ஏ.ஆர் ரகுமான் குடும்பத்திலிருந்து இன்னொரு இசை வாரிசாக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வெயில் என்கிற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ் குமார். முன்னணி இசையமைப்பாளர் வரிசைக்கு உயர்ந்த அவர் நடிப்பின் மீது கொண்ட நாட்டத்தின் காரணமாக கடந்த பத்து வருடங்களாக சினிமாவில் ஒரு நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
ஒரு பக்கம் இசை, ஒரு பக்கம் நடிப்பு என வெற்றிகரமாக இரட்டை குதிரை சவாரி செய்து வரும் ஜிவி பிரகாஷ் காதல் என்கிற படத்தில் பணியாற்ற அந்த படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் அழைத்தபோது தனது மேதாவித்தனமான பேச்சால் அந்த வாய்ப்பை இழந்து விட்டதாக தற்போது கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நீ கஷ்டப்பட்டு மேல வரணும்னு நினைக்கிறியா என என்னிடம் பாலாஜி சக்திவேல் கேட்டார். அவரிடம், இல்ல சார் என் கைவசம் இசை இருக்கிறது அதை வைத்து மேலே வரப்போகிறேன் என்ன பக்குவம் இல்லாமல் பதில் கூறிவிட்டேன். அதனால் அந்த பட வாய்ப்பு என் கையை விட்டு போய்விட்டது. அதற்கு பக்குவமாக பதில் சொல்லியிருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது.
அதன் பிறகு வெயில் படத்தில் இசையமைத்து பாடல்கள் ஹிட்டானபோது இயக்குனர் வசந்தபாலனிடம் உண்மையிலேயே இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்தாரா இல்லை நீ இசையமைத்தாயா என்று சந்தேகமாகவே கேட்டுள்ளார் பாலாஜி சக்திவேல். நான் தான் இசையமைப்பேன் என்று தெரிந்ததும் ஆச்சரியப்பட்டாராம் பாலாஜி சக்திவேல்” என்கிற தகவலை ஜிவி பிரகாஷ் குமார் கூறியுள்ளார்.