spot_img
HomeNewsநண்பனின் இறுதிச் சடங்கிலாவது கலந்து கொள்வாரா அஜித் ?

நண்பனின் இறுதிச் சடங்கிலாவது கலந்து கொள்வாரா அஜித் ?

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ நடிகர்கள் வந்து சென்றிருந்தாலும் அவர்கள் அத்தனை பேரிடமிருந்தும் மிகப்பெரிய அளவில் வித்தியாசப்படுபவர் நடிகர் அஜித். சிறிதளவு வெள்ளை முடி தெரிந்தாலும் டை அடித்துக் கொண்டு நடிக்கும் ஹீரோக்கள் மத்தியில் தனது நரைத்த முடியுடனே பல படங்களில் நடித்த வெற்றியும் பெற்று வருகிறார்.

அதேபோல ரசிகர் மன்றம் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். இப்படி சில பாசிட்டிவான விஷயங்கள் அவரைப் பற்றி இருந்தாலும் திரையுலகில் தான் கலந்து பழகிய நடிகர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்கள் என யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அஜித் எப்போதுமே செல்வதில்லை என்பதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல குறைந்தபட்சம் ஒரு இரங்கல் அறிக்கை கூட அவரிடம் இருந்து வெளிவருவதும் இல்லை. சரி, சம்பந்தப்பட்டவர்கள் இறந்த பிறகு அந்த பரபரப்பு அடங்கிய பின்பாவது அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்னாரா என்கிற தகவலும் இதுவரை ஒரு முறை கூட வெளியானது இல்லை.

அந்த வகையில் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் இறந்தபோது நடிகர் விஜய் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தி சென்றார். ஆனால் அஜித் கடைசி வரை வரவே இல்லை. ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை. அதன் பிறகு விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று கூட ஆறுதல் சொல்லவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இமயமலை பகுதியில் லொகேஷன் தேடிப்போன முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும் இயக்குனருமான வெற்றி துரைசாமி சென்ற கார் விபத்துக்குள்ளாகி ஆரில் கவிழ்ந்தது. அதில் அவர் என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தது.

தற்போது சம்பவம் நடந்து ஏழு நாட்கள் ஆன நிலையில் ஆற்றில் கார் விழுந்த இடத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் தள்ளி வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இன்று (பிப்-13) அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு மதியம் மூன்று மணி அளவில் நந்தனத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது. மாலை 6 மணிக்கு கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று தகனம் செய்யப்பட இருக்கிறது.

இவரும் அஜித்தும் நெருங்கிய நண்பர்கள் என்பது பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அஜித் சென்று கலந்து கொண்டார் என்பது ஆச்சரியமான ஒன்று. அப்படிப்பட்ட தனது நண்பரின் மரணத்திற்கு, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அஜித் வருவாரா இல்லை அட்லீஸ்ட் ஒரு இரங்கல் அறிக்கையாவது வெளியிடுவாரா ? பார்க்கலாம்.

Must Read

spot_img