spot_img
HomeNewsதமன்குமார் நடிக்கும் 'ஒரு நொடி' படத்தின் இசை வெளியீடு !

தமன்குமார் நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் இசை வெளியீடு !

தமன்குமார் நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் இசை வெளியீடு !!

தனஞ்ஜெயன் வழங்கும் ‘ஒரு நொடி’ படத்தின் இசை வெளியீடு !!

தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் உலகம் முழுவதும் ஏப்ரல் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடும் தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.‌

இயக்குநர் பி. மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தில் தமன்குமார், எம். எஸ். பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அழகர் ஜி மற்றும் கே.ஜி. ரத்தீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் பிரபல விநியோகஸ்தர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.

இம்மாத இறுதியில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதன் போது நடிகரும், சமூக செயற்பாட்டாளரும், பிக் பாஸ் பிரபலமுமான ஆரி அர்ஜுனன், தயாரிப்பாளரும், இயக்குநருமான சி. வி. குமார், நடிகரும், பேச்சாளருமான ஈரோடு மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் இவர்களுடன் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் கலந்து கொண்டனர்.

படத்தின் இயக்குநர் மணிவர்மன் பேசுகையில், ” எங்களுடைய ஒரு நொடி திரைப்படத்திற்காக பல நொடிகளை செலவு செய்து இங்கு வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது போல்.. படத்தின் விளம்பர நிகழ்வுகளிலும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கியிருக்கும் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் வாய்ப்புகளைத் தேடி அலையும் போது நம்மை மற்றவர்கள் பார்க்கும் பார்வை வேறாக இருக்கும். ஆனால் தயாரிப்பாளர் அழகர் என்னை நம்பி இந்தத் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். அதற்காக அவருக்கு சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தின் கதையை கேரளாவில் உள்ள ஒரு இயக்குநருக்காக உருவாக்கி.. அதை முதலில் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்தீஷிடம் சொன்னேன். கதையை முழுவதுமாக கேட்ட ரத்தீஷ், இந்த திரைப்படத்தை நாம் இணைந்து உருவாக்கலாம் என்றார். இந்த படத்திற்கு அவரும் இணை தயாரிப்பாளர்.

சின்ன பட்ஜெட் படம் என்பதால் எனக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்காமல் நான் கேட்ட விசயங்களை தயாரிப்பாளர் தாராள மனதுடன் வழங்கினர். மதுரையில் படப்பிடிப்பு தளத்தில் பல சிரமங்களுக்கு இடையே முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி படத்தின் படப்பிடிப்பிற்கு உதவினார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகளைத் தொடங்கிய போது ஒரு வேடத்திற்காக டப்பிங் பேச கேபிள் சங்கரை அழைத்தேன்.  அவர் இப்படத்தினை பார்த்து சிலாகித்து பாராட்டினார். அத்துடன் இல்லாமல் தமிழ் சினிமாவின் முக்கிய முகமாக அறியப்படும் தனஞ்ஜெயனை அழைத்து வந்து படத்தை காண்பித்தார். இன்றைக்கு இந்த திரைப்படம் இந்த அளவிற்கு மக்களை சென்றடைந்திருக்கிறது என்றால்… அதற்கு கேபிள் சங்கரும், தனஞ்ஜெயனும் தான் முக்கியமான காரணம். இதற்காக இவர்கள் இருவருக்கும் நன்றி. ‌

தணிக்கை குழுவினர் இந்த படத்தை பார்த்துவிட்டு, ‘நாங்கள் பார்த்த திரில்லர் திரைப்படங்களில் ஒரு நொடி வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் எங்களால் யூகிக்கவே முடியவில்லை. மிகவும் அற்புதமான படைப்பு ‘ என பாராட்டு தெரிவித்தனர். இது எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது.

இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்… எல்லோருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு நொடி… அந்த ஒரு நொடி எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெற்ற நடந்த சம்பவம் தான் இந்த படத்தின் கதை. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம்.  அறிமுக இசையமைப்பாளர். இவரின்
இசையில் உருவான பாடல்களை கேட்டிருக்கிறேன். திறமை இருக்கிறது. அதனால் வாய்ப்பு அளித்திருக்கிறேன். இந்தத் திரைப்படம் மியூசிக்கலாகவும்  நன்றாக வந்திருக்கிறது. இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த இசையமைப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெளியான பிறகு இசையமைப்பாளருக்கும் நல்லதொரு அடையாளமும், அங்கீகாரமும் கிடைக்கும்” என்றார்.

