நடிகர் விக்ரம் மிகச்சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைத்தது. அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்து வெற்றியும் பெற்றார். ஆனால் அவரது எண்ணம் அது இல்லை.
கதை அம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதால் அவர் எண்ணப்படி படங்களை தேடி நடித்ததால், நிறைய படங்களில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அப்படி அவர் நடித்த படங்களும் பெரிய வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை.
இன்னொரு பக்கம் விக்ரம் நடிப்பில் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்கிற படம் உருவாகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதமே இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒவ்வொரு முறையும் மாற்றப்பட்டு மறு தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இப்படி மூன்று முறை இந்த படத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படமும் இதேபோன்றுதான் பலமுறை தேதி அறிவிக்கப்பட்டு இன்னும் வெளியாகாத சூழல் நிலவுகிறது. அது மட்டுமல்ல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மகான் திரைப்படம் கூட இதுபோல ரிலீஸ் தேதியில் சிக்கல் ஏற்பட்டு நேரடியாக ஓடிடியில் வெளியானது.
இன்னொரு பக்கம் அஜய் ஞானமுத்து டைரக்சனில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படமும் இதேபோல பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தாமதமாக வெளியாகி தோல்வியை தழுவியது. இப்படி விக்ரமின் படங்கள் தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப்போவதால் அவரது ராசி காரணமாக இருக்குமோ என்று திரை உலகில் ஒரு பேச்சு ஓட ஆரம்பித்து இருக்கிறது. இதனை கேள்விப்பட்டு படக்குழுவினர் இது என்னடா புது சிக்கல் என திகிலில் இருக்கின்றனராம்.