யோகி பாபு கதாநாயகனாக நடித்து நகைச்சுவை என்று பெயரில் நம்மை படுத்தி எடுக்கும் படமே ஜோரா கைய தட்டுங்க. யோகி பாபு ஒரு மேஜிக் நிபுணர். கை தட்டல் இவருக்கு ஒரு ஊக்க டானிக். அந்த சமயத்தில் யோகி பாபு மீது வன்மம் கொண்டவர் கையை வெட்ட மேஜிக் தொழில் பாதிக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அந்த வன்மம் கொண்டவன் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விடுகிறான்.
அவனை பழிவாங்க யோகி பாபு தன் மேஜிக் திறமையால் எந்த தடையும் இல்லாமல் கொலை செய்கிறார். அது கொலையா அல்லது தற்கொலையா என்று கேள்விக்குறியை உருவாக்கி காவல்துறையை குழப்பம் அடைய செய்து பல சமூக விரோதிகளை இதேபோல் கொலை செய்கிறார். முடிவு என்ன ? பாருங்கள்.. ஜோரா கை தட்டுங்கள்.
யோகி பாபு மேஜிக் கலைஞராக நடித்திருக்கிறார்.. முதன்முறையாக இந்த திரைப்படத்தில் தான் யோகி பாபு குளோசப் காட்சிகளில் ரசிகர்களை பயமுறுத்தாமல் அழகாக தோன்றுகிறார்.. இதற்காகவே ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..
வழக்கமான பழிக்கு பழிவாங்கும் கதை என்றாலும் மலையாள தேசத்து படைப்பாளிகளால் உருவாக்கப்பட்டிருப்பதால் அந்த மண்ணிற்கே உரிய இயல்பாக திரைக்கதை நகர்வதால் பரபரப்பையும் வித்தியாசமான திருப்பத்தையும் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கிறது.. இருந்தாலும் யோகி பாபு கதாநாயகன் என்பதால் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பொதுவாக மேஜிக் கலைஞருக்கென ஒரு பிரத்யேக உடல் மொழி இருக்கும். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.
யோகி பாபுவின் காதலியாக திரையில் தோன்றும் நடிகை சாந்தி ராவின் கதாபாத்திரத்தை ரசிகர்களால் ஏற்க முடிந்தாலும் அவர்களது காட்சி அதிகம் இல்லாததால் கவனத்தை கவர தவறுகிறார்.
கதையின் நாயகன் வாழ்க்கையில் இலட்சியத்தில் தோல்வி அடைந்தவர் என்பது வலுவாக திரைக்கதையில் பேசப்பட்டிருப்பதால் அவர் பழிவாங்கும் போது ரசிகர்களிடத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதிலும் பழிவாங்கும் காட்சிகள் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இல்லாதது பெருங்குறை.
படத்திற்கு ஆக பெரும் பலமாக இருப்பது ஒளிப்பதிவு மட்டுமே. இதனால் ஒளிப்பதிவாளரை மட்டுமே பாராட்டலாம். இதுபோன்ற கிரைம் திரில்லர் திரைப்படங்களுக்கு பின்னணி இசை பார்வையாளர்களை ஓரளவிற்காவது அச்சப்பட செய்வது போல் இருக்கும். அதுவும் இப்படத்தில் மிஸ்ஸிங்.