பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் (07.03.2025) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு பேசியதாவது :
முதலில் தயாரிப்பாளர் கவிதா பேசும்போது:
எனக்கு இந்த மேடை புதியதல்ல. எடுத்தவுடனேயே தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணமில்லை. இதற்கு முன்பு 3 குறும்படம் எடுத்திருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் இந்த மேடையில் இருப்பவர்கள், முன்னாடி இருப்பவர்கள், மேடைக்கு பின்னால் இருப்பவர்கள் அனைவரும் இருந்திருக்கீர்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
விமர்சனங்களும் வரவேற்பும் ஒருவரை அடுத்த தளத்திற்கு கொண்டு போகும். அதுபோல் என்னை ஊக்குவித்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. எப்போதும் கனவு இருக்க வேண்டும். அந்த கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும், நிறைய போராட வேண்டும். ஊடகத் துறை எனக்கு 22 வருடத்திற்கான உழைப்பை கொடுத்திருக்கிறது.
தியாகராஜன் சாரிடம் ஆரம்பித்து நான் பலரின் வழிகாட்டுதலில் வளர்ந்திருக்கிறேன். பாக்யராஜ் சார், அம்பிகா மேடம், ரம்பா மேடம் மேடைக்கு மேடை என்னைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். என் வீட்டில் உள்ளவர்கள் எனக்கு எப்படி உறுதுணையாக இருந்து இந்தளவிற்கு கொண்டு வந்தார்களோ, அதேபோல் இந்த மேடையில் இருப்பவர்களும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
தியாகராஜன் சார் வீட்டில் தான் நான் வளர்ந்தேன். எந்த ஒரு நல்லதாக இருந்தாலும் அவர் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. கனடாவில் இருந்தாலும் ரம்பாவும் நானும் நெருக்கமாக தான் உள்ளோம். ரம்பாவின் அம்மா ஒரு இனிப்பு பண்டம் இருந்தாலும் வீட்டிற்கு வா என்று அழைப்பார்கள். என்னை பத்திரிகையாளராக பார்க்காமல் அவர்கள் வீட்டில் இடம் கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
ஒரு ஊழியர் என்ன முயற்சி எடுத்தாலும் எந்த நிறுவனம் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கும்? நான் முதன் முதலில் குறும்படம் எடுக்க நினைத்த போது, பத்திரிகையாளராக வந்தோம், சென்றோம், வேலையைப் பார்த்தோம் என்றில்லாமல் நான் குறும்படம் எடுக்க போகிறேன் என்று என் பாஸிடம் கூறினேன். உடனே ரூ.20 ஆயிரம் கொடுத்து ஊக்குவித்தது தினமலர் தான். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறியாக வேண்டும். குழந்தைகளுக்கான பாலியல் விஷயத்தை மையமாக வைத்து சாக்லேட் என்ற குறும்படம் தயாரித்தேன். 2 வதாக தென் மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகளின் பிரச்சினையை மையமாக வைத்து கொலை விளையும் நிலம் என்ற டாக்குமென்டரி படத்தை தயாரித்தேன். அப்படத்தை விகடன் செய்தியாளராக இருந்த ராஜீவ் காந்தி இயக்கினார். அடுத்து ‘எண்ணம் போல் வாழ்க்கை’ இது கொரணா காலத்தில் ஆல்பம் பாடலாக தயாரித்தேன். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா U1 ரெகார்ட்ஸ் மூலம் வெளியிட்டார். சுமார் 20 கலைஞர்கள் பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் உதவி புரிந்தார்கள். தொடர்ந்துநடிகர் ஜனகராஜ் அவர்கள், 700 படங்கள் நடித்திருக்கிறார். அவரிடம் தாத்தா என்ற குறும்படத்தின் கதையை நரேஷ் இயக்குனர் கூறினார்.. ஜனகராஜ் சாரிடம் இந்த கதையில் நீங்கள் நடிக்கவில்லை என்றால், நான் அப்படியே எடுத்து வைத்து விடுவேன் என்று நான் கூறிய பிறகு ,அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. வரவேற்பை பெற்றது.
இந்த சமயத்தில், சென்சார் போர்டு உறுப்பினராக வாய்ப்பு கிடைத்தது அதையும் என் பாஸிடம் கூறினேன். அவர் அதற்கும் எனக்கு உறுதுணையாக இருந்தார். பிறகு சென்சார் போர்டு உறுப்பினர் ஆனேன்.
அதன் பிறகு, எல்லா ஊர்களுக்கும் ராஜா சார் வந்து விட்டார். ஆனால், எங்கள் ஊருக்கு மட்டும் வரவில்லை. ராஜா சாரை எங்கள் ஊர் மக்களுக்காக அழைத்து வர வேண்டும். அவரை வைத்து எங்கள் ஊரில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கூறினேன். அதற்கும் தினமலர் மீடியா பார்ட்னராக இருந்து பெரும் உதவி புரிந்தது.
என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் தினமலர் நிறுவனமும் இங்கிருக்கும் அத்தனை பேரும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
நான் ஒரு படம் தயாரித்து இருக்கிறேன். அந்த விழாவிற்கு தினமலர் சார்பாக நீங்கள் வரவேண்டும் என்று பாஸிடம் கேட்டபோது 38 ஆண்டுகளாக ஊழியராகஇருந்து இப்போது முதன்மை மக்கள் தொடர்பாளராக இருக்கும் கல்பலதா வை அழைத்து செல் என்று கூறினார்கள். இவர் என்னுடைய குறும்படத்திற்கும் சிறப்பு விருந்தினராக வந்தார் அவருக்கும் மிக்க நன்றி.
ராபர் படத்தை எடுத்துக் கொண்டால், ஆனந்த் மற்றும் இப்படக் குழுவினரை விதார்த் மூலமாக தான் தெரியும். ஒரு சிறிய படம் தான் மக்கள் இடையே பெரிய விமர்சனத்தையும் வியாபார ரீதியான வளர்ச்சியையும் கொடுக்கிறது. இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள் இப்படத்தை நான் எப்படி கொண்டு சேர்க்கப் போகிறேன்? எப்படி வெற்றியடைய வைக்கப் போகிறேன் என்று மிகவும் கண்கலங்குவார்கள். ஒரு படம் தயாரித்து வெளியிடுவதில், கலைஞர்களை அழைப்பதில் இருந்து, நிகழ்ச்சி வடிவமைப்பு சமூக வலைத்தளங்களில் கொண்டு சேர்ப்பது என்று அந்த படம் வெளியாகும் வரை எவ்வளவு வேலைகள் பின்னால் இருக்கிறது?. பெரிய படம், பெரிய நடிகர்கள் என்றால் நாம் செய்திகளை சேகரிப்போம் ஆனால் ஒரு சிறிய படத்திற்கு யார் இதை செய்வார்கள்? அந்த வகையில்,
ராபர் படம் பெரிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது. ஆகையால், இனி சிறிய படத்திற்கு நான் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
ராபர் படம் மட்டுமல்லாது இனி அடுத்தடுத்து நிறைய படங்களோடு பயணிக்கப் போகிறோம். நாம் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அதில் உழைப்பும், உண்மையும்,உறுதி யாக இருந்தால் நாம் நினைத்த இலக்கை அடையலாம் என்ற மிகப்பெரிய அனுபவத்தை இந்த படம் எனக்கு கொடுத்திருக்கிறது.
