ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ‘அக்யூஸ்ட்’ படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர்.
இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ”இப்படத்தின் வெற்றிக்கு தற்போது வரை கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நாயகனும், நண்பணுமாகிய உதயாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த வெற்றி அவரை தான் சாரும். படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது அவர் தான். தற்போது வரை இந்த படத்தின் வெற்றியை அவர் தன் தலை மீது ஏற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து எங்களின் நலன்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவரது நோக்கம். அவரது நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், உதயாவிற்கும் நன்றி.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என்றார்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ”இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் பின்னணியில் ஒரு குட்டி கதை இருக்கிறது. இப்போது அதைப் பற்றி விரிவாக பேச இயலாது. இருப்பினும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகத்தினருக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தது. ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்ற குறள் தான் என் நினைவுக்கு வருகிறது. இந்த முயற்சிக்கு வித்திட்டது ஏ எல் உதயா தான். இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து நான் தற்போது பேசும் தருணம் வரை உதயா அசுரத்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதனை நான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படம் வெளியான பிறகு நாங்கள் குழுவாக இணைந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, திருநெல்வேலி என்று ஊர் ஊராக பயணித்து ரசிகர்களை சந்தித்தபோது ரசிகர்களையும், ஊடகத்தினரையும் அவர் தனி ஆளாக எதிர்கொண்டார். ரசிகர்கள் அனைவரும் ‘கணக்கு எப்படி இருக்க?’ என்ற அளவிற்கு நலம் விசாரிக்க தொடங்கி விட்டார்கள். ரசிகர்களின் பேரன்பு எங்களுக்கு கிடைக்க காரணமாக இருந்தவரும் உதயா தான். இந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழு முதல் காரணமாக நான் உதயாவை தான் குறிப்பிடுவேன்.
கன்னட திரைப்படத்துறையில் வெற்றி பெற்றிருந்தாலும், தமிழிலும் வெற்றி பெற்ற இயக்குநராக வலம் வர செய்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் ஏ. எல். உதயா பேசுகையில், ” பகிர்ந்து கொள்ள நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா, என தெரியாது. அவ்வளவு சோர்வாக இருக்கிறேன்.
என்னுடைய நண்பர்களின் ஆதரவினால் இப்படத்தின் பணிகளை தொடங்கி, நிறைவு செய்து ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் சேர்ப்பித்து மக்கள் வெற்றி பெற செய்துள்ளார்கள். இதற்குள்ளாக நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே, விவரிக்க இயலாது, பகிர்ந்து கொள்ள முடியாது.
இந்தப் படத்தின் கதை நல்ல கதை. நண்பர்கள், தயாரிப்பாளர்கள், திரை உலகத்தின் ஆதரவுடன் படத்தினை தயாரித்து விட்டோம். வெளியிட திட்டமிடப்பட்ட போது இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக பணியாற்றினார்கள். சிலர் கூடவே இருந்து தடுத்தார்கள். அதெல்லாம் வலி மிகுந்த விஷயங்கள்.
சினிமாவில் நாங்கள் இன்று இந்த இடத்தில் நிற்கிறோம் என்றால் இது சாதாரணமானதல்ல. மிகப் பெரிய வெற்றி. இந்த இடம் அப்படி இருக்கிறது. ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன. யாருடைய ஆசீர்வாதம் என்று தெரியவில்லை, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்கில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ஓட வைப்பதற்காக போராடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்த போராட்டத்தை நானும் எனது குழுவும் இஷ்டப்பட்டு தான் செய்து வருகிறோம்.
இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு.
எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இந்த திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது என தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்த படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு ஊடகங்களும், மக்களும் தான் காரணம்.
இந்தப் படம் வெளியாகி மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி தான். அதனால்தான் இதற்கு காரணமான ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினோம்.
இப்படம் வெளியான பிறகு நாங்கள் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என்று செல்லும்போது அங்குள்ள ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு கொண்டாடுகிறார்கள். எங்கள் மீது பேரன்பு காட்டுகிறார்கள். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இது கடவுளின் ஆசீர்வாதம் தான்.
சினிமாவில் எந்த சங்கமாக இருந்தாலும் அவை உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சினிமா ஒரு மோனோபோலியாக (monopoly) இருக்கிறது. நான் இதை உறுதியாக சொல்கிறேன். இதில் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமானது. மீண்டும் ஒரு முறை போராட முடியாது. இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவம் கொண்ட எங்களுக்கு இப்படி ஏற்படுகிறது என்றால், புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கு நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. நாம் இந்த நிலையில் தான் தற்போது இருக்கிறோம். இந்த தருணத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கு நான் மிகப்பெரிய மரியாதை செலுத்துகிறேன். ஏனெனில் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எங்களைப் போன்ற சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது எந்த குறையையும் சொல்ல இயலாது. திருப்பூர், சேலம், கோவை போன்ற பகுதிகளில் இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி திரையரங்க உரிமையாளர்கள் தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்களாகிய நாம் தான் சரியில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தான் சுயநலம் அதிகம் இருக்கிறது.
இந்த படத்தை இயக்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், தயாரிப்பாளர் சௌந்தர், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, நடிகர்கள் டேனி, பிரபாகர், ஸ்ரீதர், ஹைடு கார்த்திக், நடிகைகள் சுபத்ரா, தீபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வி எஃப் எக்ஸ் மூர்த்தி என அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து தயாரிப்பாளர்களும் நன்மை பெற வேண்டும். அடுத்து நாம் பட வெளியீட்டை ஒழுங்கு படுத்துவது தான் முதன்மையான பணி. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன். தயாரிப்பாளர் கேயார் , தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் போன்றோர்கள் தலைமையில் இருந்த சங்கம் போல் வலுவான சங்கம் வேண்டும். யாருக்கும் எதற்கும் அச்சப்படாத தலைவர்கள் இருந்தார்கள் இல்லையா, அது போன்ற தலைவர்கள் வந்தால் மட்டும் தான் சினிமா நன்றாக இருக்கும்.
இந்தப் படத்தில் நான் மட்டும் ஹீரோ இல்லை, அஜ்மலும் ஒரு ஹீரோ தான். ஜான்விகா, யோகி பாபு ஆகியோருக்கும் நன்றி.
இந்த டீம் மீண்டும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் ‘டண்டனக்கா டான்’ என்ற பெயரில் கதையை சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும். இந்த ‘அக்யூஸ்ட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்குவேன் என உறுதியாக சொல்கிறேன்,” என்றார்.