ரசிகர்களின் தேவையை சரிவர அறிந்து, அதற்கேற்ப இசை அமைத்து புகழின் உச்சியில் குறைந்த காலத்தில் வீற்று இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. அதிலும் குறிப்பாக இளைஞர்களை கவரும் வண்ணம் அவர் அமைக்கும் இசை அவரை இசை உலகின் நாயகனாகவே மாற்றி விடுகிறது. “கோமாளி” படத்தின் பாடல்கள் அவருடைய உற்சாகமூட்டும் இசைக்கென்றே எல்லோராலும் முணுமுணுக்க படுகிறது. இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் சவாலானது எனக் கூறும் ஆதி படத்தை பற்றியும் , படத்தில் உள்ள தனது இசையை பற்றியும் கூறுகிறார்.
“கோமாளி” படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிக மிக சவாலாக இருந்தது. எல்லா உணர்ச்சிகளின் கலவையான படம் என்பதால் , குறிப்பிட்ட ஒரு பாணியை மட்டுமே கடைப்பிடிக்க முடியவில்லை..இயக்குனர் பிரதீப் என்னிடம் கதை சொன்ன வினாடியே இந்த சவால் எனக்கு புலப்பட்டது.90க்களில் பிறந்த எனக்கு அந்தக் காலக் கட்டத்தின் உணர்ச்சிகள் எனக்கு எளிதாகவே புரிந்தது. என்னால் அந்த திரை நிகழ்வுகளோடு தொடர்ப்பு கொள்ள முடிந்தது. இதுவே என்னை வீரியத்தோடு வேலை செய்ய வைத்தது.பாடல்களை பொறுத்தவரை இயக்குனர் பிரதீப், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், இந்தப் படத்தின் நடிக நடிகையர் , மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த வெற்றி உரியது. பாடல்கள் அனைத்துமே. காட்சி அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட பாடல்கள் ஆகும்.அந்த அழகியல் கூடிய காட்சி அமைப்பே பாடல்களின் வெற்றிக்கு மூல காரணம்” என்கிறார்.
படத்தில் உள்ள சிறந்த காட்சிகளை வரிசைப் படுத்த கோரிய போது ” அது மிக கடுமையானது. ஒவ்வொரு காட்சியுமே மற்ற காட்சிகளுக்கு சவால் விடும். முழுநீள ஜனரஞ்சகமான படத்தின் அர்த்தம் “கோமாளி”தான்.. எல்லா காட்சிகளும் அபாரம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சென்னை வெள்ளம் பற்றிய காட்சிதான் ” என்கிறார் ஆதி.
ஜெயம் ரவி , காஜல் அகர்வால் இணையாக நடிக்க இவர்களோடு சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோரும் நடித்து இருக்கின்றனர்..அறிமுக இயக்குனர் பிரதீப் இயக்க, வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷனல் என்கிற நிறுவனத்தின் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவான “கோமாளி” சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகெங்கும் வெளிவர இருக்கிறது.