ஒளிப்பதிவாளரும், இணை தயாரிப்பாளருமான கே. ஜி. ரத்தீஷ் பேசுகையில், ” ஒயிட் லாம்ப் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இது. சிறிய தயாரிப்பு நிறுவனம். ஒரு நொடி படத்தின் இன்றைய நிலைக்கு கேபிள் சங்கரும், தனஞ்ஜெயனும்தான் காரணம். அவர்களுக்கு கோடான கோடி நன்றி. ஒளிப்பதிவாளராக நிறைய இயக்குநர்களிடம் கதை கேட்டு இருக்கிறீர்கள். ஆனால் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறீர்கள் ஏன்? என் நண்பர்கள் கேட்டார்கள். என் நண்பனுக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்?  நன்றி.” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் பேசுகையில், ” வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படத்தில் பணியாற்றும்போது இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் என் இரண்டு புறத்திலும் இரண்டு துண்களாக இருந்து ஆலோசனைகளை சொல்வார்கள். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் எழுதி முடித்தவுடன் என்னிடம் முழு கதையை விவரித்தார். முதலில் ஒப்புக்கொள்ள தயங்கினேன். அதன் பிறகு,’ உனது திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. துணிந்து பணியாற்று’ என நம்பிக்கை அளித்தார்.

படத்திற்கு பின்னணியிசை அமைக்கும் போது வியப்பாக இருந்தது. முதன்முதலாக இரண்டரை மணி நேர திரைப்படத்திற்கு இசையமைக்க போகிறோம் என்ற மலைப்பு இருந்தது. ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர் எனக்கு முழுமையான வழிகாட்டினார். இதற்காக இயக்குநருக்கு சிறப்பான நன்றி.

இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் இருக்கிறது. டைட்டில் சாங்.. அப்பா – பொண்ணு இடையிலான சாங்.. ஒரு லவ் சாங்… என மூன்று பாடல்கள் இருக்கிறது. மூன்று பாடல்களையும் பாடலாசிரியர்கள் உதயா அன்பழகன், ரவிசங்கர், ஜெகன் கவிராஜ் என மூன்று பாடலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்த மூன்று பாடல்களையும் சூப்பர் சிங்கர் சத்ய பிரகாஷ், என்னுடைய நண்பர் வருண் சந்திரசேகரன் மற்றும் நான் பாடல்களை பாடி இருக்கிறோம். என்னுடைய கல்லூரியில் உள்ள இசைக்குழுவினரை அழைத்து வந்து, படத்திற்காக இணைந்து பணியாற்றியிருக்கிறோம். ” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் அழகர் ஜி பேசுகையில், ” ஒரு நொடி படத்தின் பணிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மேற்கு கோபுர வாசலிலிருந்து தொடங்கினேன். இந்த படத்தினை இயக்குநர் மணிவர்மன் சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் கே ஜி ரத்தீஷும் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். தனஞ்ஜெயன் எங்களையும், எங்கள் குழுவையும் மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதற்காக அவருக்கு எங்கள் ‘ஒரு நொடி’ படக் குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நாயகன் தமன்குமார் பேசுகையில், ” ஒரு நொடி… ஒருவருக்கு ஒருவர் எப்போது உதவி செய்து கொண்டு தான் இருப்போம். ஆனால் நிறைய பேர் நம்மை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இது உதவி செய்யும் போது தெரியாது. கொஞ்சம் நாட்கள் கழித்து அல்லது கொஞ்சம் மாதங்கள் கழித்து.. நம்மை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு நொடியில் நமக்கு புரிய வரும். சினிமாவில் இது போன்ற அனுபவங்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். சில பேருடைய வாழ்க்கையிலும் இது ஏற்பட்டிருக்கும். சில பேருக்கு இது குடும்பத்தில் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு உடனிருக்கும் நண்பர்களால் ஏற்பட்டிருக்கலாம். என்னுடைய வாழ்க்கையில் என்னை பயன்படுத்திக் கொண்டவர்களை நான் மறந்து விட்டேன். ஆனால் உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்கவில்லை.‌ என் வாழ்க்கையில் முக்கியமாக ஒருவர் உதவி செய்தார் என்றால்… அது ஈரோடு மகேஷ் தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் இல்லை என்றால்… கடந்த பத்து பன்னிரண்டு ஆண்டுகளாக திரைத்துறையில் நான் இருந்திருக்க மாட்டேன்.

