இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான நடிகை சீமா பிஸ்வாஸ் மிகவும் கவனமாகத் தனது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ’பண்டிட் குயின்’, ’காமோஷி’ மற்றும் பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் பான்-இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், 2003 ஆம் ஆண்டில் வெளியான ‘இயற்கை’ படம் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, 2006 இல் வெளியான ‘தலைமகன்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 28 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸில் நடித்திருக்கிறார்.
இந்த வெப்சீரிஸில் பணிபுரிந்த அனுபவம் பற்றி நடிகை சீமா பிஸ்வாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “புராணங்கள், சடங்குகள் என இந்த வெப்சீரிஸின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. வில்லனுக்கு தகவல் கொடுத்து அடையாளம் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரம் பாசிடிவ், நெகடிவ் என பல லேயர் கொண்டது. கதை கேட்கும்போதே என் கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தை அறிந்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இயக்குநர் ராமு செல்லப்பா அர்ப்பணிப்பு, விடாமுயற்சி கொண்டவர்.
மொழிபெயர்ப்பாளர் மூலம் எனக்கு கதை சொல்ல அவர் மும்பைக்கு வந்தார். படப்பிடிப்பு தளத்தில் மொழி எனக்கு தடையாக இருக்கும் என்று நினைத்து கவலைப்பட்டேன். ஆனால், படப்பிடிப்பு முழுக்க இயக்குநர் ராமு செல்லப்பா எனக்கு உதவி செய்தார்” என்றார்.
’ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸ் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28, 2025 அன்று வெளியாகிறது.