரோட்டத்திற்கு இவரின் இசை பங்களிப்பு மிக சிறப்பு.அதிரடி ஆட்டமும் சரி அமைதியான நடையும் சரி மிக அழகாக தன் இசை பங்களிப்பை செய்திருக்கிறார். இறுதிக்காட்சியில் இவர் தான் கொலையாளி என்று சொல்லும் போது நம்மால் நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு திரைக்கதையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சுழல் – சுழற்றி அடிக்கும் வெற்றி