பெண்கள் தானே என்று யோசித்துக் கொண்டே இருந்தால் அதே இடத்தில் தான் இருக்க வேண்டும். எந்த பக்கமும் திரும்பாமல், நம்முடைய பயணம் என்ன? அடுத்த அடி என்ன? எதை நோக்கிப் போக போகிறோம்? என்பதை யோசித்தால் எந்த தடங்கலையும் சந்திக்க வேண்டியதில்லை. நம்முடைய பாதையும் பயணமும் வெற்றியை நோக்கி மட்டும் தான் போகும். இந்த துறைக்கு நிறைய பெண்கள் வந்திருக்கிறார்கள் இருப்பினும் இன்னும் நிறைய பெண்கள் வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நிறைய சிறிய படங்களுக்கும், புதிய படங்களுக்கும், புதிய நபர்களுக்கும் பாக்யராஜ் சார் ஆதரவாக இருக்கிறார்
பாக்யராஜ் சாரை பார்த்து சினிமாவிற்கு வந்தவர்கள் நிறைய பேர். சாருடைய படத்திற்கு போக வேண்டும் என்றால் அவர் நன்றாக நடிப்பாரா?! டான்ஸ் ஆடுவாரா?! என்று எதையும் பார்க்க வேண்டாம். கதை நன்றாக இருக்கிறது என்ற ஒரு காரணத்தினால் படம் பார்க்க அத்தனை பேர் வந்தார்கள்.
தியாகராஜன் சார் சினிமாவிற்கு வந்த போது எத்தனை பேர் மிரண்டு போனார்கள்?! அதிக படங்களில் வில்லனாக நடித்து பேர் வாங்கிய ஒரே கதாநாயகன் தியாகராஜன் சார் தான். அம்பிகா மேடம், ராதா மேடம் கொடுக்காத வெற்றிகள் இங்கு கிடையாது. அழகிய லைலாவாக ரம்பாவை போல் யாரால் சிறப்பாக நடித்திருக்க முடியும்?! இவர்கள் அனைவரும் இந்த மேடைக்கு வந்து சிறப்பித்து இருக்கிறார்கள்.
இந்த படம் மூலம் நான் ஒரு புதிய அடியை எடுத்து வைத்திருக்கிறேன். இந்தப் பயணமும் நிச்சயமாக ஒரு பாதையை போட்டு கொடுத்திருக்கிறது. உங்கள் துணையோடு இந்த பாதையில் பலரை கைபிடித்து அழைத்துச் செல்வேன்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் என்னுடைய ஊர் காரர். அவரிடம் எப்போது வேண்டுமானாலும் உரிமையோடு போன் செய்து பேசுவேன். எல்லா படமும் நல்ல படம் என்று சொல்கிறீர்களே?! அப்போது நல்ல படம் என்றால் என்ன என்று சில சமயம் மிரட்டி கூட இருக்கிறேன். ஒவ்வொரு படத்தை பற்றியும் அபிப்ராயம் கேட்பார். சில படங்கள் சென்சார் போர்டு முன் கூட்டியே பார்த்துவிட்டால் நானே அழைத்து படம் நன்றாக இருக்கிறது என்று கூறுவேன்.
இங்கிருப்பவர்கள் அனைவரும் சிறிய படத்திற்கு உதவி செய்பவர்கள் தான். என்னோடு பயணித்து எனக்கு பாதை போட்டு கொடுத்தவர்கள். என்னுடைய இந்த அழகான பயணத்தில் இன்னும் பலரை அழைத்து செல்ல ஆசைப்படுகிறேன். நான் நிகழ்ச்சி தொகுப்பு செய்தாலும், புது முயற்சிகள் எடுத்தாலும் இங்குள்ள பத்திரிகையாளர்களிடம் புகைப்படம், காணொளி மற்றும் செய்திகளை வெளியிட்டு அனுப்புங்கள் என்று உரிமையோடு கூறுவேன். அவர்களும் மறுநாளே எனக்கு அனுப்பி விடுவார்கள். அந்த பாசத்திற்கு ஈடு இணை கிடையாது. அக்காவாக தங்கையாக தோழியாக எனக்கு ஆதரவைத் தரும் அனைவருக்கும் நன்றி. என்னுடைய எல்லா நல்லது கெட்டதிலும் என் அம்மா என்னுடனே இருந்திருக்கிறார்கள். எனது கணவர் குழந்தைகள் மற்றும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் நன்றி. இவர்களுடைய ஆதரவு இல்லை என்றால், பிரச்சினைகள் போராட்டங்களை தாண்டி ஒரு பெண்ணால் தனித்து நின்று சாதிக்க முடியாது. அதேபோல், தைரியம், தன்னம்பிக்கை, துணிவு, உண்மை இந்த சக்தி பெண்களிடம் இருந்தாலே ஜெயித்து விடலாம்.
வந்திருந்த அனைவருக்கும் நன்றி. ராபர் படம் வெற்றியடைய வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் ஸ்டில் பாண்டி பேசும் போது,
என்னை சினிமா துறைக்கு முதன்முதலாக கைப்பிடித்து அழைத்து வந்த ஸ்டில்ஸ் ரவி அவர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்திற்காக இயக்குனர் என்னை அணுகினார். இப்போது கதாநாயகன் கதாநாயகி அப்பா பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு மீண்டும் போலீஸ் கதாபாத்திரம் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். ஆனால் இயக்குனர், முதலில் கதை கேளுங்கள் என்று கூறினார். கதையைக் கேட்ட பின்பு மாறுபட்டு போலீஸ் கதாபாத்திரமாக இருக்கும். அதே நேரத்தில், ஜே பி சாருடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு இருந்ததால் ஒப்புக்கொண்டேன்.
ஸ்ரீ இயக்கிய தர்மம் என்ற குறும்படம் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. தேசிய விருது வென்றது. அதன் பிறகு அவர் மண்டேலா படம் மூலமாக இயக்குனராக விட்டார். அடுத்து புன்னகை வாங்கினால் தண்ணீர் இலவசம் என்ற குறும்படத்தை நிதிலன் இயக்கினார். அந்த குறும்படத்திற்கு நாளைய இயக்குனரில் சிறந்த படத்திற்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது எனக்கு கொடுத்தார்கள். அவரும் இயக்குனராகி குரங்கு பொம்மை, மகாராஜா வரை வந்துவிட்டார். என்னுடைய மகன் இலன் என்னை வைத்து தான் முதல் குறும்படம் எடுத்தார். Stills ரவியிடம் பணியாற்றும் போது நடிகனாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. தியாகராஜன் சார் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறேன். பாக்யராஜ் சார் வீட்டிற்கு புகைப்படங்கள் கொடுப்பதற்கு சென்றிருக்கிறேன். மிகவும் பெருமையாக இருக்கும். சில நேரங்களில் கேமராவை விட்டுவிட்டு நடிக்க சென்று விடுவேன். அப்போது ரவி சார் என்னை திட்டுவார். சில சமயங்களில் அடி கூட வாங்கி இருக்கிறேன். பிறகு அவரே நடிக்க ஊக்குவித்தார். ஒருமுறை கேமராவை விட்டு தலையை வெளியே எடுத்து நீ நடிகனாகி விடுவாய் என்றார். நானும் புகைப்படம் எடுப்பாளராக அங்கிருந்து தான் இந்த மேடைக்கு வந்துருக்கிறேன். என் மகனும் இயக்குனராகிவிட்டார்.
