ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”, வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி, உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உகாதி, குடி பட்வா, சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும் நாளில் வெளியாகவுள்ளதால், இந்தியாவில் நான்கு நாட்கள் நீடிக்கும் விடுமுறை வார இறுதி மூலம் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு மார்ச் 20/21 ஆம் தேதி இஃப்தார் பண்டிகையும் வருவதால், ரசிகர்கள் கொண்டாட இது ஏதுவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திரைப்படம் கன்னட சினிமாவுக்குப் புதிய உயரங்களைத் தரவுள்ள அதே சமயத்தில், உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. கன்னட மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வரும் முதல் பெரிய இந்தியத் திரைப்படம் என்பதாலேயே ‘டாக்சிக்’ திரைப்படம், உலக நாடுகளை இணைக்கும் பாலமாக செயல்பட உள்ளது. இந்திய மற்றும் சர்வதேச சினிமாவின் திறமையான கலைஞர்கள் இப்படத்தில் ஒருசேர பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படவுள்ளது, இதன்மூலம் அனைத்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடிக்க உள்ளது.
படத்தின் வெளியீட்டுத் தேதியைக் குறிக்கும் விதமாக ஒரு அசத்தலான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், நெருப்பிலிருந்து எழும்பும் யாஷின் அதிரடியான தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இது சுவாரஸ்யமான கதைப் பின்னணியை விவரிக்கிறது. இந்தப் போஸ்டர், யாஷின் பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்ட டீசருக்கு பின்னர், ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.
இந்த மாபெரும் படைப்பை இயக்கும் இயக்குநர் கீது மோகந்தாஸ், சர்வதேச அளவில் பாராட்டுக்களைக் குவித்த இயக்குநர் ஆவார். சண்டேன்ஸ் திரைப்பட விழாவில், திரைப்படங்கள் உணர்ச்சி மிகுந்த கதை மாந்தர்களைக் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்டதற்காக, பல்வேறு விருதுகளை வென்றுள்ளன.
வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், 2026 மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.