தணிக்கை குழுவினரால் நீக்கப்பட்ட காட்சிகளுடன் மீண்டும் வரும் ‘செம்பியன் மாதேவி’! – மார்ச் 28 ஆம் தேதி ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தில் வெளியாகிறது
8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பத்மநாபன் லோகநாதன் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்த படம் ‘செம்பியன் மாதேவி’. சமூகத்தில் நடக்கும் சாதி பாகுபாட்டினை மையப்படுத்தி உருவான இப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் வியாபார ரீதியாக எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. காரணம், இப்படம் வெளியான போது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முன்னணி இயக்குநர் ஒருவரது படத்தால் போதிய திரையரங்குகள் கிடைகாமல் போனது. இருந்தாலும், இப்படத்தின் கதைக்களம் மற்றும் சொல்லப்பட்ட கருத்து ஆகியவற்றை பத்திரிகையாளர்கள் மட்டும் இன்றி படம் பார்த்தவர்களும் வெகுவாக பாராட்டினார்கள்.
இந்த நிலையில், முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான ராஜ் தொலைக்காட்சியின் ஓடிடி நிறுவனமான ராஜ் டிஜிட்டல் டிவி, ‘செம்பியன் மாதேவி’ படத்தை வரும் மார்ச் 28 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீம் செய்ய உள்ளது. குறிப்பாக, தணிக்கை குழுவினரால் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்களுடன் ‘செம்பியன் மாதேவி’ வெளியாக இருப்பதால், திரையரங்கில் பார்க்க தவறியவர்கள் மற்றும் திரையரங்கில் பார்க்காத காட்சிகளுடன் இப்படத்தை மீண்டும் பார்க்க இது ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
இதற்கான அறிவிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி இன்று (மார்ச் 26) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், ‘செம்பியன் மாதேவி’ படத்தின் இயக்குநர் மற்றும் நாயகன் லோக பத்மநாபன், ராஜ் டிஜிட்டல் டிவி நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த், நடிகர் மணிமாறன், நடிகை ரெஜினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் இயக்குநர் லோக பத்மநாபன் பேசுகையில், “செம்பியன் மாதேவி படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஊடகங்கள் படத்தை வெகுவாக பாராட்டியதோடு, சிறிய முதலீட்டு படம் என்றாலும் மக்களுக்கான படம், என்று பாராட்டியது. அதே சமயம், படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்காமல் போனதால், போதிய மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. இதற்கிடையே, சிறிய படங்களை வாங்குவதை ஓடிடி நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் தற்போதைய சூழலில், எங்கள் படத்திற்கு கிடைத்த பாராட்டு குறித்து அறிந்து, ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி நிறுவனம் எங்களை அணுகி எங்கள் படத்தை வெளியிட முன் வந்திருக்கிறார்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் மூலம், ‘செம்பியன் மாதேவி’ திரைப்படம் உலகம் முழுவதும் பார்க்கலாம்.” என்றார்.
ராஜ் டிஜிட்டல் டிவி நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் பேசுகையில், “’செம்பியன் மாதேவி’ படத்தை நான் பார்த்தேன், சிறப்பாக இருந்தது. ஊடகங்களும் இந்த படத்தை பாராட்டியிருந்தது. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால், இந்த படம் மிகப்பெரிய அளவுக்கு சென்றிருப்பதோடு, பல முன்னணி ஓடிடி நிறுவனங்கள் படத்தை வாங்கியிருக்கலாம். ராஜ் டிவி ஓடிடியின் நோக்கமே சிறிய படங்களுக்கான தளமாக இயங்க வேண்டும் என்பது தான். ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தின் சப்ஸ்கிரைபர் ஒரு லட்சத்தை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல், ஜியோ, ஏர்டெல் என அனைத்திலும் ராஜ் டிவி ஓடிடி உள்ளது. படத்தில் நடித்திருப்பவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வரும் மார்ச் 28 ஆம் தேதி ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தில் செம்பியன் மாதேவி படத்தை வெளியிடுகிறோம். இதன் மூலம், இவர்கள் யார்? என்பது உலகத்துக்கு தெரிய வரும் என்று நம்புகிறோம். இவர்களுடைய அடுத்தடுத்த படைப்புகளையும் எங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடுவது குறித்து பேசி வருகிறோம். அனைத்தும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.
நடிகர் மணிமாறன் பேசுகையில், “செம்பியன் மாதேவி படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தது. திரையரங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் நான் நாயகனின் சித்தப்பாவாக நல்ல ஒரு வேடத்தில் நடித்திருக்கிறேன். படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று நிறைய பேர் கேட்டு வந்தார்கள். இன்று ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தில் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்களிடமும் சென்றடைய வேண்டும் என்பது என் ஆசை. அது இப்போது நடக்கப் போகிறது, நன்றி.” என்றார்.