நான் புகைப்படம் எடுக்கும் போது என்னை இப்படி யார் எடுப்பார்களா என்று நினைத்திருக்கிறேன். இன்று அது நடந்து விட்டது. ராபர் படத்தில் காவல் துறை அதிகாரியாக நன்றாக நடித்திருக்கிறேன். படமும் நன்றாக வந்திருக்கிறது. சகோதரி கவிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது புகைப்படம் எடுத்திருக்கிறேன். இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் பலர், அடைபவர்கள் சிலர். ஆகையால், முயற்சி செய்து கொண்டே இருங்கள். என்றாவது ஒருநாள் உங்களுக்கான மேடை கிடைக்கும் என்றார்.
நடிகை தீபா பேசும்போது,
இந்த படத்தில் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எழுதுவதில் தான் நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு தாய் தன் மகனுக்கு தாய்ப்பால் ஊட்டி வளர்ப்பா ளோ அதே தாய் மகன் தடம் மாறினால் என்ன செய்வாள் என்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதை இந்த படத்தில் அழுத்தமாக கூறியிருக்கிறார்கள்.
இந்த கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனருக்கு நன்றி. பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் இருக்கும் மேடையில் நான் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கணவருக்கு அம்பிகா மேடத்தை மை மிகவும் பிடிக்கும் என்றார்.
இசையமைப்பாளர் ஜோகன் பேசும்போது,
கண்டு நேசிப்பவர்களை விட காணாமல் நேசிப்பவர்கள் பாக்கியவான் என்று கூறுவார்கள். அதுபோல இங்குள்ளவர்களின் படங்கள், பாடல்கள், சூழ்நிலைகள், நடிப்பு என்று சிறுவயதிலிருந்தே எங்களுக்கு ஊக்கமளித்தது. இங்கு வந்து எங்களை வாழ்த்தியதற்கு நன்றி. இப்படத்தை வெளியிடும் சக்தி அண்ணனுக்கு நன்றி.
கவிதா என் உடன்பிறவா சகோதரி. அவர் எடுத்த முதல் குறும்படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார். அதிலிருந்து சிறிய படம், பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல் ஆதரவாக இருக்கிறார். நீண்ட கால நண்பர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் இயக்குனர் பாண்டிக்கும் நன்றி. இசையைக் கேட்டு பாடல்களுக்கு கருத்து கூறுங்கள். இன்று சிம்பொனி இசையமைக்கும் ராஜா சாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
நடிகர் சத்யா பேசும்போது
நான் பாலு மகேந்திராவின் மாணவன். அவர் தான் என்னை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இன்று என்னுடன் அவர் இல்லை. ஆனால், தியாகராஜன் சார், பாக்யராஜ் சார், அம்பிகா மேடம், ரம்பா மேடம் இந்த மேடையில் இருக்கிறார்கள். இவர்கள் மூலமாக பாலுமகேந்திரா சாரை பார்க்கிறேன். அவரிடம் நடிப்பு கற்றுக் கொண்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கியிருக்கிறேன். ஆனால், பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. கவிதா அக்கா சிறுவயதில் டியுஷன், பள்ளி, கல்லூரி அனைத் திலும் சேர்த்து விட்டார். பாலுமகேந்திரா சாரிடமும் மாணவராக அவர் தான் அறிமுகப்படுத்தினார். அதேபோல், அக்கா தான் ஆனந்த் அண்ணாவிடமும் இவன் என்னுடைய தம்பி, உபயோகப்படுத்த முடிந்தால் உபயோகப்படுத்தி கொள் என்றார். அதன்பிறகு, மெட்ரோ படத்தில் எதிர்மறையான பாத்திரம் கொடுத்தார். கோடியில் ஒருவன் படத்தின் போது, ராபர் படத்தைப் பற்றி ஒரு வரி கூறினார். எனக்காகவும், அவருடைய இணை இயக்குனர் பாண்டிக்காகவும் எழுதப்பட்ட கதை தான் ராபர்.
மார்ச் 14 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. சக்தி அண்ணா கிடைத்தது எங்களுக்கு மிகப்பெரிய வரபிரசாதம். சிறிய படம், பெரிய படம் என்று பார்க்காமல் நல்ல படத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார். இப்பவும் என் வீட்டில் சினிமாவில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், என் அண்ணன் மட்டும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.என்றார்
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது,
இந்த படத்தின் தயாரிப்பாளர் கவிதா பத்திரிகையாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என்று பல அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் எப்போதும் முதல் வரிசை அல்லது அதற்கு அடுத்து வரிசையில் தான் அமர்ந்திருப்பார். அங்கிருந்து கொண்டு என்ன தான் பேசுவாய்?! இந்த படம் என்ன தான் செய்து விடும் என்று எகத்தாளமாக பார்த்துக் கொண்டே இருப்பார்.
பொதுவாக ஒரு படம் வெளியாக தயாரான நிலையில், விழா எடுப்பார்கள். அப்போது அனைவரும் அவர்களுக்கான விழாவாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், முதலில் பதட்டமாக இருப்பது தயாரிப்பாளர் தான். அதற்கு அடுத்து விநியோகஸ்தர் தான். நாம் பேசுவதையும், படத்தையும் எல்லாரும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். என்ன சொல்ல போகிறார்கள் என்ற நடுக்கம் இருக்கும். ஆனால், கவிதா எப்படி இருக்கிறார் என்று கவனித்தேன். அவர் ஜாலியாக ஊக்கமளித்து பேசினார்.
ஒரு படம் வெற்றியடைய அப்படத்தைப் பற்றி பத்திரிகையாளர்கள் நல்ல விதமாக எழுத வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும். ஆனால், சக பத்திரிகையாளர் தயாரிப்பாளராக ஆனவுடன் பெரிய மக்கள் தொடர்பாளர்கள் அனைவரும் தங்களது ஆசீர்வாதத்தை படத்திற்கும், தயாரிப்பாளருக்கும் கொடுத்திருக்கிறார்கள்.
எம்.ஜி. ஆர். காலகட்டத்தில் இருந்து இருக்கும் மக்கள் தொடர்பாளர் திரை நீதி செல்வம் அவர்களை இந்த படத்திற்கு மக்கள் தொடர்பாளராக இருக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். தியாகராஜன் சார், பாக்கியராஜ் சார், அம்பிகா மேடம், ரம்பா மேடம் இவர்கள் பல வருட காலங்களாக பல மேடைகளை பார்த்திருப்பார்கள். அவர்களின் ஆசீர்வாதம் இந்த படத்திற்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி.
அந்த காலத்தில் கல்யாண வீடுகளில் ஹிந்தி பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கும். இளையராஜா காலத்திற்கு பின்பு தான் தமிழ் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தது. அது போல நிகழ்ச்சியை தமிழ் மொழியை மட்டும் பேசாமல் நடுவில் பல ஆங்கில வார்த்தைகளை கலந்து தொகுத்து வழங்கினால் தான் ரசிக்கும் படியாக இருக்கும் என்பதை உடைத்து விட்டு, அழகு தமிழால் மேடையை தன்வசப்படுத்திக் கொள்கிறார் கவிதா. அது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
மெட்ரோ படத்தை பிடித்தவர்களுக்கு ராபர் படமும் பிடிக்கும். படத்தை பார்த்தேன், மிகவும் அருமையாக எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஆனந்த கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். பாண்டி இயக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து விழிப்புணர்வு படமாக எடுக்கவில்லை. ஆனால், ராவாக எடுத்திருக்கிறார்கள். அதேசமயம், சமுதாய நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் சிறப்பாக இருக்கிறது. ஜே பி சார் கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறது. தீபா அக்காவை நகைச்சுவை பாத்திரமாகவே பார்த்திருப்போம். ஆனால், இந்த படத்தில் அழுத்தமான அம்மாவாக பார்த்தோம். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியாக சிறப்பாக இருக்கிறது.
