spot_img
HomeNewsஉலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் - பாரதிராஜா புகழாரம்

உலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் – பாரதிராஜா புகழாரம்


ஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ஒற்றை செருப்பு படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற சாதனையாளர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் விவேக் பங்கு பெற்று, பார்த்திபனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

பார்த்திபனிடம் உதவியாளராகப் பணியாற்றி இயக்குநரான சாமி பேசும்போது, ஒத்தை செருப்பு படம் நம்மை முழுமையாக  ஆட்கொள்ளும் அளவுக்கு இருக்கிறது. ஒரே ஒரு கதாபாத்திரம்தான்  என்றாலும், நம் முழு கவனத்தையும் ஈர்த்து தன்னுள் வைத்துக் கொள்கிறது இப் படம். பார்திபனிடம் உதவியாளராகப் பணியாற்றியது குறித்து முன்பு சந்தோஷப் படுவேன். இப்போது சந்தோஷப்படுவது மட்டுமின்றி பெருமைப்படுகிறேன். வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும். ஆண்டவன் பார்த்திபனுக்கு இன்னும் நிறைய சக்தியைத் தர வேண்டும். அதன் மூலம் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அவர் வெற்றி பெற வேண்டும் என்றார்

பார்த்திபனை வாழ்த்திப் பேசிய பாக்கியராஜ், எனது உதவியாளர்கள் பார்திபனும் பாண்டியராஜனும் வெளிநாடுகளுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை வாங்கி விட்டார்கள். ஆனால் நான்தான் இன்னும் ஒரு விருதும் வாங்கவில்லை.இதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது.
படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுவதா அல்லது துணிச்சலை நினைத்து பயப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவிதமான உணர்ச்சிகளையும் காட்டி மிக அற்புதமாக நடித்திருக்கிறார் பார்த்திபன். தமிழ்ப் படவுலகுக்கு மட்டுமின்றி இந்தியத் திரையுலகுக்கே பெருமை சேர்க்கும் படம் இது என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் என்னைப் பேச அழைக்காதீர்கள் படத்தைப்பற்றி நான் நீண்ட கடிதம் ஒன்றை உங்களுக்கு பிறகு எழுதுகிறேன் என்றேன்.  காரணம் இன்னமும் என்னால் படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. தனி ஒரு ஆள் மட்டும் கால் மணி நேரமோ அரை மணி நேரமோ திரையில் தோன்றி நடிக்கலாம். ஆனால் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் முழு படத்திலும் தோன்றுவதெல்லாம் விளையாட்டு விஷயமில்லை. அதையும் மிக அற்புதமாக செய்திருக்கிறார் பார்த்திபன். யார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம், யாரை வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லும் நானே, புதிய பாதையில் பார்த்திபன் நாயகனாக நடிக்கிறார் என்பது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். புதிய பாதையில் தன்னை நிரூபித்த பார்த்திபன் இன்று நடிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டிருக்கிறார். உனக்கு உரிய உயரத்தை நீ இன்னும் அடையவில்லை என்று நான் பார்த்திபனிடம் அடிக்கடி சொல்வேன். ஒற்றை செருப்பு படம் மூலம் உலகத்தையே தமிழ்ப்படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் பார்த்திபன் என்றார்.

இயக்குநர் பார்த்திபன் பேசும்போது, புதிய பாதை படத்தைப் பார்த்த சில விநியோகஸ்தர்கள் வர்த்தக ரீதியில் படம் வெற்றி பெறாது என்று சொன்னார்கள். நல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான். படம் பாரத்துவிட்டு மக்கள் சொல்லும் தீர்ப்பைத்தான் நான் பெரிதாகக் கருதுகிறேன். ஒத்தை செருப்பு படத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்கள் எனக்குத் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, ஐசிஏ  ஃபோரம் நிர்வாகியும் சென்னை சர்வதேச திரைப்பட விழாத் தலைவருமான ஈ.தங்கராஜ் ஆகியோரும் பார்த்திபனை வாழ்த்திப் பேசினார்கள்.

இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, பார்த்திபனுடன் நான் நிறை பேசிக்கொண்டிருப்பேன். போனிலும் நேரிலும் பல விஷயங்களை விவாதிப்பேன். பல படங்களில் நடித்து நிறைய பணம் சம்பாதிப்பார் பார்த்திபன். தரமான படங்களைத் தயாரித்து இயக்குவதன் மூலம், மக்களிடம் பெற்ற பணத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுப்பார். நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற அவரது வேட்கை எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும். அவரது ஒத்தை செருப்பு பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

ஒத்தை செருப்பு படத்தில் பணியாற்றிய இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட இதர தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் சாதனைப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img