திரையரங்குகளில் இருந்து வெளியேறும் பார்வையாளர்களுக்கு ‘ரத்தம்’ படம் 100% திருப்தியை அளிக்கும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி!
பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றியை தரக்கூடிய நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும் கதாநாயகனாக விஜய் ஆண்டனி உள்ளார். அவருடைய இந்த வெற்றி, அடுத்து வரும் அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது வர்த்தக வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகவுள்ள அவரது ‘ரத்தம்’ படத்தின் முன்னோட்டங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
சி.எஸ்.அமுதனின் முந்தைய படங்களான ‘தமிழ்ப் படம்’ மற்றும் ‘தமிழ்ப் படம் 2’ ஆகியவற்றை பார்த்து சிரித்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு ‘ரத்தம்’ நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். முற்றிலும் வேறுபட்ட ஜானரில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தில் பயணித்து இருக்கிறார்.
படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து விஜய் ஆண்டனி பகிர்ந்து கொண்டதாவது, “சி.எஸ்.அமுதனின் திறமை குறித்து எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் என்றாலும், வெவ்வேறு ஜானர்களில் கதையை படமாக்குவதிலும் அவர் திறமையானவர். ‘ரத்தம்’ படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு உடனே பிடித்துப் போனது மற்றும் அந்தக் கதையை காட்சிப்படுத்துவதும் மிகவும் எளிதாக இருந்தது. என் கேரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று நான் நம்பினேன். மேலும், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கும் போது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்” என்றார்.
இந்த படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் பற்றி விஜய் ஆண்டனி மேலும் கூறுகையில், “இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. முழு கதையும் அவர்களால் தான் நகரும். தீவிரமான அர்ப்பணிப்புடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் கூட படத்திற்கு வலு சேர்க்கும். ‘ரத்தம்’ படம் பார்த்து விட்டு பார்வையாளர்கள் திரையரங்குகளை விட்டு வெளியே வரும்போது நிச்சயம் அவர்களுக்கு 100% திருப்தியைத் தரும்” என்றார்.
இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்திருக்க, ‘ரத்தம்’ படத்தை சி.எஸ்.அமுதன் எழுதி இயக்கியுள்ளார். கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை டி.எஸ். சுரேஷ் கையாண்டுள்ளார்கள்.