தற்போது ஒரு நொடி படத்தில் நடித்ததால் அனைத்தையும் கடந்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவை சுமாரான வெற்றியை பெற்றிருக்கின்றன. சில படங்கள் வெளிவராமல் இருந்திருக்கின்றன. இந்த நிலையில் ஊடகவியலாளர்களான நீங்கள் என் மீது அக்கறை கொண்டு ஊக்கப்படுத்தினீர்கள். இதற்காக இந்த தருணத்தில் நான் உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் தயாரிப்பாளர் தான். நல்ல நடிகர்கள் எப்போதும் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருப்பார்கள். இதனை ஒரு தயாரிப்பாளரால் தான் முதலீடு செய்து தகுதியான கலைஞர்களையும், நடிகர்களையும் உருவாக்க முடியும்.‌ இந்த திரைப்படத்தை நம்பி முதலீடு செய்து என்னை போன்ற திறமையான நடிகர்களை… மணி வர்மன் போன்ற திறமையான இயக்கநரையும் ..தயாரிப்பாளர் அழகரால் தான் உருவாக்க முடியும். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  படப்பிடிப்பின் போது ஏராளமான நெருக்கடிகளும், அழுத்தங்களும் ஏற்பட்டன. இருந்தாலும் தயாரிப்பாளர் அதனை எளிதாக கையாண்டு படத்தை உருவாக்கினார். முதலில் அவர் திரைப்படம் தயாரிப்பதை.. அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை.‌ இப்போதுதான் அவர்களுக்கு தெரியும். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவருடைய ஊரில் தான் படப்பிடிப்பை நடத்தினார்.

இந்தப் படத்திற்கு தூணாக விளங்கிய மற்றொருவர் கே ஜி ரத்தீஷ். ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல இணை தயாரிப்பாளர் கூட. அவருடைய பங்களிப்பு என்பது ஈடு இணையற்றது. படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். அவர் ஒரு நாளைக்கு திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் தெளிவாக படமாக்குவார். ஒரு நாளைக்கு 65 ஷாட்களை படமாக்கியிருக்கிறோம். எந்த இடத்திலும் எதற்கும் சமரசம் செய்யாமல் இயக்குநரும், இவரும் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தினர். இதற்கு படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் நடிகைகளும் முழு ஒத்துழைப்பையும் அளித்தனர்.

இந்தத் திரைப்படத்தில் மூத்த அரசியல்வாதியான பழ கருப்பையா அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் போது அவருடன் பேசும் போது பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பாக ”சினிமாவில் நம்பர் ஒன்.. நம்பர் டூ என்பது இருந்து கொண்டே இருக்கும். பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடிகர்கள்தான் மாறுவார்கள்.‌ அது நிலைத்த புகழ் அல்ல. நிலைத்த புகழ் என்பது… யார் ஒருவர் ஈகை, தியாகம் , வீரம், அன்பு.. இருக்கிறதோ அவர்தான் நடித்த புகழை பெறுவார்” என சொன்னார். அது உண்மைதான். அவர் சொன்னதை தினமும் நான் ஒரு முறை நினைத்துப் பார்க்கிறேன். என்னால் முடிந்த சிறிய சிறிய உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தப் படத்திற்கு கேபிள் சங்கரின் பங்களிப்பும் மகத்தானது. இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது போனில் தொடர்பு கொண்டு ‘அயோத்தி’ படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் பேசப்படுகிறது. அதற்கு பெரும் வரவேற்பு இருக்கிறது’ என பாராட்டினார். அப்போது அவரிடம், ‘நான் இன்று ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்த படமும் சிறப்பாக வரும்’ என்று நம்பிக்கையுடன் சொன்னேன்.‌ படத்திற்கு  டப்பிங் செய்யும் போது ஒரு கேரக்டருக்காக கேபிள் சங்கர் பின்னணி பேச வந்தார். படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, தனஞ்ஜெயனை அழைத்து வந்தார்.  அவர் வந்த பிறகு இந்தப் படத்திற்கான முகவரியே மாறிவிட்டது.