தொழில் பின்னணியில் உள்ள குடும்பத்தில் இருந்து வந்துருக்கிறார் நாயகன் சத்யா. பாலுமகேந்திராவிடம் இயற்கையாக நடிப்பு கற்றுக் கொண்டு வந்துருக்கிறார். மெட்ரோ வெற்றியடைந்த பிறகு அவசரமாக அடுத்த படம் நடிக்காமல் அந்த குழுவுடனேயே பயணித்து கொண்டிருக்கிறார். மெட்ரோ மாதிரி படத்தை நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் ஜெய் கார்த்திக் அண்ணா 26 மணி நேரம் உழைப்பார். நல்ல மனிதர்கள் என்று சிலரை பார்த்திருப்போம். ஆனால் இவர் மிக நல்ல மனிதர். அவருடன் பழகும் போது இது தெரியும்.
விழா நாயகன் பின்னணி இசை மற்றும் பாடல்களை சிறப்பாக இசையமைத்திருக்கிறார். சின்னத்திரையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் சோபியா. இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அனைவரின் ஆசீர்வாதத்துடன் இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
நடிகர், இயக்குனர் தியாகராஜன் பேசியபோது,
கவிதா என்னிடம் வந்தபோது சின்ன பெண். அவரிடம் இருந்த வேகமும், துடிப்பும். இவர் வேறு ஒரு தளத்திற்கு செல்லும் ஆள் என நான் நினைத்ததுண்டு. அதன் பின் அவர் ஒவ்வொரு துறையாக மாறி, பத்திரிகையாளர், சென்சார் போர்ட் மெம்பர் என இப்போது தயாரிப்பாளராக இருப்பது ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அனைத்து பெண்களையும் ஊக்குவிக்கும் ஒரு விஷயமாக பார்க்கிறேன். இப்படத்தின் ட்ரைலரை பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது. இம்ப்ரெஸ் பிலிம் மேக்கர்ஸ் ஒரு இம்ப்ரெஸ்ஸிவான ட்ரைலரை செய்திருக்கின்றனர். மேலும் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சக்திவேல் விநியோகம் செய்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. காரணம், அவர் சிறந்த படங்களை மட்டுமே விநியோகம் செய்வார். இப்படத்தில் நடித்த சத்யா மற்றும் அத்தனை கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அழகான ஒளிப்பதிவு, இசை என படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக தங்கள் வேலையை செய்துள்ளனர்.
கவிதா மேலும் பல படங்களை தயாரிக்க வேண்டும். அவர் சொன்னது போல் நிறைய சிறிய தயாரிப்பாளரர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மிக நல்ல எண்ணம். தாணு சார் இங்கு இருக்கிறார், அவர் பலருக்கு உதவி செய்திருக்கிறார். கவிதாவுக்கு தொகுப்பாளராக பல வாய்ப்புகளை வழங்கியுள்ளார். பாக்யராஜ் சாரின் படங்களை நாங்கள் சிறுவயதில் கண்டு மகிழ்ந்திருக்கிறோம். அதே போல் அம்பிகா, ரம்பா என அனைவரும் இங்கு கவிதாவை வாழ்த்த வந்திருக்கிறார்கள் என்றால் அது கவிதாவின் மீதுள்ள பிரியம் தான் காரணம். இவர்கள் அனைவருக்கும் நன்றி. கவிதா மேலும் பல சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்த படத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி, என்றார்.
நடிகை அம்பிகா பேசியபோது,
அனைவருக்கும் வணக்கம், இந்த விழாவுக்கு அழைத்த கவிதாவுக்கு நன்றி. எனக்கு நிறைய பத்திரிகை நண்பர்கள் உள்ளனர். அவர்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி. எனக்கு பிடித்த பலரில் ஒருவர் தான் கவிதா. ஒரு பெண்ணாக இருந்து படத்தை தயாரித்திருக்கிறேன் என்று அவர் சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது. தியாகு சொன்னது போல், சிறிய படங்கள் பெரிய அளவில் வெற்றியடைய வேண்டும். ஆனால் இந்த படம் எனக்கு சிறிய படமாக தெரியவில்லை. ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கு செய்ய வேண்டிய செலவை குறைத்து இந்த படத்தை ஒரு பெரிய படமாக தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு வசனம் “இங்க இருக்க எல்லாரும் கெட்டவங்க தான். அதுல ரெண்டு ரகம். ஒன்னு மாட்டிக்கிறவுங்க, இன்னொன்னு மாட்டிக்கா தவங்க” என்ற வசனம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று நான் கவிதாவிடம் சொன்னேன். அதுமட்டுமல்லாமல், இந்த கதைக்காக அவர்கள் தேர்வு செய்துள்ள கதாபாத்திரங்களும், நடிகர்களும் மிகவும் பொருத்தமாக இருந்தார்கள். இதில் நடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க வேண்டும் என்பது நண்பர்களாகிய உங்கள் அனைவரின் கைகளில் உள்ளது. இதை ஒரு கடமையாக எடுத்து இப்படத்தை வெற்றிப்படமாக்குவோம், நன்றி என்றார்.
தயாரிப்பாளர் எஸ். தாணு பேசும்போது,
கவிதா என் மகள் மாதிரி. அவருடைய தமிழ் ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அவர் நேரில் பேசினால், சொல் புதிதாக இருக்கும். சொல்லின் பொருள் புதிதாக இருக்கும். சொல்லின் சுவை பெரிதாக இருக்கும். அப்படிப்பட்டவர் ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன் என்று நேற்று முன்தினம் தான் கூறினார். முன்பே கூறியிருந்தால் பொருளாதாரத்தில் நிறைய மிச்சம் பண்ணி கொடுத்திருப்பேன் என்றேன். என் சகோதரன் தான் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஆகையால், அவரை வந்து நீங்கள் வாழ்த்த வேண்டும் என்றார். நீ எங்க சொன்னாலும் நான் வருவேன் என்றேன். ஒரு பெண்ணாக, பத்திரிக்கையாளராக இருந்து கொண்டு, பத்திரிக்கை உரிமையாளர்களுக்கு மிகவும் பாத்திரமான பெண்மணியாக தான் இந்த பெண்ணை நான் பார்க்கிறேன். தினமலர் ரமேஷ் சாரும், ஆதிமூலம் சாரும் இந்த பெண்மணி மூலமாகத்தான் அவர்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் கூறுவார்கள். அவர்களுடைய கோவில் திருப்பணிக்கு உற்றத் துணையாக இந்த பெண்மணி வாய்த்திருக்கிறார். அப்படிப்பட்டவர் இப்படத்தை தயாரித்திருப்பது சிறப்பான ஒன்று. பாக்யராஜ் சாரை நான் என்றென்றும் போற்றி புகழக்கூடியவன். அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ரம்பாவின் கணவர் 2000 கோடிக்கு சொந்தக்காரர். அவர் இந்த மேடையில் அமர்ந்திருக்கும் போது என் கண்கள் பனிக்கிறது. ரம்பாவின் கணவர் இந்திரன் கடந்த வாரம் எனக்கு போன் செய்து, அப்பா உங்கள் ஆசீர்வாதத்தில் என் மனைவியுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என் மனைவிக்கு வீட்டிலேயே இருப்பது உறுத்தலாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால், அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்றார். நல்ல கம்பெனிகளை நான் சொல்கிறேன். அதற்குள் நீ அவசரப்பட்டு படம் எடுத்து விடாதே என்று கூறினேன். ரம்பா, சினிமாவில் உன் வரவு நல்வரவாக இருக்கும் என்று அப்பாவாக வாழ்த்துகிறேன். அம்பிகா மேடமை என் படங்களில் நடிக்க வைக்க பலமுறை முயன்று நடக்காமல் போய்விட்டது. ஏதாவது காரணத்தினால் ஒரு படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. தியாகராஜன் சார் தானாக முன் வந்து அவர் மகனை வண்ண வண்ண பூக்கள் படத்திற்காக கொடுத்தார். அந்த படம் தேசிய விருது வென்றது. பிரஷாந்த் என் குடும்பத்தில் ஒருவர். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் இவ்வளவு அருமையாக பேசுவார் என்று நினைக்கவில்லை. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமாக எடுத்து பேசும் அளவிற்கு ஒன்றிவிட்டார். அவர் இந்த படத்தை விநியோகிப்பது சால சிறந்தது. படத்தின் நாயகன் வருங்காலத்தில் உயர் சிற்பியாக வருவார் என்று வாழ்த்தி, வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன் என்றார்.
