spot_img
HomeNews“வடிவேலு நிச்சயமாக என்னுடன் இணைந்து நடிப்பார்” ; நடிகர் ஆர்கே உறுதி

“வடிவேலு நிச்சயமாக என்னுடன் இணைந்து நடிப்பார்” ; நடிகர் ஆர்கே உறுதி

 

எல்லாம் அவன் செயல் என்கிற தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர்  நடிகர் ஆர்கே. நடிகர், தயாரிப்பாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், இதையெல்லாம் தாண்டி வெற்றிகரமான தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர் நடிகர் ஆர்கே. இப்போது புதிதாக வடபழனியில் மூன்று அடுக்குகள் கொண்ட பிரமாண்ட படப்பிடிப்பு ஸ்டுடியோ ஒன்றையும் நிர்மாணித்துள்ளார். ஆர்கே.

இன்னொரு பக்கம் கடந்த 15 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் விஐபி நிறுவனத்தின் மூலமாக பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டவர் ஆர்கே.  குறட்டைக்கு மட்டுமல்ல கொரோனாவுக்கும் தீர்வு கண்டுபிடித்த இவர் விஐபி ஹேர் கலர் ஷாம்பு என்கிற கண்டுபிடிப்பின் மூலம் உலக அரங்கில் ஒரு சாதனை தமிழனாக நிமிர்ந்து நிற்கிறார்.

இவரது சேவைக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்கும் விதமாக ஏற்கனவே 18 நாடுகள் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளன. நான்கு வருடங்களுக்கு முன்பு மலேசிய அரசின் உயரிய விருதான டத்தோ ஸ்ரீ விருது. இந்தநிலையில் தற்போது ATJEH DARISSALUM மன்னருக்கு அடுத்ததாக கருதப்படும் டான் ஸ்ரீ என்கிற உயரிய விருதையும் ATJEH DARISSALUM மன்னர் கையால் பெற்றுள்ளார் ஆர்.கே.

இது கிட்டத்தட்ட பிரிட்டிஷ் அரசு வழங்கும் ‘சர்’ பட்டத்திற்கு நிகரானது. இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது.  ஆர்கேவை மேலும் சிறப்பிக்கும் விதமாக கிட்டத்தட்ட 400 வருடம் பழமை வாய்ந்த, தனக்கு இன்னொரு மன்னரிடம் இருந்து பரிசாகக் கிடைத்த இரண்டு வாள்களையும் அந்த நாட்டின் நினைவுச் சின்னமாக ஆர்கேவுக்கு தன் கையால் பரிசளித்துள்ளார் ATJEH DARISSALUM மன்னர்.

இந்தநிலையில் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ஆர்கே தனக்கு கிடைத்த இந்த மிக உயரிய கெளரவம், சினிமாவில் தனது அடுத்த படம் குறித்தெல்லாம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர் என்கிற வகையில் 18 நாடுகள் எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்துள்ளன. உள்ளூரில் கிடைக்கும் விருதுகளை விட வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் ஆஸ்கர், குலோப் விருதுகளை தான் இங்கே பெரிதாக நினைப்பார்கள், அப்படி வெளிநாட்டு மன்னர் ATJEH DARISSALUM இடமிருந்து தமிழனுக்கும் தமிழன் செய்த தொழிலுக்கும் ஒரு வரவேற்பாக எனக்கு இந்த ‘டான் ஸ்ரீ’ பட்டம் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல அவரிடம் இருந்து மிக உயர்ந்த பரிசாக இரண்டு விலைமதிப்பற்ற வாள்களும் எனக்கு பரிசாக வழங்கப்பட்டன. என்னுடைய சமூக நலன் சார்ந்த சேவைக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தான் இந்த டத்தோ ஸ்ரீ மற்றும் டான் ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

என்னுடைய தன்னம்பிக்கை பேச்சால் பல பேரை நான் பொருளாதார ரீதியாக உயர்த்திற்கு கொண்டு சென்று உள்ளேன். அந்த வகையில் வெளிநாட்டில் ஒரு தமிழனுக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் இதை நான் பார்க்கிறேன். நான் ஏதோ சாதித்து விட்டேன் என்று சொல்வதை விட சாதனையை நோக்கி பயணிப்பதற்காக பாதையாக இந்த விருது அமைந்துள்ளது.

