அஜித்தை வைத்து கடந்த 15 வருடங்களுக்கு முன்பே மங்காத்தா என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கிடைத்தது. அதை தொடர்ந்து அடுத்ததாக உடனடியாக நடிகர் விஜய்யை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்னும் சொல்லப்போனால் மங்காத்தா படபிடிப்பின்போது தான் விஜய், அஜித் இருவரையும் சந்திக்க வைத்தார் வெங்கட் பிரபு. இதனால் நிச்சயமாக அவர் விஜய் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த விஷயம் அவருக்கு கை கூடி வருவதற்கு கிட்டத்தட்ட 14 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது ஒரு வழியாக விஜய் வைத்து கோட் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
வெங்கட் பிரபு படங்களில் நடிப்பதற்கு என்று அவரது ஆஸ்தான நடிகர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் இப்படி வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் பிரபல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று விடுகின்றனர். அந்த வகையில் நடிகர் வைபவ் மங்காத்தா படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடித்தது குறித்து வைபவ் கூறும்போது, “படப்பிடிப்பு எப்போதுமே பரபரப்பாக இருந்தது. எங்கேயும் ரிலாக்ஸாக அமர்வதற்கு நேரமே இல்லை. விஜய் முன்பு நடித்த வாரிசு படத்தின் செட்டில் கிரிக்கெட் விளையாடியதெல்லாம் வீடியோவாக வெளியானது. ஆனால் இதில் அதற்கெல்லாம் நேரமே கிடைக்கவில்லை. நிச்சயமாக இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும்” என்று கூறியுள்ளார்.