விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பப்லு பிரித்திவிராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ஏஸ்’
அரபு நாட்டில் ஜெயில் தண்டனை அனுபவித்து விடுதலை ஆகி மலேசியா வரும் விஜய் சேதுபதிக்கு யோகி பாபு மூலம் ஒரு வேலை கிடைக்கிறது. அங்கு ஒரு காதல். காதலியின் கடனுக்காக சீட்டாட்டத்தில் 5 லட்ச ரிங்கிட் தோற்று அந்த கடனை அடைக்க பேங்க் கொள்ளை அடிக்கும் விஜய் சேதுபதிக்கு லாட்டரியில் நம்ம ஊர் பணத்தில் 40 கோடி கிடைக்கிறது. பிறகு என்ன நடக்கிறது ? பாருங்கள் ‘ஏஸ்’.
படம் முழுவதும் மலேசியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. விஜய்சேதுபதி யார், அவரின் பூர்வீகம் எப்படிப்பட்டது என்பதை படம் முழுக்க சொல்லாமலே திரைக்கதையை நகர்த்திருக்கிறார் இயக்குனர். வழக்கமான விஜய் சேதுபதி இந்த படத்தில் காணாமல் போய் புதிய விஜய் சேதுபதியாக தன் பங்களிப்பை படத்தில் சிறப்பாக்கி இருக்கிறார். பேங்க்கை கொள்ளை அடிப்பதில் இருந்தும் சரி, காதலியிடம் உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் இடத்திலும் சரி, ஒரு புதிய விஜய் சேதுபதியை நாம் பார்க்க முடிகிறது.
அவருடன் பயணிக்கும் யோகி பாபு இந்த படத்திற்கு நகைச்சுவை கேரண்டி அளிக்கிறார். தன் காதலியிடம் தன்னை பெரிய கோடீஸ்வரன் என்று கூறிக்கொண்டு குப்பை பொறுக்கும் தொழில் யோகி பாபுவின் தொழில். படம் முழுவதும் கதாநாயகனுடன் பயணிக்கும் பாத்திரம். படத்தின் முழு சுமையும் விஜய் சேதுபதியிடமும் யோகி பாபுவிடமும் இருக்கிறது.
நாயகி இவரின் இரண்டாவது தந்தையான பப்லுவிடம் இவர் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தை அந்த கதாபாத்திரத்தை நம் கண் முன் கொண்டு வருகிறார். நாயகனிடம் காதலை சொல்லும் இடத்தில் மிக அருமை. ஆனால் என்னவோ இவரிடம் குறைகிறது. அது என்னவென்று நமக்குத் தெரியவில்லை. படம் பார்த்து நீங்கள் சொன்னால் சிறப்பாக இருக்கும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பப்லு பிரித்திவிராஜிற்கு ஒரு சிறந்த கதாபாத்திரம். அதுவும் வில்லத்தனமான கதாபாத்திரம். பப்லுக்கு சொல்லவா வேண்டும் ? பின்னி பெடல் எடுத்திருக்கிறார். இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஏஸ்-….. கோடை கொண்டாட்டத்தில் ஒரு நகைச்சுவை மழை