சத்யா, தீபா சங்கர், டோனி, ஜெயபிரகாஷ், சென்றாயன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ராபர்.
கதைக்களம் ; கிராமத்தில் தன் தாயுடன் வசித்து வரும் நாயகன் வருமானத்தை தேடி சென்னை வர BPO வேலை கிடைக்கிறது. ஆனால் நாயகனுக்கு பெண்களின் மீது நாட்டம் அதிகம். ஆனால் எந்த பெண்ணும் அவனை நாடவில்லை. காரணம் பணம். பணத்தை எப்படி சம்பாதிப்பது முடிவெடுக்கிறான். செயின் பறிப்பில் ஈடுபடுகிறான். அதை விற்பனை செய்யும் வழக்கமான நபர் இறந்துவிட, புதிய நபருடன் தொடர்பில் இருக்கிறார்.
இது ஒருபுறம் செயின் பறிப்பில் ஈடுபடும்போது ஒரு பெண்ணின் உயிர் பறிபோகிறது. கொன்றவனை பழிவாங்க இறந்து போன பெண்ணின் தந்தை ஜெயபிரகாஷ் கோபத்தில் இருக்கிறார். இன்னொரு புறம் திருட்டு நகை வாங்கும் புதிய நபருடன் ஏற்பட்ட பிரச்சனையில் கைகலப்பு கொலையில் முடிகிறது. அதற்கு பழிவாங்க டோனி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை ஜெயபிரகாஷுக்கு நாயகன் சத்யாவின் போட்டோவை அனுப்பி இவன்தான் உங்கள் பெண் சாவுக்கு காரணம் என்று சொல்ல சத்யாவை பழிவாங்கும் நோக்கில் ஜெயபிரகாஷ் சத்யாவை கடத்தி சித்திரவதை செய்கிறார். பின்னர் நடப்பது என்ன ? ராபர் படத்தை பாருங்கள்..
மெட்ரோ படத்தில் உதவி இயக்குனராக பணி செய்கின்ற எம் எஸ் பாண்டி இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். தன் சிஷ்யனுக்காக கதையைக் தந்திருக்கிறார். மெட்ரோ படத்தின் இயக்குனர் குருவின் கதையை சிதைக்காமல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர். நாயகன் சத்யா.. நாயகனாக முதல் படம் என்றாலும் தன் நடிப்பின் மூலம் பண்பட்ட நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். அதுவும் CC கேமரா இல்லாத இடத்தில் கொள்ளை அடிப்பது அவருக்கு கைவந்த கலை. கொள்ளையடித்த பணத்தில், பெண்களிடம் உல்லாசம் என ராஜபோக வாழ்க்கை வாழ்த்து இன்றைய இளைஞர்களின் மறுபக்கத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.
படத்தின் பெயர் ராபராக இருந்தாலும் படம் சொல்ல வரும் கருத்து பெண்கள் பாதுகாப்பு. ஒரு சமூக சிந்தனையோடு கதையை வடிவமைத்திருக்கும் மெட்ரோ படத்தின் இயக்குனருக்கும், படத்தை சிறப்பாக இயக்கிய எம்எஸ் பாண்டி அவர்களுக்கும் ஒரு கைதட்டல் தந்தே ஆக வேண்டும். பெண்கள் வெளியே செல்லும்போது தன் உடைமைகளை பாதுகாத்துக் கொள்வது அவர்கள் கையில் தான் உள்ளது என்பதை இப்படம் மிகவும் வலியுறுத்துகிறது.
சென்றாயன் மூலம்தான் இந்த படத்தின் கதை சொல்லப்படுகிறது. இறுதிக்காட்சியில் இவரின் நடிப்பு சிறப்பு. தீபா சங்கர் நாயகனின் தாய். இறுதிக்காட்சியில் இவர் செய்யும் செயல் படம் பார்க்கும் நம்மை சீட் நுனிக்கு வரச்செய்து நம் கண்களில் கண்ணீரை வர வைத்து விடுகிறார்.
ராபர் படம் நாம் சினிமா தான் என்று விட்டு விட முடியாது. இதன் நிஜம் ஆங்காங்கே நடந்து கொண்டே தான் இருக்கிறது. குற்றங்கள் குறைந்தாலும் முழுவதுமாக தடுக்க முடியவில்லை. குற்றம் குறைவதற்கு காரணம் சென்னையில் நிறைய இடங்களில் CCகேமரா இருப்பது தான். குற்றங்கள் நடப்பது அந்த CC கேமரா இல்லாத இடத்தில். CC கேமராவை அனைத்து இடங்களிலும் பொருத்திவிட்டால் குற்றச் செயல்கள் தடுக்கப்படும் என்பதை இந்த படம் சொல்ல வருகிறது என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.
படம் என்பது பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல.. சமுதாயத்திற்கு ஒரு சிறந்த செய்தியை சொல்வதாக இருக்க வேண்டும்.. அதை இந்த ராபர் படம் நிறைவேற்றி இருக்கிறது. குறைகள் சில இருப்பினும், நிறைகளை கண்டு குறைகளை மறப்போம்.
ராபர்- படம் அல்ல பாடம்
ரேட்டிங் ; 👍👍👍