எனது இசைப் பயணம் விளம்பரப் படங்களின் மூலம் தான் ஆரம்பித்தது. இதுவரை 250 விளம்பரப் படங்களுக்கும், சுமார் 450 குறும்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட 20 திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். எனது முதல் படமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘இனம்’ படத்தின் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. டொரன்டோ திரைப்பட விழாவிற்கு நியமனம் செய்யப்பட்டது. அடுத்தது குற்றம் 23 படத்தின் பின்னணி இசைக்காக தேசியவிருதிற்கு நியமனம் செய்யப்பட்டது. மேலும், ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, ‘குற்றம் 23’, ‘ரங்கூன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘ஜாக்பாட்’ போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெற்றது.
ராதாமோகன் இயக்கத்தில் ‘பிருந்தாவனம்’ படத்தில் பணியாற்றினேன். அப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்கள் குறிப்பாக குடும்பத்தோடு வந்து படம் பார்ப்பவர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அண்மையில் ‘சிம்பா’ என்ற படத்திற்கு இசையமைத்தேன். அதில் ‘டோப் ஆன்தம்’ என்ற பாடல் வைரலானது.
நான் இசையமைத்ததிலேயே மாபெரும் வெற்றி பெற்ற பாடல் ‘அப்புச்சி கிராமம்’ படத்தில் இடம்பெற்ற என் கண்ணுக்குள் ஒரு சிறுக்கி பாடல் தான். அதேபோல் ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் வரும் ‘ஷூட் த குருவி’ பாடலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தெலுங்கில் நான் இசையமைத்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இணையத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.
கிங் பிஷர், பிரிட்டானியா, பெப்ஸி, டிவிஎஸ், பிக் பஜார், டைட்டன் போன்ற பெரிய தேசிய நிறுவனங்களுக்கு விளம்பரத்திற்காக இசையமைத்திருக்கிறேன். அதேபோல் ஒரு கட்டத்தில் கொடிக்கட்டி பறந்துகொண்டிருந்த யுனிவர்செல் நிறுவனத்திற்காக மாதவன் தோன்றும் விளம்பரக் காட்சிக்கு இசையமைத்தேன். மேலும், விஜய் டிவியில் பல நிகழ்ச்சிக்கான பிரமோ வீடியாக்கள், ஏர்டெல் சூப்பர் சிங்கர்-ன் தலைப்பு பாடல் மற்றும் விஜய் டிவியின் இடம்பெறும் ‘தர்மயுத்தம்’, ‘தாயுமானவன்’ போன்ற சுமார் 60 நெடுந்தொடர்களுக்கான தலைப்பு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.
தற்போது ‘ஜி தமிழ்’-ல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘நாச்சியார்புரம்’, ‘பூவே பூச்சுடவா’, ‘இரட்டை ரோஜா’ இதுபோன்று பல தொடர்களுக்கும் தலைப்பு பாடல் மற்றும் சரிகமபதநி-க்கும் தலைப்பு பாடல் கொடுத்திருக்கிறேன். இதற்காக சென்ற வருடத்தின் ‘ரிதம் ஆஃப் ஜி அவார்ட்ஸ்’ விருது கொடுத்தார்கள்.
மேலும், ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் முதலில் திரையிடப்பட்ட படமே நான் இசையமைத்த படம்தான். அந்த சீசனில் 17 குறும்படங்களுக்கு பணியாற்றினேன். சீசன்-1ன் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் பெற்றேன். சீசன்-2ல் மூன்று குறும்படங்களுக்கு இசையமைத்து மூன்றுக்குமே விருது பெற்றேன். அதேபோல் சீசன்-3லும் விருதுபெற்றேன். நாளைய இயக்குநர் மூன்று சீசனில் இருந்த இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்கள் இன்று திரைப்படங்கள் இயக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
பின்னணி இசையை எப்படி அமைக்க வேண்டும் என்பதை குறும்படத்திற்கான இசைப்பயணத்தில் தான் கற்றுக் கொண்டேன். பாடல்களை விட பின்னணி இசைக்கு மக்களிடையே மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர்களிடையேயும் எப்போதுமே வரவேற்பும் ஆதரவும் இருந்திருக்கிறது. எனக்கு தூண்டுதலாக இருந்தது தனிப்பட்ட முறையில் ஊக்குவித்த பத்திரிகையாளர்கள் தான். பின்னணி இசை ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு அம்சங்கள் இருப்பதற்கு உலகத்தில் உள்ள பல மொழி படங்களில் இருக்கும் இசையையும் கேட்க வேண்டும். அப்போதுதான் தற்போதைய நடைமுறையைத் தெரிந்துக் கொண்டு இசையமைக்க முடியும். அதற்காக நானும் ஒரு நாளைக்கு குறைந்தது 10-15 புது பாடல்களையாவது கேட்பேன். அந்த வகையில் இசையமைத்த படம் தான் ‘ஜில் ஜங் ஜக்’.
தற்போது தெலுங்கில் கோபி சந்துரு நாயகனாக நடிக்க, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தை இயக்கிய திரு இயக்கும் ‘சாணக்யா’ என்று பெயரிடப்பட்ட படத்திற்கு இசையமைத்து வருகிறேன்.
தமிழ் படத்தைப் பற்றிய அறிவிப்பை விரைவில் அறிவிப்பேன்.
இவ்வாறு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் கூறினார்.