சசிகுமார், சிம்ரன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
கதைக்களம்
இலங்கையில் வாழும் சசிகுமார் குடும்பம் இலங்கை விலைவாசி ஏற்றத்தினால் வாழ வழி இல்லாமல் கள்ளத்தோணியில் இந்தியா வர அங்கு காவல்துறையிடம் மாட்டிக் கொள்கிறார். இளகிய மனம் கொண்ட காவல் அதிகாரி அவரை விட்டுவிட சென்னைக்கு வந்து வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.
இவர்கள் ராமேஸ்வரத்திற்கு வந்த நேரத்தில் அங்கு பாம் வெடித்து விபத்து நடக்க அந்த பாம் வெடிப்பிற்கு சசிகுமார் குடும்பத்தினர் காரணமாக இருக்கலாம் என்று எண்ணி அவர்களைத் தேடி போலீஸ் சென்னை வர பிறகு நடப்பது என்ன?
அயோத்தி படத்துக்குப் பிறகு மீண்டும் மனிதத் தன்மை நிலைநாட்டும் ஒரு கதையை சசிகுமார் எடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. சசிகுமாரின் இலங்கை தமிழ் அவருடைய வழக்கமான நடிப்பு எல்லாமே பாராட்ட வைக்கிறது.
சிம்ரனை இவ்வளவு அடக்க ஒடுக்கமாகவும், பாந்தமாகவும் பார்த்ததாக நினைவு இல்லை. முழுக்க குடும்பக் குத்து விளக்காக புடவை அணிந்து வருபவர் அண்டருக்கும் அண்டர்பிளே செய்து ரசிக்க வைத்திருக்கிறார் இளங்கோ குமரவேல் மற்றும் ஸ்ரீஜா ரவி இருவருக்குமிடையே இருக்கும் காதல் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், யோகலக்ஷ்மி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. அரவிந்த விஷ்வநாதன் ஒளிப்பதிவு மேடை நாடகத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
பொதுவாக தமிழ்நாட்டுக்கு அடைக்கலம் தேடி வரும் இலங்கை தமிழர்கள் கதை என்றால் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும். சோகமும் உணர்ச்சியும் கலந்ததாக இருக்கும். ஆனால் ஏன் அப்படி சொல்ல வேண்டும் ஜாலியாக சொல்லலாமே என இயக்குனர் யோசித்த விதமே பாராட்ட வைத்திருக்கிறது.