நானும் இயக்குநர் மணி வர்மனும் இணைந்து இதற்கு முன் ‘கண்மணி பாப்பா’ எனும் படத்தினை உருவாக்கினோம். அந்த திரைப்படம் நன்றாக தான் இருந்தது. ஆனால் வெளியீடு சரியான தருணத்தில் அமையாததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் தனஞ்ஜெயன், ”இந்த படத்தை நான் வெளியிடுகிறேன்.  ஆனால் சில சிறிய திருத்தங்களை செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும்” என்றார்.  இதனையும் அவர் ஒரு ஆலோசனையாக தான் சொன்னார். படத்தின் டைட்டில் முதல் கொண்டு சில திருத்தங்களை அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டோம். சின்ன சின்ன விசயங்கள் ஒரு படத்தினை மாற்றிவிடும் என்பதை உணர்ந்தோம்.‌ இந்த திரைப்படத்தை மக்களை சென்றடைய வைப்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சி.. எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. அவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டோம்.  ” என்றார்.

தயாரிப்பாளர் சி. வி. குமார் பேசுகையில், ” ஹீரோ தமன் குமாரும், டைரக்டர் மணியும் இணைந்து நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் ‘கண்மணி பாப்பா’ என்ற படத்தினை வழங்கினர். அந்தப் படமும் சிறந்த படம் தான். அந்தப் படம் சரியான நபரின் கையில் கிடைக்காததால் வெளியீடு சிறப்பாக இல்லை. அதனால் வெற்றியும் கிடைக்கவில்லை. ஒரு நொடி எனும் இந்தத் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது என கேள்விப்பட்டேன். இந்த திரைப்படம் தனஞ்ஜெயனின் கைகளுக்கு கிடைத்திருக்கிறது. அவர் இந்த திரைப்படத்தை சிறப்பான முறையில் வெற்றி பெற செய்வார். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.

நடிகர் ஆரி அர்ஜுனன் பேசுகையில், ” இந்தப் படக் குழுவினருக்கு இதுவரை தெரியாத ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். இப்போதுதான் ட்விட்டரை பார்த்தேன். ‘அரண்மனை 4’ படத்தின் வெளியீடு மே மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு நொடி படத்திற்கு போட்டியில்லை. உங்களுக்கு விஷால் நடித்திருக்கும் ‘ரத்னம்’ படம் மட்டும் தான் போட்டி.

படத்தைப் பற்றி அனைவரும் அனைத்து விசயங்களையும் பேசி விட்டனர். நாளைக்கு தேர்தல் என்பதால்.. பேச்சாளர் பழ. கருப்பையா பேசும்போது, ‘இங்கு கரப்சனும் இருக்கும். அடாவடித்தனமும் இருக்கும். எதுவும் மாறாது’ என்பதை சொல்லியிருக்கிறார். ஆனால் ஓட்டு போடும் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மாற்றம் ஏற்படும் என்பது தான். ஓட்டு போட்டால் மாற்றம் வரும் என்று நம்பி தான் ஓட்டு போடுகிறோம்.

சி. வி. குமார் தனஞ்ஜெயன் என தமிழ் சினிமாவின் ட்ரென்ட் செட்டர்ஸ் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். நான் சினிமாவில் நுழைந்து போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நான் பார்த்து வியந்த சில தயாரிப்பாளர்களில் இவர்களும் உண்டு. குறிப்பாக இவர்கள் நல்ல படைப்புகளை உருவாக்கி திரையரங்கத்திற்கு கொண்டு செல்லும் தயாரிப்பாளர்கள். இவர்களுடைய நிறுவனத்திலிருந்து அழைப்பு வராதா..? என ஏங்கி இருக்கிறேன்.

என்னைவிட.. சினிமா கனவுகளுடன் கடுமையாக உழைத்து சிறந்த படைப்பை உருவாக்கும் கலைஞர்களை தேடி கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளித்து படத்தை உருவாக்கி திரையரங்கத்திற்கு கொண்டு வரும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே.. இதற்கு மிகப்பெரிய பாராட்டை அளிக்க வேண்டும்.