தினமலரின் முதன்மை மக்கள் தொடர்பாளர் கல்பலதா பேசும்போது,
கவிதா எங்களில் ஒருவர். அவரை தயாரிப்பாளராக பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தினமலர் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நீங்களும் எப்போதும் எங்களுடன் தான் இருப்பீர்கள். நாயகன் சத்யா, இயக்குனர் பாண்டி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் படகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். என் மகனும் ஒளிப்பதிவாளர். ஆதலால், எனக்கும் இந்த விழா நெருக்கமாக இருக்கிறது. சின்ன படமாக இருந்தாலும் அனைவரும் சிறப்பாக பெற்றுக் கொள்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
நடிகை ரம்பா பேசும்போது,
நான் ரகசியமாக வைத்திருந்ததை தாணு சார் எல்லோர் முன்னாடியும் போட்டு உடைத்து விட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு தெரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றாக இங்கு பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர், இயக்குனர் என்று யாராக இருந்தாலும் எங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர் தான். அவர்கள் பின்னாடி இருந்து கொண்டு எங்களை முன்னாடி கொண்டு வந்து ஆதரவு தருவார்கள். அப்படி பெண் பத்திரிகையாளராக இருந்து, ஒவ்வொரு படியாக சொந்த உழைப்பில் ஒரு படத்தை தயாரித்திருப்பது பெருமையாக இருக்கிறது. கவிதா எப்போது அழைத்தாலும் நான் வருவேன். இந்த படம் சிறிய படம், பெரிய படம் என்று இல்லை, எனக்கு நல்ல படமாகத் தான் தோன்றுகிறது. டிரைலர் பார்க்கும் போதே கதை, திரைக்கதை அனைத்தும் நன்றாக இருக்கிறது. எல்லா படத்திற்கும் ஆதரவு தருவது போல் இந்த நல்ல படத்திற்கும் ஆதரவு கொடுத்து மக்களிடம் சேர்த்து வெற்றி படமாக கொண்டு வருவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. படகுழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஆனந்த கிருஷ்ணன் பேசும்போது,
மெட்ரோ படத்திற்கு பிறகு 2 வருடம் எதுவும் அமையவில்லை. ஒரு விஷயம் நடக்கும் நடக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிஞ்சும். எங்களுக்காவது என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆனால், உடன் இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆனாலும், அந்த 2 வருடமும் என்னை விட்டு போகாமல் கோடியில் ஒருவன் படம் வரைக்கும் என்னுடனே பயணித்த பாண்டிக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் அவர் இயக்குனராகியிருக்கிறார். இது தான் என்னுடைய சிறந்த தருணமாக கருதுகிறேன்.
என்னிடம் பலரும் பெரிய நடிகர்களை வைத்து ஏன் படம் எடுப்பதில்லை என்று கேட்டார்கள். பத்திரிகையை நம்பி தான் நான் படம் எடுக்கிறேன். அவர்கள் வெற்றி படமாக ஆக்கி விடுவார்கள். ஆகையால், என் இஷ்டத்துக்கு படம் எடுப்பேன். பத்திரிகையாளர்கள் சரியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இனிமேலும் அப்படி தான் எடுப்பேன். எனக்கு கொடுத்த ஆதரவை பாண்டிக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் என். எஸ். உதயகுமார் என்னுடைய எல்லா படத்திலும் பணியாற்றி வருகிறார். அவரின் குழு கொரில்லா படை மாதிரி தான் பணியாற்றுவார்கள்.
என்னுடைய வீடு ஓஎம்ஆரில் தான் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு வழிபறி அதிகமாக இருக்கும். அதனை தடுக்க காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தினார்கள். ஆனால், எங்கெங்கு கேமரா வேலை செய்யவில்லையோ, எங்கெங்கெல்லாம் கேமராவில் பதிவாகதோ அதை தெரிந்து கொண்டு ஒரு குழுவினர் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை கண்டுபிடித்து காவல்துறையினர் கைது செய்தார்கள். அவர்கள் பின்பற்றிய வழிமுறைகள், அவர்களுக்கு பின்னாடி இயங்கும் குழு என்று எல்லா விஷயத்தின் தீவிரத்தை ஏற்கனவே மெட்ரோவில் சொல்லி விட்டோம். அது ஒரு திருடனைப் பற்றிய கதை. அவன் முகத்தை மூடிக் கொண்டு வருவான். திருடிக் கொண்டு போய் விடுவான். ஆனால், ராபர் என்பவன் நின்று பயத்தைக் காட்டி துன்பறுத்தி நகையைத் திருடி செல்வான். இது தான் திருடனுக்கும் ராபருக்கும் உள்ள வேறுபாடு என்று மெட்ரோவில் சொல்லி இருப்போம். மெட்ரோ திருடனுடைய கதை, இது ராபருடைய கதை. என்னுடைய நீண்ட கால நண்பர் ஜோகன் இப்படத்திற்கு தீவிரமாக பின்னணி இசையமைத்திருக்கிறார்.
அதேபோல் நீண்ட கால தோழி கவிதா என்னுடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருப்பது பெரிய பலம். ஜேபி சாரை பாண்டி சந்தித்து கதை சொல்லும் போது எல்லாமே எதிர்மறையான பாத்திரமாகவே இருக்கும். ஆனால், 2 முதியவர்கள் இருப்பார்கள். அவர்கள் தான் இப்படத்தில் நேர்மறையான பாத்திரத்தில் இருப்பார்கள், அவர்கள் தான் நாயகர்கள். பொதுவாக இளம் வயது நடிகர் தான் நேர்மறையான நாயகனாக நடிப்பார். ஆனால் இந்த படத்தில் முதியோர் தான் நாயகன். இதை அவருடன் இணைந்து சவாலாக செய்திருக்கிறார் பாண்டி.
