ஹரிகிருஷ்ணன், ஷீலா ராஜ்குமார், மாரிமுத்து மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் வேம்பு. படம் என்ன சொல்ல வருகிறது ?
படிப்பில் மட்டுமல்ல சிலம்பு விளையாட்டிலும் சிறப்பாக விளங்கும் நாயகிக்கு போட்டோ ஸ்டூடியோ வச்சு இருக்கும் அவர் தாய் மாமனுடன் திருமணம் நடைபெறுகிறது. நாயகியின் சிலம்ப விளையாட்டிற்கு தடை ஏதுமில்லை என்று கூறும் நாயகன் ஒரு விபத்தில் பார்வையை இழந்து விட, தன் கணவனையும் தன் குடும்பத்தையும் பார்க்கும் சூழலுக்குத் தள்ளப்படும் நாயகியின் சிலம்பக் கனவு தவிடு பொடியாகிறது. ஆனால் அவருக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் இறுதிக்காட்சியில் கிடைக்கிறது. அது என்ன படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நாயகி ஷீலா. இவரே படத்தின் முதன்மை கதாபாத்திரம். தந்தைக்குச் செல்ல மகள். சிலம்பாட்டத்தில் மாநில அளவில் இடம் பிடிக்க வேண்டும் என்பது இவரின் ஆசை. ஆனால் ஊர் மக்களின் வற்புறுத்தலாலும் தந்தையின் கட்டாயத்தாலும் திருமணத்துக்கு சம்மதிக்கும் நாயகி. ஒரு சிறந்த தமிழ் பெண்ணாக நம் கண் முன் வருகிறார். குடும்பத்தைக் காப்பாற்ற இவர் படும் கஷ்டங்கள் ஒரு சாமானியனின் எதார்த்தமான வாழ்க்கை சூழல். மிக அழகாக தன் கதாபாத்திரத்தை சிறப்பாக்கி மக்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
நாயகன் போட்டோ ஸ்டூடியோ வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சராசரி மனிதன். தன் கண் பார்வை போனதும் தன்னால் தன் மனைவி கஷ்டப்படுவதை மனதிற்குள் வைத்துக் கொண்டு அவர் வெளிப்படுத்தும் முக பாவங்கள் சிறப்பு.
மற்ற கதாபாத்திரங்களும் கிராமத்து முகங்கள். நாம் அப்படியே ஒரு கிராமத்துக்குள் சென்று வந்தது போலிருக்கிறது.
இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்றால் பெண்களுக்கு தற்காப்பு மிக முக்கியம். அந்த பாதுகாப்பிற்காக சிலம்ப விளையாட்டத்தை கற்றுக்கொண்டால் எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதனால் சிலம்ப விளையாட்டை பள்ளிகளில் பாடமாக வைத்தால் சிறப்பு என்பதை இந்த படத்தின் மூலம் சொல்ல வருகிறார்.
வேம்பு – இவள் சாதிக்க பிறந்தவள்