தமன்- ஈரோடு மகேஷ்- நான் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் ஒரு கதாநாயகனின் வெற்றி என்பது ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பெரிய போராட்டத்தை போன்றது. ஏனெனில் நடிகர்கள் உடம்பை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். சாப்பிட வேண்டும். வாய்ப்புகளை தேடி ஓட வேண்டும். நல்ல படைப்புகள் வெளியாக வேண்டும். எனக்கும்.. தமனுக்கும்.. எங்களைப் போன்றவர்களுக்கும்  என்ன பிரச்சனை என்றால்… கடைசி நிமிடம் வரை வேலை செய்ய வேண்டிய சூழல் உண்டு.‌ படத்தின் போஸ்டர் ஒட்டும் வேலையை கூட தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரும் செய்வார்கள். ஆனால் நாயகன் என்பவர் திரையரங்கில் படம் ஓடும் கடைசி நாள் வரை வேலை செய்து கொண்டிருப்பார்.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு சில சிக்கல்கள் இருக்கும். ஏனெனில் சினிமா பணம் போட்டு பணம் எடுக்கும் பிசினஸ். ஆனால் புதிய தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடனும், கனவுகளுடனும் இங்கு படத்தை தயாரிக்க தொடங்குகிறார்கள்.  குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்றாலும்.. படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் தயாரிப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்தவர்தான் தயாரிப்பாளர் அழகர்.  இவர் மனது வைத்ததால் தான் ஒரு நொடி தயாராகி இருக்கிறது. நல்ல சினிமாவாக தயாராகி தனஞ்ஜெயன் கைகளுக்கு வந்திருக்கிறது.  நிறைய நபர்களின் கனவுகளை நனவாக்க க்கூடிய இந்த தயாரிப்பாளர் போன்றவர்கள் தான் சினிமாவுக்கு தேவை.

‘சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்காதீர்கள்’ என்று விஷால் நல்ல நோக்கத்தில் தான் சொன்னார். ஆனால் பலரும் அதனை வேறு விதமாக புரிந்து கொண்டார்கள். ஆனால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். சின்ன பட்ஜெட் படம் …பெரிய பட்ஜெட் படம்.. என்றில்லை.
நல்ல கன்டென்ட் உள்ள படத்திற்கு மக்கள் எப்போது ஆதரவு தர தயாராகவே இருக்கிறார்கள்.

‘மஞ்சுமல் பாய்ஸ்’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் பெரிய வசூலை தமிழில் பெற்றிருக்கிறது. நிறைய நல்ல படங்கள் இங்கு ஓடுவதற்கு மிக முக்கியமான காரணம் நல்ல கன்டென்ட் தான். நல்ல கதை… நல்ல திரைக்கதை… நேர்மையான உழைப்பு… இவையெல்லாம் ஒன்றிணைந்தால்.. அதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.

இப்படத்தின் இயக்குநர் மணிவர்மன்.. இயக்கிய ‘கண்மணி பாப்பா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தான் அறிமுகமானார். அதன் பிறகு எங்களுக்குள் நல்ல நட்பு தொடர்கிறது. அவர் படப்பிடிப்பின் போது செலவுகளை திட்டமிட்டு தான் செலவு செய்வார். தயாரிப்பாளரின் பணம் என்றாலும் கூட அதனை தன்னுடைய சொந்த பணமாக நினைத்து தான் சிக்கனமாக செலவு செய்வார். அவரின் இந்த அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது.  ஒரு நொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தயாரிப்பாளர்கள் விரும்பும் தரமான இயக்குநர் கிடைத்திருக்கிறார் என மகிழ்ச்சி அடைகிறேன்.  அவரை வாழ்த்துகிறேன். புதிய தயாரிப்பாளர்கள் அவரை நம்பி முதலீடு செய்து படத்தை தயாரிக்கலாம். உங்கள் பணத்திற்கு அவர் பாதுகாப்பாக இருப்பார்.

இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவரும் பணத்தை எதிர்பார்த்து பணியாற்றவில்லை. இப்படத்தின் கதைதான் அனைவரையும் ஒன்றிணைந்து, எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்ற வைத்து. இந்த படம் வெளியான பிறகு ஹீரோ தமன் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறேன்.

இந்த படத்தின் வணிகத்திற்கும், வெளியீட்டிற்கும் கேபிள் சங்கரும் ஒரு காரணம். இந்த விழா முடிவடைந்த பிறகு அவரை சந்தித்து, எங்களது  படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறும் வணிகத்திற்கு வழிகாட்டுமாறும் ஏராளமானவர்கள் தொடர்பு கொள்வார்கள்.

‘தங்கலான்’, ‘கங்குவா’ என பெரிய பட்ஜெட் படங்களுக்கு பணியாற்றி வரும் தனஞ்ஜெயன் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் திரையுலகில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக அது பற்றிய தனது எண்ணங்களை டிவீட் செய்கிறார்.

தனஞ்ஜெயன் மீது திரையுலகினருக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஏனெனில் அவரிடம் உள்ள ஃபினான்சியல் டிசிப்ளின்.

