ஒரு கன்னிப்பெண் தந்தையின் கடுஞ்சொற்கள் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள அது தற்கொலை அல்ல, இயற்கையான மரணம் தான் என்று ஊர் மக்களை நம்ப வைத்து சாவை எடுக்க நினைக்கும் போது அந்த பெண்ணின் பிணத்தை யாராலும் தூக்க முடியவில்லை. பல பேர் சேர்ந்து அந்தப் பிணத்தின் கட்டிலை தூக்கும்போது கட்டில் நிமிர்ந்து பிணம் கால் படாமல் கட்டிலில் அந்தரத்தில் இருக்கிறது.
இது ஏன் எதனால் என்று ஊர் மக்கள் அனைவரும் தங்கள் யூகங்களை வெளிப்படுத்தும்போது பல பூதகரமான விஷயங்கள் மக்களுக்கு தெரிய வருகிறது. அதற்கு காரணம் யார் என்ன என்று விசாரிக்கும்போது எதிர்பாராத திருப்பங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. முடிவில் என்ன ? இதுவே எமகாதகியின் கதைக்களம்.
லீலாவாக திரையில் தோன்றும் நடிகை ரூபா கொடவாயூர் அடிப்படையில் பரதநாட்டிய கலைஞர் என்பதால் கதாபாத்திரத்தின் உணர்வை துல்லியமாக உள்வாங்கி அழகாகவும் , நேர்த்தியாகவும் பிரதிபலித்து ரசிகர்களின் மனதில் நீக்கமற நிறைகிறார். குறிப்பாக சடலமாக நடிக்கும் போதும் அவர் வெளிப்படுத்தும் பாவனை அழகு.
லீலாவின் காதலரான அன்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நாகேந்திர பிரசாத், லீலாவின் சகோதரர் முத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சபாஷ் ராமசாமி,இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
லீலாவின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர் ராஜு ராஜப்பனும் இயல்பாக நடித்து, அந்த கதாபாத்திரத்தை உயிரூட்டி இருக்கிறார். இவர்கள் எல்லாரையும் விட நீலாவின் தாயாக நடித்திருக்கும் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கீதா கைலாசம் உச்சகட்ட காட்சியில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.
கிராமம் , ஒரு வீடு , அதற்குள் ஒரு பிணம் , குறைவான மக்கள், எனும் இந்த கதை களத்தின் பின்னணியில் சுப்பர் நேச்சுரல் திரில்லர் அம்சங்களை நேர்த்தியாக வழங்கி, ரசிகர்களை சில அற்புதமான பட மாளிகை அனுபவத்தை உணரச் செய்த ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், பின்னணி இசையை தந்த இசையமைப்பாளர் ஜெஸின் ஜோர்ஜ் ஆகியோரை தாராளமாக பாராட்டலாம்
குறைந்த பொருட்செலவில் ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் கதைக்களம் அமைந்திருக்கிறது. இயக்குனர் எந்த ஒரு இடத்திலும் திரைக்கதையை தொய்வில்லாமல் நம்மை ஒரு பதைபதைப்புடன் இருக்குமாறு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். புது முகங்கள் என்றாலும் படத்திற்கு கதை தான் நாயகன், நாயகி என்பதை இந்த படத்தின் மூலம் இயக்குனர் நிரூபித்து இருக்கிறார்.
எமகாதகி – இது கதையல்ல நிஜம்