செம்பியன் மாதேவி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ரெஜினா பேசுகையில், “செம்பியன் மாதேவி படத்தை சிறு முதலீட்டு படம் என்று சிலர் சொன்னாலும், இதில் எங்களுடைய உழைப்பு என்பது மிகப்பெரியது. ராஜ் டிவி ஓடிடியில் படம் வெளியாவதன் மூலம், இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் கருத்து அனைவரிடமும் சென்றடையும் என்று நம்புகிறோம். இந்த படத்தின் படப்பிடிப்பு செஞ்சியில் நடக்கும் போது கடுமையான வெயில் இருந்தது. அதை பொருட்படுத்தாமல் பத்து சார் கடுமையாக உழைத்தார். எங்களது இந்த உழைப்பு இப்போது ராஜ் டிவி ஓடிடி மூலம் உலகம் முழுவதும் தெரியப்போவது மகிழ்ச்சி, நன்றி.” என்றார்.
தணிக்கை குழுவினரால் நீக்கப்பட்ட காட்சிகள் சேர்க்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த லோக பத்மநாபன், “ஆம், தணிக்கை குழுவினரால் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் அனைத்தையும் மீண்டும் இணைத்து தான் ஓடிடியில் வெளியிடுகிறோம். அது என்ன வசனம், காட்சி என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் படத்தை பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். படம் 2 மணி நேரம் 20 நிமிடம் இருந்தது. சில வார்த்தைகளை மியூட் பண்ணும்படி சொன்னார்கள். ஆனால், அது வட்டார மொழி என்பதால், அது கதையோடு இருந்தால் தான் நன்றாக இருக்கும், மேலும் அதை நீக்கினால் கதையுடன் தன்மை மாறிவிடும், என்று நாங்கள் எவ்வளவோ எடுத்து கூறினாலும், அனுமதிக்கவில்லை. இப்போது அதை சேர்த்து படத்தை வெளியிடுகிறோம். ராஜ் டிவி ஓடிடி தளத்தில் நாம் பார்த்து வியந்த படங்கள் அனைத்தும் இருக்கிறது. அந்த படங்களின் வரிசையில் எங்களது படமும் இணையப் போவது என்பது பெருமையாக இருக்கிறது. நிச்சயம் இதன் மூலம் எங்கள் படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.
உங்களது அடுத்த பயணம் ஹீரோவாக இருக்குமா அல்லது இயக்குநராக இருக்குமா? என்ற கேள்விக்கு, “நான் பொதுவாக உதவி இயக்குநராக பணியாற்றியவன். 2009 ஆம் ஆண்டு முதல் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தேன். அப்போது என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் படம் இயக்கும் போது, புது ஹீரோவை தேடி போவதை விட, ஏற்கனவே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்த நீயே நடித்து விடு என்று என்னை கேட்டுக்கொண்டார்கள். அப்படி நான் இதுவரை நான்கு படங்களில் ஹீரோவாக நடித்து விட்டேன். அந்த படங்களின் வெளியீட்டுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். எனது அடுத்தப் பயணம் என்றால் அது இயக்குநர் தான். முன்னணி ஹீரோ ஒருவரை வைத்து படம் இயக்க இருக்கிறேன். அதற்கான அறிவிப்பை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிக்க இருக்கிறது.” என்றார்.
முதல் படத்திலேயே சாதி தொடர்பான படம் எடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், “சாதி படம் இல்லை, இவர்கள் இந்த சாதி, அவர்கள் அந்த சாதி என்று எங்கேயும் நான் குறிப்பிடவில்லை. பொதுவான கருத்துகளுடன் தான் படம் இருக்கும். சமூகத்திற்கான ஒரு படமாக தான் நான் இயக்கியிருக்கிறேன். நான் நடிகராக வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வரவில்லை. நான் கடலூர் அருகே உள்ள கிராமத்தில் இருந்து சென்னைக்கு வர காரணம், பாடகராக வேண்டும் என்பது தான். சென்னையில் உள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த போதே, உதவி இயக்குநர் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பக்கம் இசைக் கல்லூரி மறுபக்கம் உதவி இயக்குநர் என்று வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் படம் இயக்கும் போது, பட்ஜெட் காரணமாக தான் நடிக்க முடிவு செய்தேன். வேற ஹீரோக்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத பட்சத்தில் தான் நானே ஹீரோவாக நடிக்க வேண்டியதாகிவிட்டது. படம் தயாரித்ததும் அப்படி தான், வேறு ஒருவர் தயாரிக்க இருந்து, அவரிடம் பணம் இல்லாத காரணத்தால், நானே தயாரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதல் படம் சமூகத்திற்கான படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் சமூகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கினேன். நான் இயக்கும் அடுத்த படமும் சமூகத்திற்கான படைப்பாக தான் இருக்கும். ஆனால், அதில் சாதி பற்றி எந்த விசயமும் இருக்காது. கமர்ஷியலான சமூகத்திற்கான படமாக இருக்கும்.” என்றார்.