இந்த படத்தில் நடித்த டேனியிடம், இப்படத்தில் நாயகன் கேவலமான பாத்திரம் அவனுக்கு ஒரு வில்லன் இருப்பான். அவன் இவனை விட கேவலமான பாத்திரம் என்று கூறினேன். டேனி எனக்கு இதுதான் வேண்டும் என்று பங்கெடுத்து சிறப்பாக நடித்தார்.
இப்படத்தில் அனைவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது குறிப்பாக, கலை இயக்குனர் சரவணன், சண்டே இயக்குனர் மகேஷ் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும். ஒரு பெண்ணின் துப்பட்டாவைப் பிடித்து இழுக்க வேண்டும். அவள் வளைவாக சென்று விழ வேண்டும் என்று கூறினேன். மிகவும் குறுகிய நேரத்தில் அவர்களுடைய கொள்கை வைத்து சரியான திட்டத்துடன் சிறப்பாக செய்து கொடுத்தார்கள். அந்த குறிப்பிட்ட பாத்திரத்தில் நடித்த பெண்ணும் சிறப்பாக பணியாற்றினார். சுமார் 50 அடி உயரத்தில் அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்க வேண்டும். அவரால் இன்று வர முடியவில்லை, அவருக்கு நன்றி. இப்படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி அவரும் என்னுடைய நண்பர். இப்படத்தின் பாடல்கள் எழுதியதற்காக நன்றி. படத்தொகைப்பாளர் ஸ்ரீகாந்த் அண்ணா என்னுடைய எல்லா படத்திலும் பணியாற்றி வருகிறார். அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் நான் வயலன்ஸ் படத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு அண்ணனாக என்னை வழி நடத்துவார். எனக்கும் எடிட்டிங் தெரியும் என்பதால் அவருக்கு உதவியாளனாக பணிபுரிய அனுமதித்ததற்கு நன்றி. நாயகன் சத்யாவை மெட்ரோவில் பார்த்துவிட்டு இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு இந்த முகம் சரியாக இருக்கிறது என்று பாராட்டி எழுதினீர்கள். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அவரே பார்க்கும் போதெல்லாம் இவர் நீண்ட காலம் சினிமாவில் இருப்பாரா? அல்லது சினிமாவை விட்டு விலகிவிடுவாரா? என்று நினைத்திருக்கிறேன். ஆனால், சத்யா பிடிவாதமாக சினிமா தான் என் வாழ்க்கை என்று உறுதியாக இருந்தார். அதற்காக அவர் வாய்ப்பு தேடி பலரையும் சந்தித்து, ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா? ஒரு நல்ல பாத்திரத்தில் நடித்து விட மாட்டோமா? என்ற தேடுதல் மற்றும் அர்ப்பணிப்போடு இருந்ததால்தான் இந்தப் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. அந்த தேடுதல் எப்போதும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தில் அவர் வெற்றி பெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். எப்போதும் பாதிக்கப்பட்டவரை குற்றம் சாற்றுவதை முதலில் நிறுத்துங்கள். பாதிப்பு ஏற்படுத்துபவர்களை திருத்த வேண்டும் அல்லது களை எடுக்க வேண்டும். இதுதான் தீர்வு. வீட்டில் நடந்தாலும் சரி வெளியே நடந்தாலும் சரி பெண்கள் மீதான இதுபோன்ற கொடூரமான ஆதிக்கத்தை சொல்லும் படம் தான் ராபர். உங்களின் ஆதரவு படத்திற்கு இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்
இயக்குனர் பாண்டி பேசியபோது,
வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். நிறைய பேச நினைத்தேன் ஆனால் ஆனந்த் சார் பேசியபின் அதிகம் உணர்ச்சி வசபட்டுவிட்டேன். ஒருவருக்கு படம் கிடைப்பது மிக கடினமான ஒரு விஷயம். ஆனால் அது ஆனந்த் சாரால் மிக எளிமையாக கிடைத்தது. நான் அவரிடம் என் வேலையை மட்டுமே பார்த்தேன். அப்போது ஒருநாள் படம் பண்றியா? என கேட்டார். நான் கதை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றேன். அவர் அப்போது என்னுடைய கதையை இயக்கு என்று தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரையும் தேர்வு செய்து கொடுத்துவிட்டார். இப்போது, படத்தை பற்றி ஆனந்த் சார் பேசிவிட்டார். நான் பலருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
பாலாஜி கனகராஜ், அழகு சுந்தரம், மும்பை பவுல், பாலாஜி விஜய், தல, சுமன், ஹரிஷ், உமேஷ், சரவணன், சீனி, சிவ பாலன் மற்றும் என் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் இப்படத்தில் நடித்தனர். அதனால் தான் படத்தின் பட்ஜெட்டை குறைத்து ஒரு பெரிய படம் அளவிற்கு இப்படத்தை மாற்ற முடிந்தது.
மேலும் இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் சத்யா, டேனி, ஜெ.பி., தீபா, பாண்டியன், சென்றாயன், நிஷாந்த், மாதவ், சாய் தினேஷ், யுவராஜ், ராதா கிருஷ்ணன், தீரன், யாஷிதா, சோபியா மற்றும் இந்த விழா நாயகனாகிய இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ். நான் சென்னை வந்த புதிதில் அவரின் அறையில் தான் தங்கி வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். அவர் தான் எனக்கு ஆனந்த் சாரையும் அறிமுகம் செய்து வைத்தார். ஒளிப்பதிவாளர் உதயகுமார் சார், அவருக்கு நான் துணை ஒளிப்பதிவளராக வேலை செய்தேன். அவர் என் படத்திற்கு ஒளிப்பதிவளராக வந்ததும் சிறிய தயக்கம் இருந்தது. ஆனால் நான் அவரிடம் வேலை செய்ததை விட அதிகமான வேலையை அவர் எனக்காக செய்துள்ளார். ஒரு படத்தை சொன்ன தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒளிப்பதிவாளர் ஈடு கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர் எனக்கு கிடைத்த வரமாக தான் பார்க்கிறேன். எடிட்டர் ஸ்ரீ காந்த் சாருக்கு நன்றி, அவர் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் நான் ஃபோன் செய்தவுடன் எனக்கான வேலையை செய்து கொடுப்பார்.
நாங்கள் இப்படத்தை அதிகம் லைவ் லொகேஷனில் தான் படமாக்கினோம். அப்போது, அங்கு தேவைப்பட்ட பொருட்களை செய்து கொடுத்து படத்தின் பட்ஜெட்டை குறைத்துக் கொடுத்த கலை இயக்குனர் சரவணன் சார் அவர்களுக்கு நன்றி.
