நவீன் சந்திரா, அபிராமி, ரித்விகா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் லெவன் படம் என்ன சொல்ல வருகிறது.
பல தீர்க்க முடியாத வழக்குகளை தன் புத்திசாலித்தனத்தால் தீர்த்து வைக்கும் நாயகனுக்கு சவாலாக ஒரு புதிய கேஸ் ஒப்படைக்கப்படுகிறது. அது என்ன ? திடீர் திடீரென்று எரிந்த நிலையில் சில பிணங்கள் கிடைக்கின்றன. அவர்களை எரித்தது யார் ? சைக்கோ கொலைகாரனா, சீரியல் கொலைகாரனா அல்லது பழிவாங்கும் படலமா என்று கேள்விக்குறியில் இருக்கும் இந்த விசாரணையை போலீஸ் அதிகாரியான நமது கதாநாயகன் இடம் ஒப்படைக்கப்படுகிறது. நாயகன் கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா. கொலைகாரனை கண்டுபிடித்தாரா என்பதே மீதிக்கதை..
நாயகனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, இறுக்கமான முகம் மற்றும் மனநிலையுடன் இருந்தாலும், காவல்துறை அதிகாரிக்கென்று அளவு எடுத்து தைத்தது போல் கதாபாத்திரத்தில் ஒட்டிக்கொள்கிறார். ஒவ்வொரு காட்சியிலும், உடல் மொழி, வசன உச்சரிப்பு, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தான் ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோ என்பதை நிரூபிக்கிறார்.
பள்ளியின் தலைமை ஆசிரியையாக நடித்திருக்கும் அபிராமி, ரித்விகா, ரேயாஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜய் உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை மிக அழகாக செய்து முடித்திருக்கின்றனர்.
டி இமானின் இசையில் விடியாத வானம் என்ற மனோவின் குரலில் உருவான பாடல் நெஞ்சை உலுக்கும். பின்னணி இசையில் இதுவரை கண்டிராத ஒரு மேஜிக்கை இப்படத்தில் நிகழ்த்தியிருக்கிறார் டி இமான்.
படத்தின் இறுதிக் காட்சியில் நாம் எதிர்பார்க்காத சில திருப்பங்கள் நமக்கு சில அதிர்ச்சிகளை தருகிறது. அது பற்றி விவரங்களை நாம் தந்தால் படம் பார்க்கும் ரசிகனுக்கு விறுவிறுப்பு குறைந்து விடும். அது என்ன என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
லெவன் – குறைந்த பட்ஜெட்டில் ஒரு கிரைம் திரில்லர்