சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் 3BHK. படம் என்ன சொல்ல வருகிறது. பார்க்கலாம்.
கதைக்களம் 20 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சரத்குமார் மாத ஊழியத்திற்கு வேலை பார்ப்பவர். தனது சொற்ப வருமானத்தில் ரூபாய் 7 லட்சம் சேர்த்து சொந்த வீடு வாங்க ஆசைப்படுகிறார். ஆனால் அந்தப் பணத்திற்கு சிட்டியில் வீடு கிடைக்கவில்லை. ஒரு 3 லட்சம் பற்றாக்குறை. அதை சேர்த்து வீடு வாங்க சென்றால் வீட்டின் விலை இன்னும் ஏறிவிட்டது. இறுதியில் வீட்டை பார்த்து முடிவு செய்து அதை வாங்கும் தருணத்தில் சித்தார்த்தின் காலேஜ் அட்மிஷனுக்கு அந்தப் பணம் செலவாகிறது. இறுதியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதே மீதி கதை.
ஒரு சாமானிய மனிதனின் நிறைவேறாத ஆசையாக இருப்பது சொந்த வீட்டுக் கனவு. அந்த கனவு பலிக்க அவன் உழைப்பு அதிகம். ஆனாலும் அந்த வீட்டின் கனவு ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, வீடு என்று ஒரு படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியாகிறது அதில் வீடு கட்டும் கஷ்டத்தை, அப்ரூவல், பர்மிஷன் என பல கஷ்ட நஷ்டங்களை விவரித்து இருந்தார். இந்தப் படத்தில் கட்டிய வீட்டை அதாவது பிளாட் வாங்குவது எப்படி என்ற கதைக்களத்தோடு களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர்.
20 25 வருடங்களுக்கு முன்பாக இஎம்ஐ என்ற ஒரு தவணை முறை கிடையாது. மொத்தமாகவே தான் பணம் கட்டி வீடு வாங்க வேண்டும். ஆனால் தற்காலத்தில் இஎம்ஐ முறை இருப்பதால் வாங்குவது எளிதாக இருந்தாலும் அதற்கான முயற்சிகள் கடினம். அதை விவரிக்கிறது இந்த 3 பிஎச்கே படம்.
சரத்குமார் நடுத்தர வர்க்கத்தின் எதார்த்த மனிதனை நம் கண் முன்னே அப்படியே பிரதிபலித்து இருக்கிறார்.. இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. அமைதியின் மறு உருவம். பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறக்க போராடும் தந்தை. தன் ஆசை வீடு என தன் நடிப்பின் மூலம் பல பரிமாணங்களை காட்டுகிறார்,
பல படங்களில் சரத்குமாரிடம் பார்த்திருப்போம், ஆனால் இந்த 3 பிஎச்கேவில் சரத்குமார் ஒரு தனி ரகம். கட்டம் போட்ட சட்டை, தோளில் ஒரு லெதர் பை. கம்ப்யூட்டர் வேண்டாம் என்று லெட்ஜரில் கணக்கு எழுதும் எதார்த்தவாதி. பிள்ளைகளுக்காக தன் ஆசைகளை மனதுக்குள் பூட்டி வைக்கும் ஒரு பத்தாம் பசலி என ஒரு புதிய சரத்குமார் நம் கண் முன் தெரிகிறார்.
மெக்கானிக்கல் படிக்க ஆசைப்படும் மகனை காலேஜ் நிர்வாகம் ஐடி தான் எதிர்காலம் என்று மாற்ற மகனை மெக்கானிக்கல் இருந்து ஐடி படிக்க சொல்ல ஒரு தந்தையின் ஆதங்கம் அவர் கண்களில் தெரிகிறது.
சூரியவம்சத்து ஜோடி தேவயானி இந்த படத்தில் இணைந்திருப்பதால் சரத்குமாருக்கு பக்கபலம் அதிகம். கணவன் சொல் தட்டாத மனைவி. இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷப்படும் ஒரு பெண். கணவனின் கஷ்டத்தை தன் தோளில் சுமக்கும் ஒரு தைரியசாலி. ஒரு அப்பாவி பெண்ணாக மிக அழகாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் தேவயானி.
சித்தார்த் பள்ளி மாணவனாக, காலேஜில் படிக்கும் காளையனாக, வேலை தேடும் வாலிபனாக, மணம் முடித்து கணவனாக, பலவித முகத்தோற்றங்கள்.. அதற்கேற்ற போல் உடல் மொழிகள்.. சித்தார்த் சிறப்பு.
தந்தை சொல் தட்டாத மகன், தந்தைக்காக தன் லட்சியத்தை மாற்றிக் கொண்ட வாரிசு, அப்பாவின் ஆசைக்காக மணமுடிக்க செல்லும் மகன், இறுதியில் தனக்கு பிடித்த பெண்ணை கைப்பிடித்த கணவன். அதனால் தந்தையிடம் பேச முடியாமல் போன ஒரு சக மனிதன் என இவர் கதாபாத்திரத்தின் வடிவமைப்பை இயக்குனர் சிறப்பாக செதுக்கியிருக்கிறார். படிப்பில் இவருக்கு ஏற்படும் தோல்விகள், தோல்வியினால் கற்றுக்கொண்ட படிப்பினைகள், ஐடியில் இவர் படும் அவமானங்கள்.. தான் நினைத்த படிப்பை மீண்டும் ஆரம்பித்து அதில் முன்னேறும் மனிதன். இறுதியில் தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகன் சித்தார்த்திற்க்கு இந்தப் படம் ஒரு விருதை வாங்கித் தரும் என்பதில் ஐயமில்லை.
3 BHK_ முயற்சி திருவினையாக்ககும்
ரேட்டிங் – 3/5