spot_img
HomeNews”கொரில்லாவாக நடிக்க 3 மாதம் பயிற்சி எடுத்தேன்”- ‘குற்றம் புதிது’ சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண்...

”கொரில்லாவாக நடிக்க 3 மாதம் பயிற்சி எடுத்தேன்”- ‘குற்றம் புதிது’ சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!

 

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் கூறியதாவது, “ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் தன் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க கதைகள் கேட்டுக் கொண்டிருப்பதாக எனக்கு தகவல் வந்தது. அவரை நேரில் சந்தித்து ’குற்றம் புதிது’ படத்தின் கதை சொன்னேன். கதை பிடித்ததும் முழு மனதோடு படத்தைத் தயாரிக்கவும் சம்மதித்தார். நடிப்பு, பயிற்சி, சண்டை மற்றும் நடனம் என சினிமாவிற்காக தருண் விஜய் முழு பயிற்சி பெற்றிருக்கிறார். சேஷ்விதா கனிமொழி கதாநாயகியாக சிறப்பாக நடித்துள்ளார். உணவு டெலிவரி செய்யும் ஒரு இளைஞன் திடீரென்று தலையில் அடிபட்டு வினோதமான ஒரு பாதிப்புக்கு உள்ளாகிறான். அதன் பிறகு அவனது நடவடிக்கை மாறுகிறது. அவன் மீது கொலை பழி விழுகிறது. அந்த கொலையை ஹீரோ செய்தாரா?அவருக்குள் ஒரு மிருகம் இருக்கிறதா என்ற பல்வேறு திருப்பங்களுடன் இந்த கதை அமைந்திருக்கிறது. தருண் விஜய் இதில் கொரில்லா குணாதிசயம் கொண்டதுபோல் நடிக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது. கொரில்லா குரங்கு போல் அவர் கைகளையும், கால்களையும் ஊன்றி ஊன்றி நடப்பது போல் மிகவும் கஷ்டப்பட்டு வலிகளை தாங்கி நடித்திருக்கிறார். தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்” என்றார்.

கதாநாயகன் தருண் விஜய் கூறியதாவது, “என் வீட்டில் என் அப்பா , அம்மா, அக்கா எல்லோருமே டாக்டர் தான். என்னையும் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததால் நான் நடிகனாக போவதாக வீட்டில் கூறினேன். முதலில் அவர்கள் அதற்கு தயக்கம் காட்டினார்கள். பின்னர் எனது இலட்சியத்தை, ஆசையை புரிந்து கொண்டு நடிக்க அனுமதி கொடுத்தார்கள். அதன் பிறகு நடிப்புக்கு தேவையான அடிப்படை பயிற்சிகளை நான் முறைப்படி பயின்றேன். நல்ல கதைக்காக காத்திருந்த போதுதான் ’குற்றம் புதிது’ படக் கதையை இயக்குநர் நோவா கூறினார். அதில் நடிப்புக்கும், திறமையை வெளிப்படுவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருந்ததால் ஒப்புக்கொண்டேன். ஏற்கனவே நடிப்பு பயிற்சி பெற்றிருந்ததால் படப்பிடிப்பின்போது எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. இயக்குநர் எப்படி சொன்னாரோ அப்படியே நடித்தேன். சந்தேகம் ஏற்படும் போது அவரே நடித்துக் காட்டுவார். அதை உள்வாங்கி நான் நடிப்பேன். கொரில்லா குரங்கு போல் கை கால்களை ஊன்றி நடப்பதற்காக நான் மூன்று மாதம் பயிற்சி எடுத்தேன். கை விரல்களை மடக்கிக்கொண்டு தரையில் ஊன்றி கைகளை முன்னும் அசைத்து நடந்தபோது எனது தோள்பட்டையே வீங்கிவிட்டது. அந்த சிரமத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வலியை பொறுத்துக் கொண்டு காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக 100% நடிப்பை வழங்கினேன். எனது நிஜப் பெயர் தருண். விஜய் என்ற பெயரை நானாகவே சேர்த்துக் கொண்டேன். அந்தப் பெயர் எனக்கு வலிமை தரும் என்பதால் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

நடிகை சேஷ்விதா கனிமொழி கூறியதாவது, “’குற்றம் புதிது’ படத்தில் கதாநாயகியாக என்னை நடிக்க அழைத்த போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. காரணம், இப்போதெல்லாம் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்றால் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட வேண்டும், அதில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்டவராக இருக்க வேண்டும். ஆனால் நான் இன்ஸ்டாகிராமில் இல்லை. ஆனாலும் இயக்குநர் என்னை அழைத்து ஒரு காட்சியை சொல்லி நடித்துக் காட்ட சொன்னார். நடித்துக் காட்டினேன். அது அவருக்கு பிடித்துப் போகவே என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். ’குற்றம் புதிது’ படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இது மாறுபட்ட படமாக இருக்கும். அனைத்து தரப்பினையும் இந்த படம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

தொழில்நுட்பக்குழு விவரம்:
தயாரிப்பு: ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ்,
தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை: உத்ரா புரொடக்‌ஷன்ஸ், ஹரி உத்ரா,
எழுத்து, இயக்கம்: நோவா ஆம்ஸ்ட்ராங்,
ஒளிப்பதிவு: ஜாசன் வில்லியம்ஸ்,
இசை: கரண் பி. கிருபா,
படத்தொகுப்பு: எஸ். கமலக்கண்ணன்,
புரொடக்ஷன் டிசைனர் ஹாசினி பவித்ரா,
தயாரிப்பு நிர்வாகி: ஆனந்தகுமார்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img