இரு மகன்களுக்கு தந்தையான முதியவர் இறந்து விட அவர் உயிர் நாடி உயரமாக நீண்டிருக்கிறது. அதை மறைக்க அவதிப்படும் காட்சிகளை காமெடி என்ற பெயரில் காம நெடியாக தந்திருக்கும் படம் பெருசு. எது பெருசு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
வைபவ், சுனில், முனிஸ்காந்த் நிகாரிகா, சாந்தினி, ரமா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து தங்கள் பெயரை எடுத்துக் கொண்டவர்கள்.
நகைச்சுவை என்பது ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். அந்த ரசிப்பு தன்மை காமம் தான் என்பது மிகவும் கொடுமையானது. கதையின் கருவே வெளியே செல்லும்படியாக இல்லை. படத்தில் நடித்த அனைவரும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கதையை எப்படி சொல்வது என்று தெரியாமல் திக்கித் திணறி படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று நழுவிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் நடிக்க எப்படி ஒத்துக் கொண்டார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
பிணமாக கிடப்பது தன் அக்காளின் கணவர் என்று தெரிந்தும் அவர் உயிர்நாடியை மறைந்து மறைந்து பார்க்கும் தீபா சங்கருக்கு அப்படி என்ன சந்தோஷம் என்பதை இயக்குனர் தான் விளக்க வேண்டும். மருமகள் இருவரும் மாமனாரின் உயிர்நாடியை பார்த்து முகம் சுளிக்காமல் ரசிப்பது காமெடியாம். அந்த உயிர்நாடியை மடக்க வைபவும் சுனிலும் படும் பாடு நகைச்சுவை என்ற கோணத்தில் இயக்குனர் நமக்கு சொல்லி இருக்கிறார்.
இறுதிக்காட்சியில் அந்த பெரியவரின் “சின்ன வீடு” அவர் மேல் விழுந்தவுடன் உயிர்நாடி ஒழுக்கமாகிவிடுகிறது. அட அட அட.. படத்தோட டைரக்டருக்கு நிச்சயமா கை கொடுத்தே ஆகணும். கற்பனைக்கும் எல்லை உண்டு.. அந்த கற்பனை மற்றவர்கள் முகம் சுளிக்காமல் இருக்க வேண்டும் அதுதான் ஆரோக்கியமான நகைச்சுவை..
தந்தையின் பிணத்தை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மாட்டுக்கு கருத்தடை செய்யும் இடத்திற்கு சென்று உயிர்நாடியை ஓய்வெடுக்க செய்யும் காட்சி மிகக் கேவலமான கற்பனை.. படத்திற்கு ஏ சர்டிபிகேட் பெரியவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் நமக்கு சிறிய ஆறுதல் என்றாலும் பெண்கள் எப்படி இந்த படத்தை பார்ப்பார்கள் என்பது இயக்குனருக்கே வெளிச்சம். படம் முழுவதும் பெண்களின் விரசத்தை மேலோங்கி வைத்திருக்கிறார் இயக்குனர். எதற்காகவோ போராடும் மாதர் சங்கங்கள் இது போன்ற படத்தை தடை செய்ய ஏன் போராடவில்லை என்பதே நமதுகேள்வி ?
பெருசு ; தமிழ் சினிமாவின் கரும்புள்ளி