இப்படத்தில் அதிக சண்டைக்காட்சிகள் உள்ளது. அதை லைவாக எடுத்துக் கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் பாடல் பாடி நடன இயக்கம் செய்த ஹரிஹரன் சாருக்கும் நன்றி. பாடலாசிரியர் அருண் பாரதி சார் அவர்களின் வரிகள் மிக கட்சிதமாக பொருந்தியிருந்தது. மற்ற பாடலாசிரியர்களான லோகன், வீரன், சாரதி, தாரணி மற்றும் இப்பாடலை பாடிய அந்தோனி தாசன் அவர்களுக்கும் நன்றி. ப. இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் திரை நீதி செல்வம் சாருக்கு நன்றி
மேலும் என்னுடன் பணியாற்றிய என் டீம், ஷாம், அருண், பிரேம், கௌதம், மஞ்சுநாத், அனூப், விஷால், பாலா, முகிலன், தினகரன், பார்தா, செல்வா, பாபு மற்றும் ப்ரீத்தி அனைவருக்கும் நன்றி. நான் இந்த மேடையில் இருக்க காரணமான என் குரு ஆனந்த் சார் அவர்களுக்கு நன்றி. அவர் எனக்கு கிடைத்த வரமாக பார்க்கிறேன். மேலும் இப்படத்தில் எங்கும் பெயர் வராமல் இப்படத்தை கொண்டு சேர்க்கும் ஜெய் கார்திக் அவர்களுக்கு நன்றி. என்று பேசினார்
இயக்குனர் பாக்யராஜ் சார் பேசும்போது,
முதலில் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலனுக்கு தான் நன்றி கூற வேண்டும். ஏனென்றால் ஒரு படத்தை எடுப்பது பெரிதல்ல அதை வெளி கொண்டு வருவதற்கு முதுகெலும்பு போல இருந்து ஆதரவு தர வேண்டும். அந்த வேலையை சக்தி செய்து இருக்கிறார். அதில் முதல் தயாரிப்பாளருக்கு அவர் இந்த ஆதரவு கொடுத்ததில் மகிழ்ச்சி. என்னை விட சாந்தனுவிற்கு தான் மிகவும் பழக்கம். அவர்கள் இருவரும் தான் அடிக்கடி கோயம்புத்தூரில் சந்தித்துக் கொள்வார்கள். நான் எப்போதாவது இதுபோன்ற விழாவில் தான் சந்திப்பேன்.
கவிதா இப்படத்தை தயாரித்திருப்பதை கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. அவர் தமிழில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை பற்றி நான் எப்போதும் பேசிக் கொண்டிருப்பேன். நம்மிடம் இல்லாத ஒன்று, அவர் சிறப்பாக தமிழ் பேசுகிறார். அவரின் தமிழ் உச்சரிப்பு இலக்கண சுத்தமாக இருக்கும். கவிதா ஒரு படம் தயாரித்திருக்கிறார் என்று கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கு வந்த பிறகு தான் அவர் இதற்கு முன்பே 3 குறும்படம் எடுத்திருக்கிறார் என்று தெரிந்தது. சின்ன மீனை போட்டு பதம் பார்த்து விட்டு தான் வணிக ரீதியாக படமே தயாரிக்கலாம் என்று வந்திருக்கிறார். நாளை தான் மகளிர் தினம். ஆனால், இன்றே சக பத்திரிக்கையாளர்களையும் மேடை ஏற்றி கௌரவித்திருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. மூத்த பத்திரிக்கையாளர் அதேசமயம் என்னுடன் பாசமாக பழகும் செல்வம் சாரை நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மக்கள் தொடர்பாளராக இந்தப் படத்திற்காக அழைத்திருக்கிறார் என்பது மனதிற்கு நெகிழ்வாக இருந்தது.
இம்ப்ரெஸ் பிலிம்ஸ் மாதிரி படத்தின் பேரும் இம்ப்ரெஸ்ஸாக தான் இருக்கிறது.
கவிதா என்னைப் பற்றி பேசும்போது, பாக்யராஜ் சார் படம் என்றால் சண்டை காட்சிகளை எதிர்பார்த்து போகக் கூடாது, நடனத்தை எதிர்பார்த்து போகக் கூடாது, நடிப்பை எதிர்பார்த்து போகக் கூடாது, கதையை மட்டும் எதிர்பார்த்து போகலாம் என்று கூறினார். அப்படி என்றால் கதையைத் தவிர மீதி எதுவுமே இல்லை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். (என்னைப் பற்றி இப்படி பிரமாதமாக வாழ்த்தி பேசியதற்கு நன்றி என்று கவிதாவை கலாய்த்தார்)
இந்த நிகழ்ச்சி இவ்வளவு நேரம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த நிகழ்ச்சிக்கான நேரம் வந்து விடும். அவர்கள் வந்து இடையூறு செய்வார்கள் என்று நினைத்திருந்தேன் ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்காதது மகிழ்ச்சி.
ரீ எண்டரி ரம்பா என்று தாணு சார் சொல்லி விட்டு போனார். நானும் தயாராகத்தான் இருக்கிறேன் வாருங்கள் ரம்பா.
கவிதாவிற்கு இவ்வளவு பேர் வந்து ஆதரவு கொடுப்பதற்கு காரணம் அவருடைய நல்ல குணம்தான். சும்மா எல்லோரும் முன்னுக்கு வந்துவிட முடியாது. ஆணுக்குப் பின் பெண் இருக்கிறாள் என்பது போல, கவிதாவிற்கு பின் பல ஆண்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே நல்ல விதத்தில் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.
சத்யாவை பார்ப்பதற்கு பொறாமையாக இருக்கிறது. சினிமா நாடகம் என்றாலே என் அண்ணன் பெல்ட் அல்லது கையில் எது கிடைக்கிறதோ அதை எடுத்துக் கொண்டு என்னை அடிக்கத் துரத்துவார்கள். அண்ணன் சினிமாவிற்கு வந்த பிறகுதான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், சத்யாவிற்கு அப்படி அல்லாமல் அண்ணன் உறுதுணையாக இருக்கிறார். கூடவே கவிதாவும் இருக்கிறார். இதுதான் கொடுப்பினை. மெட்ரோ படத்தை பார்த்தேன். அதில் சத்யா வலிமையாக நடித்திருப்பார். ஆனால், நேரில் பார்க்கும்போது சிறிதும் சம்பந்தமில்லாமல் இருக்கிறார். என்னைவிட வெகுளியாக இருக்கிறார். இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இப்படத்திற்கு இசையமைத்த ஜோகன் முதல் இந்த படத்திற்காக பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு பிடித்த திருட்டு காட்சிகள் சில இருக்கிறது. சிவாஜி நடித்த திருடன் படத்தில், ஒருவன் நகை பணத்தோடு வருகிறான். இரவு நேரத்தில் அவனிடமிருந்து அதை திருடலாம் என்று கூறும் போது, இல்லை இல்லை காலை 10:30 மணிக்கு தானே எடுத்து வருகிறார்? சாலையில் வைத்து அப்போதே திருடி விடலாம் என்று சிவாஜி சொல்வார். அது எப்படி முடியும் என்று கேட்டதற்கு, ஒரு கேமரா, 2 ஆட்களை மட்டும் கூட்டி வாருங்கள் என்பார். அதேபோல் அவர் சாலையில் நிற்பார்கள். அதை பார்த்த அங்கிருந்த மக்கள் எதற்காக இப்படி நிற்கிறீர்கள் என்று கேட்பார்கள். நாங்கள் படப்பிடிப்பு நடத்துகிறோம். நீங்களும் நடிக்கலாம் என்பார். இப்போது ஒருவன் நகை பணம் எல்லாம் எடுத்துக் கொண்டு வருவான் அவனை தடுத்து நிறுத்தி அவனிடம் இருக்கும் பணம் நகைகளை எடுத்துக் கொண்டு ஓடுவோம். அப்போது அவன் ஐயோ திருடன் திருடன் என்று கத்தும் போது, நீங்கள் எல்லோரும் ஏன்டா வட்டிக்கு வட்டி விட்டு இவ்வளவு சம்பாதிச்சல்ல! அதுதான் இப்படி அநியாயத்திற்குப் போகிறது என்று சொல்லி அவனைப் பிடித்து
கம்மியாக அடித்து அங்கேயே உட்கார வைத்து விடுங்கள். இவ்வாறு அந்த படத்தில் சிவாஜி சார் திருடி கொண்டு போவார். அந்தக் காட்சி நான் ரொம்ப ரசித்த காட்சி. அந்த இடத்தில் இருக்கும் புத்திசாலித்தனமும் சமயோசித புத்தியும் எனக்கு பிடித்திருந்தது.
