spot_img
HomeNewsரணம் - விமர்சனம்

ரணம் – விமர்சனம்

தமிழ் சினிமாவின் பல வெற்றி படங்களை வழங்கிய நடிகர் வைபவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 25 வது திரைப்படம் ‘ரணம் அறம் தவறேல்’. அவருடைய திரையுலக பயணத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன், ஃபேசியல் ரீகன்ஸ்ட்ரக்சன் ஆர்ட்டிஸ்ட் எனும் அரிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முதல் கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாகி இருக்கிறதா? இல்லையா? என்பதையும்,

நெக்ரோபிலியாக் எனும் அரிய மற்றும் சட்ட விரோத உளவியல் பாதிப்பிற்குள்ளான எதிர் நாயகனைப் பற்றிய படைப்பாகவும் உருவாகி இருக்கும் ‘ரணம் அறம் தவறேல்’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதையும் தொடர்ந்து காண்போம்.

நந்திதா ஸ்வேதா- பாடசாலையின் படிக்கும் தன்னுடைய மகளுடன் வசிக்கும் சிங்கிள் பேரண்ட். மகளின் பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் தருணத்தில்.. வளரிளம் பருவத்தில் உள்ள அவரது மகள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்குகிறார். அவரை தான் தாதியராக பணியாற்றும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கிறார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைகிறார். அவரின் சடலத்தை அந்த மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருக்கிறது. நந்திதா தன் மகள் இறந்ததை நினைத்து அதிர்ச்சியாகி அழும் போது, அவருடைய மகள் உயிரிழக்கவில்லை என்றும், அவருக்கு சுவாசம் இருந்ததையும் பார்க்கிறார். தாதியராக பணியாற்றுவதால் உடனடியாக இதனை மருத்துவமனையின் நிறுவனரிடம் தெரிவிக்கிறார். அவர் நம்ப மறுக்க.. உடனடியாக காவல்துறையின் உதவியை நாடுகிறார் ஸ்வேதா. அந்த தனியார் மருத்துவமனையின் பிணவறை தீயில் கருகுகிறது. இதனால் தன் மகளை உயிருடன் பலி வாங்கிய அந்த வைத்திய சாலையின் நிறுவனர், அவரது மனைவி, அவரது மகன் மற்றும் மகனின் உளவியல் பிரச்சனைக்கு உதவி புரிந்த மருத்துவமனை உதவியாளர், காவல்துறை அதிகாரி ஆகியோரை பழிவாங்க திட்டமிடுகிறார். இதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

இதில் நாயகன் வைபவ் திரைத்துறையில் இணை இயக்குநராகவும், காவல்துறையின் புலனாய்வு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் முக புனரமைப்பு ஓவிய கலைஞராகவும், குற்றச் செயலின் பின்னணியை கோர்வையாக எழுதும் எழுத்தாளராகவும் பணியாற்றுகிறார். இவர், உதவி இயக்குநராக பணியாற்ற வருகை தரும் சரஸ்வதி மேனனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மனைவியுடன் காரின் பயணம் மேற்கொள்ளும் போது எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்குகிறார்கள். அதன் பிறகு அவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் போது அவருக்கு பார்வையில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த குறைகளுடன் அவர் குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்கிறார். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள இந்த கதாபாத்திரத்தில் நடிகர் வைபவ் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.

நாயகனின் கோணத்தில் படத்தின் திரைக்கதை தொடங்குகிறது. நாயகன் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் கொலைச் சம்பவம் ஒன்றைப் பற்றி படம் வரைந்து, துப்பு துலக்க தொடங்குகிறார். இந்த விசாரணை பார்வையாளர்கள் எதிர்பாராத வகையில் பயணித்து, இறுதியில் ‘ஒரு உண்மை தனக்கான நியாயத்தை தானே தேடிக் கொள்கிறது’ என்ற முதுமொழியுடன் நிறைவடைகிறது.

கிரைம் திரில்லர் ஜேனரில் பார்வையாளர்கள் எளிதில் யூகிக்காத வகையில் திரைக்கதையின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இந்தத் திரைப்படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. நந்திதாவின் கதாபாத்திரம் திரையில் தோன்றியவுடன் கதை இதை நோக்கித்தான் பயணிக்கிறது என்பதனை எளிதாக அவதானிக்க இயலுகிறது. ஆனால் நந்திதாவிற்கும் வைபவ்விற்கும் உள்ள தொடர்பு.. எளிதில் யூகிக்க இயலாத வகையில் அமைந்திருப்பதால் அதனை உருவாக்கிய இயக்குநருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.

சரஸ்வதி மேனன், நந்திதா ஸ்வேதா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். கவர்ச்சி நாயகியான தான்யா ஹோப்.. காவல்துறை அதிகாரி வேடத்திற்கு பொருந்தவில்லை. அவருடைய உச்சரிப்பும், உச்சரிப்பிற்கு இடையேயான இடைவெளியும் ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது.

பின்னணியிசையில் ஆரோல் கரோலி அசத்தியிருக்கிறார். பாலாஜி கே. ராஜாவின் ஒளிப்பதிவும் திரைக்கதைக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

Must Read

spot_img