ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.
படம் குறித்து ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பகிர்ந்து கொண்டதாவது, ”இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படம் பார்த்தேன். ராம் சினிமாவை பார்க்கும் விதம் வேறு விதமாக இருக்கும். தனது படங்களில் மெல்லிய மனித உணர்வுகளைக் கடத்துவதில் வல்லவர். குழந்தைகள் உலகத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதை கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குநர் ராம்.
மகிழ்ச்சி, நகைச்சுவை, அழுகை, துக்கம் என பல உணர்வுகளை இந்தப் படத்தில் கடத்தியிருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் சிவா, அம்மாவாக நடித்திருப்பவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். உணர்வுகளைக் கடத்துவதுதான் ஆகச்சிறந்த இயக்கம் என நம்புகிறேன். அதை ராம் சிறப்பாக செய்திருக்கிறார். மகனாக நடித்திருக்கும் அந்த சிறுவனும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும். நாம் கவனிக்கத் தவறிய குழந்தைகள் உலகத்தை அவர்களோடு இருந்து பார்க்க வேண்டும் என்பதை ராம் இந்தப் படத்தில் அழகாக காட்டியுள்ளார்.
படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சி ஒன்று உண்டு. அதை ராம் அழகாக எடுத்திருக்கிறார். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சிரிக்கும்படியாகவும் சிந்திக்கும்படியாகவும் அந்த காட்சி இருக்கும். டைனோசர் பற்றி அறியாத ஒரு தலைமுறையும் வாத்து பற்றி அறியாத ஒரு தலைமுறையும் சந்தித்து பேசிக் கொள்ளும்படியான காட்சியும் இந்தப் படத்தில் உண்டு. நாம் அனைவரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் நம் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறார். படம் பிரமாதமாக உள்ளது. மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும். படத்தில் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப நடிகர்கள் அனைவரும் சிறப்பான பணியை செய்துள்ளனர்” என்றார்.