ஒரு நொடி படத்திற்காக தனஞ்ஜெயன் அனைவரையும் பணிவுடன் அணுகி படத்தைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறும், அதை வீடியோவாக வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக என்னை அணுகும் போது நான் செய்த தவறை அது சுட்டிக்காட்டி இருந்தேன். நான் முதன் முதலாக வாக்களிக்க சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று அதற்கு மேல் பொறுமை இல்லாமல் வாக்களிக்காமல் திரும்பி வந்த விசயத்தை பகிர்ந்து கொண்டேன்.  காலப்போக்கில் நான் செய்த தவறை உணர்ந்தேன்.  ஓட்டு போடுவது நமக்காக. நாம் யாரையோ தேர்வு செய்கிறோம் என்பதற்காக அல்ல. நமக்காகத்தான் ஒருவரை தேர்வு செய்கிறோம் என்ற பொறுப்புணர்வை வீடியோவாக பதிவு செய்து அனுப்பினேன். இதற்கும் ஒரு காரணம் உண்டு. இதற்கும் இப்படத்தில் கிளைமாக்ஸிக்கும் ஒரு தொடர்பு உண்டு.

நாம் நமது தவறுகளை எப்போது ஒப்புக்கொள்கிறோம்…. நாம் செய்யும் தவறுகளை எப்போது திருத்திக் கொள்கிறோம்… என்பது மிகவும் முக்கியமானது. தவறு என்று தெரிந்த பிறகு அதனை திருத்திக் கொள்ளாமல் இருப்பது தான் தவறு. இதை உணர்த்தும் வகையில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் மாற்றத்திற்கான ஒரு படம்.

அனைவரும் வெற்றியை நோக்கி தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த திரைப்படம் நல்ல கன்டென்ட் இருப்பதால் வெற்றி பெறும்.

மலையாள திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது. வேறு மொழி திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது. ஆனால் இதற்கு எல்லாம் முன்னோடி தமிழ் சினிமா தான். இங்குதான் சிறந்த கன்டென்ட்டிற்கு எப்போதும் ஆதரவு உண்டு.  தமிழ் சினிமாவில் அதற்கு தற்போது ஒரு தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் நாம் கதாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுவதில்லை.

இங்கு இரண்டு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நடிக்க வந்து விட்டார்கள். எழுதுவதை குறைத்து கொண்டு விட்டார்கள்.  அதனால் இவரைப் போன்ற எழுத்தாளர்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்காக ரைட்டர்ஸ் மேளா என்ற ஒரு விசயத்தை தொடங்க வேண்டும். எழுத்தாளரிடம் கதையை வாங்கி படத்தை தயாரிக்கும் போக்கு நம்மிடம் குறைந்து வருகிறது. இயக்குநர் கதையை கொண்டு வந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறோமே தவிர.. ஒரு எழுத்தாளிடமிருந்து கதையை வாங்கி அதை இயக்குவதற்கு மற்றொரு இயக்குநரை நாம் தேர்ந்தெடுப்பதில்லை.   எழுத்தாளர்களையும், இயக்குநர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியை தொடங்க வேண்டும் என்று நானும் எண்ணி கொண்டிருக்கிறேன். இதற்கான தொடக்கமாக இந்த மேடை அமையும் என நான் நம்புகிறேன். ” என்றார்.

படத்தை வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோஸ்தருமான தனஞ்செயன் பேசுகையில், ” நம்பிக்கை வைத்து மீனாட்சி அம்மனின் அருளுடன் இந்த படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் அழகருக்கு நன்றி. உங்களுக்கு மாபெரும் வெற்றி காத்திருக்கிறது.  நல்ல திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி, கடுமையாக உழைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் ரத்தீசுக்கும் நன்றி.

இந்தப் படத்தை கேபிள் சங்கர் மூலமாக எங்கள் குழுவினருடன் இணைந்து பார்த்தேன் பார்க்கும்போது எனக்கு தோன்றிய கருத்துக்களை எழுதி கொண்டே வந்தேன். படம் முடிவடைந்த பிறகு இயக்குநரிடம் பேசினேன். அவர் பல இயக்குநர்களுக்கு உரிய பிடிவாத போக்கை கைவிட்டு.. புரிந்து கொள்ளும் கலாச்சாரத்தை கொண்டிருந்தார்.‌ இது எனக்கு மிகவும் பிடித்து விட்டது.  படத்தின் டைட்டில் முதலில் ‘நொடி’ என்று இருந்தது.‌ இதனை ‘ஒரு நொடி’ என மாற்ற வேண்டும் என கேட்டேன். சற்றும் தயக்கம் இல்லாமல் ஒப்புக்கொண்டார்.  அந்த நொடியிலேயே இவருடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன்.  இந்த படத்திற்கான டைட்டில் மாற்றத்தை கதையின் கான்செப்ட் உடன் ஒத்திருந்ததால் இதை சொன்னவுடன் எந்த தயக்கமும் இன்றி அவர் ஏற்றுக்கொண்டார். அப்போது இந்த படம் தணிக்கை செய்யப்படவில்லை. அதனால் எனக்கு வாய்ப்பு இருந்தது. இதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி படத்தின் பெயர் மாற்றத்திற்கு அனுமதி வாங்கினோம்.

நான் எளிதில் திருப்தி அடைய மாட்டேன். சிறிய சிறிய மாற்றங்களை செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டே இருப்பேன். டப்பிங்… வசனம்… காட்சி அமைப்பு… என பல விசயங்களில் திருத்தங்களை செய்யலாமே என சொல்லிக் கொண்டே இருந்தேன். படைப்பு எங்களிடம் இருக்கும் வரை மாற்றங்கள் செய்து கொண்டே இருக்கலாம்.  அவை வெளியான பிறகு ரசிகர்களும், ஊடகங்களும் சொல்லும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

படத்தின் நீளத்தை குறைக்கலாம் என்று சொன்னேன். குறிப்பாக எட்டு நிமிட காட்சிகளை வெட்டி விடலாம் என சொன்னேன். அதற்கும் இயக்குநர் சரி என்று ஒப்புக்கொண்டார். உடனே இயக்குநர், படத்தொகுப்பாளர் இணைந்து எந்தெந்த காட்சிகளை நீக்கலாம் என தீர்மானித்து, படத்தின் நீளத்தை குறைத்து திரைக்கதையை வேகப்படுத்தினர். அவர்களுடைய கூட்டு உழைப்பு எனக்கு பிடித்திருந்தது.

படத்தின் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம். ஒரு இளம் திறமைசாலி. அற்புதமாக பணியாற்றி இருக்கிறார்.

இயக்குநர் மணிவர்மனிடம் கடைசியாக ஒரு திருத்தத்தை சொன்னேன். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். அது கதையின் போக்கையே மாற்றிவிடும் என்பதை அவர் விளக்கிய பிறகு.. நானும் உணர்ந்தேன். இது அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு, அவரிடம் எனது நிறுவனத்தில் ஒரு படத்தை இயக்குங்கள் என கேட்ட போது, அவர் மற்றொரு நிறுவனத்திற்காக ஒப்பந்தமாகி இருக்கிறேன் என்றார். அத்துடன் அந்த தயாரிப்பாளரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். தமன் தான் நாயகன். நாங்கள் இப்படத்தில் தொடக்கத்திலிருந்தே உங்களுடன் இணைந்து பயணிக்கிறோம் என்றார் இதுவும் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்தப் படத்தை ஒரு குறும்படமாக காண்பிக்க வேண்டும் என சொன்னேன். உடனே படத்தொகுப்பாளரும், இயக்குநரும் இணைந்து 13 நிமிட காட்சிகளை உருவாக்கி இந்தப் படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதனை தொகுத்து காண்பித்தார்கள்.

ஒரு தயாரிப்பாளர் -விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இயக்குநர் மணிவர்மன் போன்றவர்களுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். மணிவர்மன் போன்றவர்கள் திரையுலகில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.‌

ஏப்ரல் 26 ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டோம். கோடை விடுமுறை தொடங்கியதால் இந்த தேதி சிறப்பானது என கருதி வெளியிடுவதற்காக திரையரங்குகளை தொடர்பு கொண்டோம். அவர்கள் ‘அரண்மனை 4’, ‘ரத்னம்’ என இரண்டு பெரிய திரைப்படங்கள் அன்றைய தேதியில் வெளியாகிறது என சொன்னார்கள். ஆனால் இப்போது நடிகர் ஆரி சொன்ன தகவலால் உற்சாகமடைந்திருக்கிறேன். ‘அரண்மனை 4’ படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒரு நொடி படத்திற்கு கூடுதலான திரையரங்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆரியின் பேச்சை கவனித்தபோது அவர் எதிர்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாக வருவார் என எதிர்பார்க்கிறேன். அவருடைய பேச்சில் .. தேர்தல் ஆணையத்திற்கு அவர் வழங்கிய ஆலோசனை.. மிகவும் சிறப்பானது.  அவரது ஆலோசனையை ஏற்று வாக்களித்ததற்கான டிஜிட்டல் சான்றிதழ் உடனடியாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டால் பெரும் மாற்றம் ஏற்படும். இதற்காக ஆரியை மனமார வாழ்த்துகிறேன். அதிலும் மாற்றத்திற்காக அவர் கொடுக்கும் குரல்‌ பெரிய அளவில் பேசப்படும்.‌ தனி மனிதனாக இந்த சமூகத்தில் மேலும் பல உயரங்களை தொடுவீர்கள் என வாழ்த்துகிறேன். ” என்றார்.

