தமிழகத்தின் தென் பகுதி ஒன்றில் காவல்துறை உயரதிகாரியாக பணியாற்றுகிறார் அருணகிரி ( எஸ் ஜே சூர்யா) இவருக்கு தொழில் ரீதியாக இடையூறை ஏற்படுத்தி, துறை ரீதியான விசாரணையை மேற்கொள்ள செய்த காரணத்திற்காக அதே பகுதியில் அசைக்க முடியாத செல்வாக்குடன் சட்டவிரோத செயல்களை செய்து சட்ட ரீதியாக தண்டிக்க இயலாத குற்றவாளியான ரவி ( பிருத்விராஜ் ) அவரது மகன் கண்ணன் ( சுராஜ் வெஞ்சரமூடு) ஆகியோரை என்கவுண்டர் மூலம் தீர்த்துக்கட்ட நினைக்கிறார். இதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தத் தருணத்தில் அவர் மீது ஒருவர் புகார் கொடுக்க இதுதான் சரியான தருணம் என்று விடிவதற்குள் ரவியும் கண்ணனையும் என்கவுண்டர் செய்வதற்காக திட்டமிடுகிறார் அருணகிரி. இதனை மோப்பம் பிடித்த ரவி, தனது மகன் கண்ணனை காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்குகிறார். அத்துடன் பழைய சரித்திர பதிவேட்டு குற்றவாளியான காளி( விக்ரம்)யை சந்தித்து காவல்துறையின் என்கவுண்டரில் இருந்து தனது மகனை காப்பாற்றுவதற்காக அவரது உதவியை கேட்கிறார்.
இதற்கு காளியின் மனைவியான கலைவாணி ( துஷாரா விஜயன்) எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனாலும் காளி தனது குடும்ப நன்மைக்காக ரவியின் கோரிக்கையை ஏற்கிறார். இதன் பின்னணி என்ன? இதன் பிறகு என்ன நடந்தது? யார் யாரை தீர்த்து கட்டினார்கள்? ஏன்? என்பதை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.
காவல்துறை அதிகாரி, தாதா, திருந்தி வாழும் அடியாள், இந்த மூவருக்கு இடையே ஒரு நாள் இரவில் நடைபெறும் போட்டிதான் இப்படத்தின் சுவாரசியமான கதை.
படத்தின் கதையை முதல் காட்சியிலிருந்து தொடங்கி விடுகிறார்கள். இது முதலில் வெளியாகும் இரண்டாம் பாகம் என்பதால் இதற்கான காரணம் முதல் பாகத்தில் இடம்பெறக்கூடும். உண்மை சம்பவங்களை தழுவி எழுதப்பட்டிருக்கும் கதை என்பதால் கதை மாந்தர்கள் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகிறார்கள். இதனை நடிகர்களும் உணர்ந்து, தங்களின் சிறந்த நடிப்பை வழங்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
குறிப்பாக காளி- கலைவாணி தம்பதியினர். இவர்களின் காதலும், சேட்டைகளும், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வெளிப்படுத்தும் ஆக்ரோஷங்களும், ஆவேசங்களும், ஆதங்கங்களும் படு சிறப்பு. இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சீயான் விக்ரமும், துஷாரா விஜயனும் பொருத்தமான தேர்வு. அதிலும் காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சியான் விக்ரம் காவல் நிலையம்- திருவிழா – என எந்த தருணத்தில் திரையில் தோன்றினாலும் தனித்துவமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.
வழக்கமான நடிப்பிலிருந்து விலகி இயல்பான நடிப்பை வழங்கி எஸ். ஜே .சூர்யாவும் ரசிகர்களுக்கு வியப்பை உண்டாக்குகிறார். உச்சகட்ட காட்சியில் இந்த கதாபாத்திரம் பலவீனப்படுத்தப்பட்டிருப்பது உறுத்தல்.
ரவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் சுராஜ், இருவரும் தங்களுக்கான பங்களிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இயக்குநரின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கி ரசிகர்களுக்கு உற்சாக விருந்தினை படைத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்- இசையமைப்பாளர் – படத்தொகுப்பாளர்- கலை இயக்குநர் – அடங்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவினர். இவர்கள் அனைவரையும் மனதார பாராட்டலாம்.
கதை ஓட்டத்தில் பார்வையாளர்களுக்கு பல கேள்விகள் எழுகிறது. இதற்கு படத்தின் முதல் பாகம் அல்லது படத்தின் மூன்றாம் பாகத்தில் விடை கிடைக்கும் என நம்பலாம்.