சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகினரும், படக் குழுவினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ‘ரெட்ரோ’ படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான சக்தி வேலன், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நாயகனான சூர்யாவிற்கும் வைர மோதிரங்களை பரிசாக அளித்தார்.
இது தொடர்பாக விநியோகஸ்தர் சக்தி வேலன் குறிப்பிடுகையில், ”ரெட்ரோ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட வாய்ப்பளித்த 2D நிறுவனத்திற்கும், சூர்யா அண்ணன் மற்றும் ராஜசேகர பாண்டியன் அண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் இத்திரைப்படம், இவ்வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக இலாபம் தந்த திரைப்படமாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். இத்திரைப்படம் உருவாக காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய கலைஞர்களான இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசியர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கு வைர மோதிரங்களை பரிசாக வழங்கினோம். சூர்யா அண்ணாவிற்கு மோதிரம் வழங்கிய போது அதனை உடனடியாக மீண்டும் எனக்கே திரும்ப அணிவித்து, தன் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டார், அது என் வாழ்வில் மற்றொரு நெகிழ்வான தருணமாக மாறியது. இந்நெகிழ்ச்சி எனக்கு முதல் முறையல்ல, முன்பு ‘கடைகுட்டி சிங்கம்’ வெற்றி விழாவில் தங்க செயின் மற்றும் ‘விருமன்’ வெற்றி விழாவில் வைர பிரேஸ்லெட் பரிசாக வழங்கும் போதும் சூர்யா அண்ணா எனக்கே அதை திரும்ப அணிவித்தார்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் திரையுலகினர் சூர்யாவுடனும், படக் குழுவினருடனும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.