spot_img
HomeNewsசெஸ் தினத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பரிசளித்த விஸ்வநாதன் ஆனந்த்

செஸ் தினத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பரிசளித்த விஸ்வநாதன் ஆனந்த்

சென்னை: உலக செஸ் தினத்தன்று தமிழ்நாட்டில் மாநில அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தனது கையெழுத்திட்ட  செஸ் போர்டுகளை அன்பளிப்பாக வழங்கினார் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.

செஸ் விளையாட்டில் தமிழ்நாட்டின் பங்கு

இந்தியாவில் அதிக அளவில் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட, உலக செஸ் போட்டிகளில் பெரிதளவில் பங்குபெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தமிழக கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ் மற்றும் பல தமிழக வீரர்களின் சாதனைகள் இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றன.

கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்

இந்தியாவில் இவர்கள் போன்ற பல சாதனையாளர்களை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிப்பவர் ஐந்து முறை செஸ் உலக சாம்பியனும், மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவருமான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.

உலக செஸ் தினம் 2024

1924 ஆம் ஆண்டு பாரிஸில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக அளவில் கொண்டாடப்படுகிறது.

செஸ் போர்டு அன்பளிப்பு

இதனை கொண்டாடும் விதமாகவும் மாணவர்களிடையே செஸ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், மாநில அளவிலான செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விஸ்வநாதன் ஆனந்த் தனது சொந்த முயற்சியில் செஸ் போர்டுகளை ஆட்டோகிராஃபுடன், அன்பளிப்பாக வழங்கினார்.

வாழ்த்துக் கடிதம்

மேலும், அன்பளிப்புடன் சேர்த்து “இந்த சர்வதேச செஸ் தினத்தில், உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது முடிவற்ற சாத்தியங்கள், கற்றல் மற்றும் சுய-கண்டுபிடிப்பு ஆகியவற்றின் பயணம். நீங்கள் கொண்டாடும் இந்த நாளில், எனது சொந்த பயணத்தின் சில தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்று தொடங்கி, செஸ் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

செஸ்ஸின் முக்கியத்துவம்

செஸ் என்பது விளையாட்டு என்பதைத் தாண்டி அறிவாற்றல், கவனம், சிக்கலைத் தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை மேம்படுத்துகிறது. விஸ்வநாதன் ஆனந்தின் அயராத உழைப்பும், இது போன்ற பல ஈடுபாடுகளும் மாணவர்களுக்கு செஸ் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும். இதன் மூலம் நம் மண்ணில் இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகுவார்கள் என்பது நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img