ஏவிஎம், விஜயா வாஹினி என இருந்த இரண்டு ஸ்டுடியோக்களுக்கு நடுவே சினிமாவுக்கு என் பங்களிப்பாக மூன்று ஏசி அரங்குகள் கொண்ட ஸ்டுடியோவை நிர்மாணித்துள்ளேன். சினிமாவில் சம்பாத்தித்து எத்தனையோ பேர் வெளியே முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். நான் வெளியே சம்பாதித்து விட்டு சினிமாவில் முதலீடு செய்கிறேன். இந்த ஸ்டுடியோக்கள் எல்லாமே அப்பார்ட்மெண்ட்களாக மாறிவிட்ட நிலையில் இன்று படப்பிடிப்பிற்காக காஞ்சிபுரம் போக வேண்டி இருக்கிறது. ஆனால் என்னால் முடிந்த அளவில் நகரின் மையப்பகுதியில் இந்த ஸ்டுடியோவை நிர்மாணித்து உள்ளேன்.

வருடத்திற்கு இரண்டு படமாவது நடிக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் இப்போது இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. காரணம் இதோ இந்த ஸ்டுடியோவை கட்டிக்கொண்டு அதில் முதலீடு செய்திருந்தேன். சினிமா என்பது என்னுடைய கனவு.. சினிமாவில் நாம் இருக்கிறோம் என்பதற்கு ஒரு சேவையாக இந்த ஸ்டுடியோவை நான் பெருமையாக நினைக்கிறேன்.. தமிழ் சினிமா என்றாலே கோடம்பாக்கம் தான்.. அப்படி காரைக்குடியில் இருந்து கோடம்பாக்கத்திற்கு சினிமா கனவுகளோடு வந்தவன் நான்.. ஆனால் இன்று கோடம்பாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை துரத்தி விட்டார்கள்.. அடிக்கடி படம் எடுக்கவில்லையே தவிர சினிமாவிற்கு உதவியாக இப்படி ஒரு ஸ்டுடியோவை திருமாணிப்பதன் மூலம் என் பங்களிப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தேன்

ஆனால் இப்போது விலங்குகளை மையப்படுத்தி ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்றை பற்றி இந்த கதை பின்னப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஆணவக் கொலை விலங்குகளை கூட விட்டு வைக்கவில்லை.. பணக்கார வீட்டில் ஒரு நாய் இருந்தால் அந்த நாயின் ஆணவக் கொலை எப்படி இருக்கும்.. அதுதான் இந்த படத்தின் கதை.. ஓபனாகவே உங்களிடம் சொல்கிறேன். மனித மனங்கள் எப்படி இருக்கின்றன என்பதை பற்றி இந்தப்படத்தில் பேசுகிறோம்.

யோகி பாபு, தம்பி ராமையா, நாசர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ஆர் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடையும் தறுவாயில் இருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கிறது.

வடிவேலுவை என் படத்தில் நடிக்க வைப்பதற்காக அவரிடம் கதை சொன்னேன்.. ஆனால் அவர் ஹீரோவாக தான் நடிப்பேன் என்கிற முடிவில் அப்போது இருந்தார் இறங்கி வந்தால் சத்தியமாக இருவரும் இணைந்து நடிப்போம். அவரிடம் இந்தப்படத்திற்காக கொடுத்த ஒரு கோடி ரூபாய் இன்னும் அவரிடம் தான் இருக்கிறது..  இப்போது இந்த படத்தில் தம்பி ராமையா நடித்திருப்பது கூட வடிவேலுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் தான்.

எனக்கு அரசியல் வேண்டாம்.. அதை செய்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்.. நமக்கு தெரிந்த வேலையை செய்து விட்டு போவோம். என்னுடைய தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே நான் பல சேவைகளை செய்து வருகிறேன். அதுவே எனக்கு போதும். ஓட்டு போடுவதுடன் என்னுடைய அரசியல் முடிந்தது.

தொழிலில் வெற்றி என்பது ரகசியம் அல்ல.. அது ஒரு மேஜிக்.. அதில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்று புத்தகம் எழுதுவது என் நோக்கம் அல்ல. என்னை பற்றிய சுயசரிதையை எழுத வேண்டும் அதை மற்றவர் படிக்கவேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதற்காக எப்படி உழைப்பை கொட்டுவது, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, வெற்றியை அடைவது என்பதாகத்தான் என் சுயசரிதை இருக்க வேண்டுமே தவிர எப்படி வெற்றி பெற வேண்டும் என மற்றவர்களை போல நானும் புத்தகம் எழுத முடியாது” என்று கூறினார் நடிகர் ஆர்கே.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img