நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக வலம் வருகிறார். குறிப்பாக தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மற்றும் அர்ஜுன் இவர்களால் ஏற்பட்ட இடைவெளியை விஷால் தான் ஒரு ஆக்சன் நடிகராக நிரப்பி வருகிறார் என்றால் அது மிகை இல்லை. அதேபோல அவர் அடிக்கடி மீடியாக்களில் பேசும் பேச்சுக்களும், வெளியிடும் வீடியோக்களும் அறிக்கைகளும் பல நேரத்தில் குழப்பத்தையே அனைவருக்கும் ஏற்படுத்துகின்றன.
சமீபத்தில் தான் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி துவக்கம் குறித்து அறிவித்தார். இந்த நிலையில் விஷால் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக மக்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.. ஆரம்பம் முதலே இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்கிற நோக்கத்தில் தான் எனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக செயல்படுத்த துவங்கினேன்.
நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை. ஆனால் வருங்காலத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களில் ஒருவராக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்திடம் அவரது அரசியல் வருகை குறித்து கேட்கும் போதெல்லாம் நான் அரசியலுக்கு வருவேனா என்று தெரியாது அது காலத்தின் கையில் இருக்கிறது. வரவேண்டி இருந்தால் வருவேன் என்றுதான் கூறி வந்தார். தற்போது நடிகர் விஷாலும் அதேபோன்று பேச ஆரம்பித்துள்ளதால் இவரும் ரஜினிகாந்தை போல வருவேன் வரமாட்டேன் என கூறாமல் குழப்புகிறாரோ என விஷால் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.