இதே போல நிஜ வாழ்க்கையிலும் கூறுவார்கள். பொதுவாக வருமான வரித்துறையினர் வந்தாலே நமக்கு பதட்டமாக இருக்கும். அப்படி ஒரு முறை நடிகர் எம் ஆர் ராதா வீட்டிற்கு சென்று விட்டார்கள். உடனே எம் ஆர் ராதா அவர்கள் சாலையில் வந்து அய்யய்யோ என் வீட்டில் திருடர்கள் புகுந்து விட்டார்கள். கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று சத்தமிட்டார். இதைக் கேட்ட மக்கள் நமது எம்ஆர் ராதா வீட்டில் திருடன் புகுந்து விட்டார்கள் என்று வருமானவரித்துறையினரை நன்றாக அடித்துவிட்டார்கள். அவர்கள் அடித்துக் கொண்டிருக்கும் போது, எம் ஆர் ராதா அவர்கள் ஒரு பெட்டியில் நகைகள், பணத்தை காரில் வைத்து பத்திரமாக எடுத்து கொண்டு போய் விட்டார். அன்றிலிருந்து தான் காவல்துறையினர் இல்லாமல் வருமானவரித்துறையினர் செல்லக்கூடாது என்ற வழக்கம் வந்தது.
திருடர்கள் என்று சொன்னால் ஒரு புத்திசாலித்தனம் வேண்டும். முதலில் திருடும் ஒருவன் தெளிவாக திட்டமிட்டு திருடி செல்வான். அதன்பின் காவல் துறை அதிகாரிகள் வந்து, இதை செய்தது யார்? எப்படி வந்திருப்பார்? இதை செய்தது பழைய திருடனா? அல்லது புதிதாக வந்த ஒருவனா? என்று விசாரித்து திருடனை கைது செய்துவிடுவார். அதனால், திருடனை விட போலீஸுக்கு அதிக மூளை வேண்டும். அதன் பின் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லும். அங்கு இந்த வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞருக்கு, திருடன் மற்றும் போலீசை விட அதிக மூளை வேண்டும். சில சமயங்களில் அவர்கள் அந்த வழக்கையே வேறு திசையில் திருப்பிவிட்டுவிடுவர்.
இவர்கள் அனைவரையும் விட மோசமான மூளை யாருக்கு இருக்கும் என்றால் ஒரு எழுத்தாளருக்கு தான் இருக்கும். நம் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் என்னை போன்றவர்களை குறிப்பிடுகிறேன். ஏனென்றால், இது அனைத்தையும் உருவாக்குவது யார் என்றால் அந்த எழுத்தாளர் தான். திருடன் எப்படி திருடினான், அவனை போலீஸ் எப்படி பிடித்தது, அந்த வழக்கை எப்படி வாதாடினார்கள் என அனைத்தையும் எழுதினால் தான் ஒரு எழுத்தாளருக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
நான் ஆனந்த கிருஷ்ணன் எழுதிய “மெட்ரோ” படம் பார்த்தேன். நான் எடுக்கும் கதை வேறு, நான் பார்க்கும் கதை வேறு. என்னுடைய லைப்ரரியன் கூட பூர்ணிமாவிடம் “மேடம் அவர் கத்தி, சண்டை, அருவா இருக்கும் படங்களாக எடுத்து செல்கிறார். ஆனால், அவர் எடுக்கும் படங்கள் வேறு மாதிரி உள்ளதே” என்பார். நான் பார்க்கும் சினிமாவில் சண்டைக் காட்சிகள் இருந்தால் தான் எனக்கு பிடிக்கும். அப்படி இருக்க, ஆனந்த கிருஷ்ணனின் முதல் படமான மெட்ரோ பார்க்கும் போது, அதில் திட்டமிடல், கண்டுபிடிக்கும் விதம் என அனைத்தையும் கட்சிதமாக செய்திருந்தார். சினிமாவில் ஒரே ஒரு விஷயம் தான். ஒன்று புதிதாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இல்லை என்றால் ஒரு விஷயத்தை புதிதாக செய்ய வேண்டும். அப்படி தான் அவரின் மெட்ரோ படத்தின் திரைக்கதை இருந்தது. அந்த படத்தில் அம்மா, அண்ணன் தம்பி சென்டிமென்ட் என அனைத்தையும் வைத்து ஆனந்த கிருஷ்ணன் சிறப்பாக செய்திருந்தார். அப்போது நான் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னேன், இப்போது தான் அவரை முதல் முதலாக நேரில் சந்திக்கிறேன்.
இந்த படத்திற்கு அவர் “ராபர்” என பெயர் வைத்திருக்கிறார். அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒரு திருடன் எப்படி திருடுகிறான், அதை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை விரிவாக சொல்லியிருப்பார். அதே போல் ஆனந்த கிருஷ்ணனுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும், ஏனென்றால், அவர் தனது உதவியாளருக்கு தன் கதையை கொடுத்து படத்தை இயக்க சொல்லியுள்ளார். பெரும்பாலும் இப்படி ஒரு செயலை செய்வது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். அதை கவிதாவும் ஏற்றுகொண்டு படத்தை தயாரித்தது என்பது சரியான புரிதல் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இது சினிமாவில் மிக ஆரோக்கியமான விஷயம், நானே கூட பார்த்திபனின் முதல் படத்திற்கு தயாரித்து பூஜை கூட செய்தேன், வேறு சில காரணங்களால் படத்தை எடுக்க முடியாமல் போனது. பிறகு நானே தான் பாண்டியராஜனுக்கு என்னுடைய பேனரில் கதை எழுதிக் கொடுத்து இயக்கம் செய்ய வைத்தேன். இது போன்ற புரிதல் இயக்குனருக்கும், உதவி இயக்குனருக்கும் இருக்க வேண்டும்.
எந்த அளவிற்கு தனது உதவியாளர் மீது நம்பிக்கை வைத்திருந்தால் ஆனந்த கிருஷ்ணன் கதையையும் கொடுத்து, படத்தை தயாரிக்கவும் செய்திருப்பார் என்பதை நினைத்தால் மிக சந்தோஷமாக உள்ளது. இப்படத்தை தயாரித்த கவிதாவிற்கும் பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். மீண்டும் இப்படத்தின் வெற்றி விழாவில் சந்திப்போம், நன்றி என்றார்.
விழாவில் கலை இயக்குனரால் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த பொக்கிஷ பெட்டியில் சங்கிலி மற்றும் கிரெடிட் கார்டு மூலம் கோர்த்து செய்து இருந்த ராபர் இசைத்தகட்டை தாணு, தியாகராஜன், பாக்யராஜ் இருவரும் வெளியிட அம்பிகா, ரம்பா இருவரும் பெற்றுக் கொண்டார்கள்..
விழாவில், பெண் பத்திரிகையாளர்களுக்கு மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்த நினைவு பரிசை அம்பிகா ராதா இருவரும் சேர்ந்து வழங்கினர்.. மொத்ததில் ராபர் இசை விழா மகிழ்ச்சி யும் நெகிழ்ச்சியாக நிறைவடைந்தது.. படம் வரும் வெள்ளி கிழமை 14ம் தேதி வெளியாகிறது..