சத்யராஜ், ஸ்ரீபதி, நியா, ‘அங்காடித்தெரு’ மகேஷ், அப்புகுட்டி, கே. சி. பிரபாத், ரெய்னா காரத் மற்றும் பலர் நடிப்பில் மோகன் டச் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் அங்காரகன் .
காட்டுப்பகுதியில் தனிமையில் இருக்கும் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் அடுத்தடுத்து சில இளம் பெண்கள் மாயமாகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த அப்பகுதி காவல்துறை உயரதிகாரியான சத்யராஜ் வருகிறார். அவரின் விசாரணை தொடங்குகிறது. விடுதியில் தங்கி இருக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கான கதையை விவரமாக சொல்கிறார்கள். இதில் உண்மை என்ன? தவறு எங்கே நடந்திருக்கிறது? குற்றவாளி யார்? என்பதனை சத்யராஜ் கண்டுபிடிக்கிறாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
காதல் கதையா.. இருக்கிறது. கள்ளக்காதலா.. இருக்கிறது. பேய் கதையா.. இருக்கிறது. பீரியாடிக் கதையா.. இருக்கிறது. இப்படி ஒரு கதையை சொல்லாமல் இரண்டு மூன்று கதைகளை ஒரே கதையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மோகன் டச்சு. இதனால் பார்வையாளர்களுக்கு குழப்பம் தான் மிஞ்சுகிறது. படத்தில் நடித்திருக்கும் நடிகைகள் அனைவரும் இளமையுடன் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சின்ன ஆறுதல்.
அங்காரகன் என்றவுடன் செவ்வாய் பகவான் என தற்போதைய ஆன்மீக அன்பர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் படத்தில் அங்காரகன் என்றால் ஆங்கிலேயரை எதிர்த்த மலைவாழ் மக்களில் ஒருவன் என இயக்குநர் குறிப்பிடுகிறார்.
இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் எதிர்பாராத திருப்பம் ஒன்றை இயக்குநர் கையாண்டிருக்கிறார். அது சிலருக்கு பிடித்திருக்கிறது.
கதையின் நாயகனாக வரும் ஸ்ரீபதி அந்த கால மைக் மோகனையும் வேறொரு நடிகரையும் நினைவுபடுத்துகிறார். அவரின் திரைத்தோன்றல் பரவாயில்லை ரகம். நடிப்பில் பயிற்சியைப் பெற்று நடித்திருக்கலாம்.
இந்த படத்தில் நடிக்க சத்யராஜ் சம்பளத்தை தவிர வேறு ஏதோ சில காரணங்களுக்காக மட்டுமே ஒப்புக் கொண்டிருக்கிறார் என உறுதியாக சொல்லலாம். அவருடைய வழக்கமான நடிப்பு இதிலும் இருக்கிறது. ஆனால் அவருடைய நக்கல் நையாண்டி சில இடங்களில் மட்டுமே எடுபடுகிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் நியா அழகு பதுமை.
இன்வெஸ்டிகேட் திரில்லராகவும் இல்லாமல்… விறுவிறுப்பான ஹாரர் திரில்லராகவும் இல்லாமல்… பீரியாடிக் எக்சன் திரில்லராகவும் இல்லாமல்… எல்லாம் கலந்து கட்டி திரைக்கதையாக உருவாகி இருப்பதால், படத்தை ரசிப்பதை விட, குழம்பி.. குழப்பிக் கொள்வது தான் அதிகம்.
அங்காரகன் பூனை சூடு போட்ட கதை