பாய் ஃப்ரெண்ட் தன்னை பர்த்டேயில் கட்டி பிடித்ததை கண்டித்த தாயிடம் கோபித்துக் கொண்டு ரயிலில் செல்லும் பெண்ணிற்கு ரயில் டிக்கெட் பரிசோதராக வரும் யோகி பாபு சொல்லும் நான்கு தாய் பாசத்தின் கதைகளின் தொகுப்பை நமக்கு வழங்கி இருக்கிறார் இயக்குனர்.
ஒரு கதையில் சுரேஷ் மேனன், நட்டி மும்பையில் நடக்கும் நிழல் உலக தாதாக்களின் கதையில் வரும் தாய்ப்பாசம். அடுத்து பாரதிராஜா, வடிவுக்கரசி இவர்களின் வயோதிகத்தில் இருக்கும் காதல் மகன்களின் அலட்சியம், தாய் பாசத்தின் அருமை, காதல் என ஒரு பக்கம்.
அடுத்து மீனவ கிராமம்.. தாய்க்கு புற்றுநோய்.. அவளைக் காப்பாற்ற சமூக விரோத செயலை செய்ய முற்படும் நாயகன்.. அதனால் ஏற்படும் இழப்பில் தாயின் மரணம்.. அடுத்து தாய் தந்தை இல்லாத, ஆட்டோ ஒட்டும் நாயகன்.. வெளிநாடு செல்லும் தம்பதிகள், தன் தாயை ஆசிரமத்தில் சேர்க்க விரும்பும் மகன்.. தாய் நாயகனின் ஆட்டோவில் ஏற நாயகனுக்கு அவர் மீது தாய் பாசம் ஏற்பட்டு தன்னோடு வைத்துக் கொள்ள அவரை விரட்டி விட்டால் தான் நம் கல்யாணம் நடக்கும் என்று சொல்லும் காதலி.. அனாதை தாய்க்காக தன் திருமணத்தையே தூக்கி எறியும் நாயகன்..
என நான்கு கதைகள் நான்கு கோணங்கள்.. அதை கேட்ட பிறகு, அந்தப் பெண் தன் அம்மா மீதான கோபத்தை கைவிட்டாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
மும்பை தாதாவாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், பெற்ற பிள்ளைகளின் அன்பை தவறவிட்டு முதுமையில் தள்ளாடும் பாரதிராஜா – வடிவுக்கரசி இணை, கடலோர கிராமத்தில் நோயுடன் போராடும் அம்மாவை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் ரியோ ராஜ், காதலியா? அம்மாவா? என்ற புள்ளியில் அம்மாவை தெரிவு செய்யும் சாண்டி மாஸ்டர் – என ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், நடிகர்கள் தங்களின் நேர்த்தியான நடிப்பை வழங்கி ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரபலமான நட்சத்திர முகங்கள் நிறைந்திருப்பதால் அனைவருமே தங்களின் அனுபவம் கலந்த நடிப்பை அளித்து, திரையை ஆக்கிரமித்து உணர்வு பூர்வமான தருணங்களை பார்வையாளர்களுக்கு எளிதாக கடத்தி படைப்பின் நோக்கத்தை பூர்த்தி செய்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு நேர்த்தி. இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசையும் ஓகே ரகம் தான்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பந்தத்தை, சிக்கல்களை, தாய் பாசத்தை உணர்வுப்பூர்மாக எழுதி இயக்கியிருக்கும் பிரிட்டோ ஜே.பி, நான்கு கதைகளையும் அம்மா செண்டிமெண்டோடு சொன்னது தவறில்லை, ஆனால் நான்கு கதைகளிலும் அளவுக்கு அதிகமான சோகத்தை பிழிந்திருபதை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை