ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது தன்னிடம் பொருள் இருந்தால் யாரும் கேட்டால் அல்லது தானே செலவு செய்தால் அளந்து அளந்து செலவு செய்வார்கள். ஆனால் அடுத்தவன் வீட்டு பொருள் என்றால் கை நிறைய அள்ளி தானம் கொடுப்பார்கள். இதுதான் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் விஷயத்திலும் நடந்துள்ளது.
காக்கா முட்டை அதன் பிறகு விஜய் சேதுபதியை வைத்து ஆண்டவன் கட்டளை மற்றும் கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கி பாராட்டுக்களை பெற்றவர் இயக்குனர் மணிகண்டன். இதில் கடைசி விவசாயி படம் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்தது.
இந்த நிலையில் அவர் விஜய் சேதுபதியை வைத்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வந்தார். பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று இதை தயாரித்தது. ஆனால் பாதிக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் திடீரென இந்த வெப் சீரிஸ் தற்போது நிறுத்தப்பட்டு கிடக்கில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காரணம் இயக்குனர் இதை ஆரம்பிக்கும் போது சொன்ன பட்ஜெட்டை விட அதிக அளவில் எகிறி விட்டதால் தயாரிப்பு நிறுவனம் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாம். சிக்கனமான படங்களை எடுப்பதற்கு பெயர் பெற்ற காக்கா முட்டை மணிகண்டனே இந்த மாதிரி செயல்களில் ஈடுபட்டு தனக்கு கிடைக்கும் எதிர்கால வாய்ப்புகளுக்கு தானே வேட்டு வைத்துக் கொள்கிறார் என்று தான் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.