நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டு அது பொய்யாகி போன நிலையில் அடுத்ததாக அனைவருமே எதிர்பார்த்தது விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்பதுதான். அவர் இப்போதும் இளம் முன்னணி நடிகராக ரஜினிகாந்துக்கு அடுத்த இடத்தில் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகிறார்.
அதனால் பத்து வருடங்களாவது அவர் நடித்துவிட்டு அதன் பிறகு தான் அரசியலுக்கு வருவார். அட்லீஸ்ட் 5 வருடங்களாவது இன்னும் சினிமாவில் நடிப்பார் என்பது போன்று தான் அனைவரும் கூறி வந்தனர். இந்த நிலையில் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி விட்டதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஜய்.
அதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு படங்களில் தான் நடிக்க போவதாகவும் அதன் பிறகு 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து களம் இறங்கப் போவதாகவும் கூறியுள்ளார். விஜய்யின் இந்த அரசியல் அறிவிப்பை தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பெரிய அளவில் வரவேற்று கருத்து வெளியிட்டதாக தெரியவில்லை.
அப்படி விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தால் ஆளும் கட்சி தங்களை வேறு விதமாக டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விடுவார்கள் என்கிற பயம் தான் காரணம். விஜய்யுடன் பழகிய சக நடிகர் நடிகைகளே அவரது அரசியல் நுழைவு குறித்து கருத்து தெரிவிக்க தயக்கம் காட்டி வரும் நிலையில் விஜயுடன் நடித்திராத சம்பந்தமே இல்லாத நடிகை வாணி போஜன் விஜய்யின் அரசியல் வருகைக்கு தனது வரவேற்பை தெரிவித்துள்ளதுடன் மக்கள் விஜய்க்கு ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.
இதன் மூலம் தனக்கு ஏதோ ஒரு வகையில் ஆளுங்கட்சியிடமிருந்து எதிர்ப்பு வரலாம் என அவருக்கு தெரியாமல் இருக்குமா என்ன ? அப்படி தெரிந்தும் அவர் பேசியிருக்கிறார் என்றால் தனக்கும் அரசியலுக்குள் நுழைய ஆசை இருக்கிறது. அந்த எண்ணத்தையும் அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். யார் கண்டது, ஒருவேளை நாளை விஜய் கட்சியிலேயே அவர் சீட் கேட்டாலும் கேட்கலாம்.