சிபிராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வெளி வந்திருக்கும் படம் 10 ஹவர்ஸ்.
கதைக்களம் ஒரு இரவுக்குள் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இரவில் டியூஷனுக்கு சென்ற ஒரு பெண் காணாமல் போக, அதைத் தேடிப் போகும் இன்ஸ்பெக்டர் சிபிராஜுக்கு ஒரு பஸ்ஸிலிருந்து பெண்ணை துன்புறுத்துவதாக போன் கால் வருகிறது. அந்த பஸ்ஸை பிடித்து செக் செய்யும்போது போன் செய்த இளைஞன் இறந்து கிடக்கிறார். பஸ்ஸில் அவனை கொலை செய்தது யார் ? இரவில் காணாமல் போன பெண்ணிற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை தன் திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிபிராஜிற்கு ஒரு சிறந்த கதாபாத்திரம். சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு மறுநாள் இருமுடி கட்ட வேண்டியது. ஆனால் அதற்குள் ஒரு கொலை, ஒரு பெண் கடத்தல்.. இது இரண்டையும் கண்டுபிடிக்கும் வேலை. காஸ்ட்யூம் சேஞ்சுக்காக ஒரு தடவை யூனிஃபார்மில் இரத்தம்.. பிறகு கருப்பு சட்டை.. பிறகு பெயிண்ட் ஊற்றி விட கருப்பு சட்டை வேட்டி என்று ஒரு இரவுக்குள் இதுதான் காஸ்டியூம் சேஞ்ச்.
கதை க்ரைம் திரில்லராக போவதால் அதை கண்டுபிடிக்கும் விதமும் அதன் புத்திசாலித்தனமும் கதையின் நாயகன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்
வழக்கம்போல் இவன்தான் கொலைகாரன் என்று பலரை நாம் நம்புவது போல் திரைக்கதை அமைப்பது வழக்கம். இதிலும் அதேபோல் தான்.. ஆனால் கொலையாளியும் கொலை செய்யப்பட்டவரும் எப்படி கொலை செய்தார் என்பதை கிளைமாக்ஸ் இல் விவரிக்கும் விதம் அருமை. அதுமட்டுமல்லாமல் காணாமல் போன பெண்ணிற்கும் இந்த கொலைக்கும் தொடர்பு எப்படி தொடர்பு ஏற்படுகிறது என்பதை தன் திரைக்கதை மூலம் இயக்குனர் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.
கிளைமாக்ஸில் எதிர்பாராத திருப்பம், அந்தத் திருப்பம் நாம் யாவரும் எதிர்பார்க்காத திருப்பம். இயக்குனர் திரைக்கதையை தெளிவாக சிறப்பாக செய்திருக்கிறார். ஓர் இரவுக்குள் கதை நடப்பதால் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படத்தின் ஓட்டத்தின் மூலம் அது மறக்கடிக்கப்படுகிறது.
மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிபிராஜிற்கு ஒரு நல்ல மைல்கல் இந்த படம். படத்தில் பாராட்ட வேண்டியது ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் தங்கள் வேலைகளை திறமையாக செய்திருக்கின்றனர்.
டென் ஹவர்ஸ் – நொடிக்கு நொடி திக் திக்