வெற்றி, தம்பி ராமையா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘முதல் பக்கம்’.. படம் என்ன சொல்ல வருகிறது ?
கிரைம் நாவல் எழுதி புகழ்பெற்ற நாவலாசிரியரின் மகன் வெற்றி. தன் தந்தையை பற்றி வார இதழில் ஒரு தொடர் எழுதுவதற்கு உதவி செய்வதற்காக சென்னை வருகிறார். அங்கு காவல் ஆய்வாளர் தம்பி ராமையாவின் நட்பு ஏற்பட, ஒரு கொலை வழக்கில் தன் அறிவு திறமையால் கொலையாளி யார் என்று கண்டுபிடித்து சொல்ல, அதன் பிறகு தம்பி ராமையாவின் அனைத்து வழக்குகளுக்கும் உதவி செய்யும்போது ஒரு எதிர்பாராத தொடர் சைக்கோ கொலைகள் நடைபெறுகிறது. அதை எப்படி கண்டுபிடித்து படத்தை முடிக்கிறார் என்பதே மீதி கதை.
படத்தின் முதல் பாதி திரைக்கதையும், கதாபாத்திரங்களும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக கிரைம் நாவலாசிரியரின் மகனாக நடித்திருக்கும் நடிகர் வெற்றி இயல்பிலேயே துப்புதுலக்குவதில் ஆர்வம் உள்ளவராகவும், துல்லியமாக அவதானிக்கும் ஆற்றல் பெற்றவராகவும் வடிவமைத்திருப்பது கதைக்கு வலு சேர்க்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வழக்கமான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான கமர்சியல் அம்சங்கள் இடம்பிடித்திருப்பதால். திரைக்கதை தடுமாறுகிறது..
வில்லனாக அறிமுகமாகி இருக்கும் மகேஸ்வரன் தேவதாஸ் தோற்றத்தில் உறுதி இருக்கும் அளவிற்கு நடிப்பில் இல்லை என்பதுதான் உண்மை. அவருடைய உடல் மொழிக்கும் அவருடைய உரையாடும் உரையாடலுக்கும் பாரிய இடைவெளி உள்ளது. ஒருவித அந்நியத்தனம் எட்டிப் பார்க்கிறது.
மின்னல் ராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி வழக்கம் போல் தன் உடல் மொழியால் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்.
சுவாதி எனும் பத்திரிக்கையாளர் வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார்.
பிரபாகரன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் வெற்றி புலனாய்வு செய்யும் தருணங்களில் வலது காதை நீவி விடும் உடல் மொழி வித்தியாசமாகவும், பொருத்தமானதாகவும் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை அவர் கொண்டிருந்தாலும் தோற்றத்தில் வித்தியாசத்தை காட்டி இருக்கலாம்.
படத்திற்கு அரவிந்தின் ஒளிப்பதிவும், ஏ ஜே ஆரின் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதலை அளிக்கிறது.
ஒரு திரைப்படத்தை, அதுவும் ஒரு கிரைம் திரைப்படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும். ஆனால் நாவலில் வருவது போல் கொலையாளியை கண்டுபிடிப்பது நமக்கு படம் பார்ப்பது போல இல்லை. ஒரு கிரைம் நாவலை படிப்பது போல் இருக்கிறது.
முதல் பக்கம் ; தலைப்பு செய்திகள் அற்றது
ரேட்டிங் ; 2/5