பேச்சாளர் ஈரோடு மகேஷ் பேசுகையில், ”  ‘ஒரு நொடி’ இந்த பட குழுவினருக்கு இந்த படம் எவ்வளவு முக்கியமோ… அந்த அளவிற்கு என்னுடைய நண்பன் தமனுக்கும் இந்த படம் முக்கியம். ஒரு மனிதன் ஒரு வெற்றிக்காக ஒரு மாதம் உழைக்கலாம். ஓராண்டு உழைக்கலாம். ஈராண்டு உழைக்கலாம். ஆனால் பன்னிரண்டு ஆண்டு காலம் உழைத்திருக்கிறார். ஒரு வெற்றிக்காக தன்னுடைய வாழ்க்கையில் பன்னிரண்டு ஆண்டுகளை தியாகம் செய்தவர் என்னுடைய நண்பர் தமன் குமார். எல்லாம் வல்ல இறைவனின் ஆசியால் இந்த திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

நான் மிகவும் நேசிக்கும் இலக்கிய ஆளுமைகள் வேல. ராமமூர்த்தி மற்றும் பழ. கருப்பையா ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.  இவர்களின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். பழ கருப்பையா பேசும் போது, ‘இங்கு எதுவும் மாறாது’ எனக் குறிப்பிட்டார். உண்மைதான்.  உதாரணத்திற்கு டிராபிக்.

ஐயா சொன்னது போல் தப்பு செய்பவர்கள் அடாவடியாகத்தான் இருக்கிறார்கள்.  தப்பு செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். கை கொடுக்கிறார்கள். கட்டிப்பிடிக்கிறார்கள். தெளிவாக இருக்கிறார்கள்.

கோர்ட்டில் கேஸ் ஒன்று வருகிறது. ஏடிஎம்மில் ஒருவன் ஐந்து முறை கொள்ளையடித்திருக்கிறான். அவரைப் பார்த்து ஜட்ஜ், ‘ஏடிஎம்மில் ஐந்து முறை கொள்ளையடித்திருக்கிறாயே.. இதற்கு என்ன தண்டனை தெரியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு அவன், ‘:ஐந்து ட்ரான்ஸாக்ஷன்களுக்கு மேல் சென்றால் 150 ரூபாய் பிடிப்பீர்களா..?! ” என பதிலுக்கு கேட்டிருக்கிறார்.

வட இந்தியாவில் பதினைந்து நாளில் ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பது எப்படி ?என்று கிராஷ் கோர்ஸ் ஒன்றை நடத்தியிருக்கிறான். கடைசியில் செய்முறை பயிற்சியின் போது அவனை கைது செய்திருக்கிறார்கள்.

இதெல்லாம் நாளிதழில் வெளியான உண்மைச் சம்பவங்கள். இப்படித்தான் இருக்கிறது உலகம். இதற்கு நடுவில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நொடி முக்கியம்.

ஜெயகாந்தன் சொல்வார் ‘வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்’ என்பார்.

ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு நொடி முக்கியம். கொலை செய்கிறவனுக்கு கொலை செய்வது நியாயமாகப்படும். கொள்ளையடிக்கிற உனக்கு அந்த நொடியில் கொள்ளை அடிப்பது நியாயமாகப்படும். இருந்தாலும் உண்மையான நியாயம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா… அதுதான் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கு உள்ள அனைத்து நட்சத்திரங்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் செய்த தியாகங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இறையருள் காரணமாக இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய ஆளுமைகள் நடித்திருக்கிறார்கள். இறையருளால் தயாரிப்பாளர் அழகர் இந்த திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். இறையருளால் தனஞ்ஜெயன் இந்த திரைப்படத்தை வாங்கி வெளியிடுகிறார். இறையருளாலும், ரசிகர்களின் ஆதரவாலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img