கேப்டன் விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தபோது தமிழ்நாடே கதறியது. வெளிமாநிலங்களில் இருந்து கூட பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்று சொல்லப்படுகின்ற அஜித் மட்டும் ஒரு இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை. அந்த சமயத்தில் அவர் வெளிநாட்டில் இருந்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சென்னை திரும்பிய பின்பும் கூட விஜயகாந்தின் நினைவிடத்திற்கோ அல்லது அவரது வீட்டிற்கு சென்று தனது இரங்கலை அவர் வெளிப்படுத்தவே இல்லை.
அதே சமயம் கடந்த மாதம் அஜித்தின் நண்பர் ஒருவர் அகால விபத்தில் மரணம் அடைந்தபோது அவரது வீட்டிற்கு நேரிலேயே சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்தார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அஜித் ஏன் இப்படி பாரபட்சம் பார்க்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்த நிலையில் இதற்கு திடீரென எதிர்பாராத விதமாக ஒரு புதிய பதில் கிடைத்துள்ளது.
அதாவது அஜித், ஷாலினி இருவரின் திருமணம் நடந்த சமயத்தில் ஷாலினி பிரசாந்துக்கு ஜோடியாக பிரியாத வரம் வேண்டும் என்கிற படத்தில் நடித்து வந்தாராம். அவர் கொடுத்த கால்ஷீட் போக மீதி படத்தை முடிக்க இன்னும் இரண்டு நாட்கள் தேதி தேவைப்பட்டுள்ளதாம். படத்தின் தயாரிப்பாளர்கள் போய் கேட்டதற்கு ஷாலினி இனிமேல் உங்கள் படத்தில் நடிக்க மாட்டார், கொடுத்த காசுக்கு கொடுத்த தேதிக்கு நடித்துக் கொடுத்துவிட்டார், இனி எங்களை தேடி வர வேண்டாம் என முகத்தில் அடித்தார் போல் சொல்லி விட்டாராம் அஜித்.
இந்த தகவல் அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த்திடம் சென்றுள்ளது. ஷாலினி இரண்டு நாட்கள் நடித்தால் தான் மொத்த படமும் நிறைவடையும் என தயாரிப்பாளர் கண்ணீர் விட்டதை பார்த்த விஜயகாந்த் உடனடியாக வேறொரு படப்பிடிப்பில் இருந்த அஜித்தை வரவைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு உடனடியாக ஷாலினியின் கால் சீட் கொடுக்கப்பட்டு அந்த படப்பிடிப்பு நடைபெற்றதாம்.
எப்படி கலைஞர் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள தன்னை மிரட்டி அழைத்து வந்ததாக அஜித் கதறினாரோ, அதேபோல விஜயகாந்த் தன்னை இந்த மாதிரி வலுக்கட்டாயப்படுத்தி ஷாலினியின் கால்சீட்டை வாங்கியது அவர் மனதில் ஆறாத ஒரு காயமாக தேங்கி விட்டதாம். அதனால் தான் விஜயகாந்தின் மரணத்திற்கு அவர் ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்கவில்லை என்று ஒரு புதிய தகவல் சொல்லப்படுகிறது.