300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் யோகி பாபு, தன்னுடைய சினிமா பயணத்தில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமையக்கூடிய ஏஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பன்முகத் திறமை கொண்ட நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஆறுமுககுமார் எழுதி இயக்கி தயாரிக்கிறார். தயாரிப்பு நிறுவனமாக 7Cs எண்டர்டெயின்மெண்ட் செயல்படுகிறது.
இது ஒரு சாதாரண காமெடி வேடமல்ல. யோகி பாபு இந்தக் கதையில் முழு படத்திலும் பயணம் செய்யும் கதாபாத்திரமாக, பல உணர்ச்சிப் பக்கங்களை வெளிப்படுத்தும் விதமாக நடித்துள்ளார். இதுவரை அவர் நடித்த படங்களில் மிகவும் நீண்ட நாட்கள் (60+ நாட்கள்) படம் பிடிப்பில் ஈடுபட்டிருப்பது இந்தப் படத்தில்தான்.
ஏஸ் படம், யோகி பாபுவின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிக் கொண்டு வரும் ஒரு முக்கியமான படமாக அமைய இருக்கிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம், மே 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.